தமிழர் தாயகத்தைக் கலப்பின மண்டலமாக்க ஒன்றிய அரசு தீவிரம் துணைபோகும் திமுக அரசு – பெ.மணியரசன் கடும் எதிர்ப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஒன்பதாவது தலைமைப் பொதுக்குழுக் கூட்டம், நேற்றும் (02.04.2022) இன்றும் (03.04.2022) – தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில் நடைபெற்றது. செங்கிப்பட்டி – சானூரப்பட்டி ஓவியா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இப்பொதுக்குழுக் கூட்டத்தை பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், பொதுக்குழு உறுப்பினர் இரெ.கருணாநிதி, மகளிர் ஆயம் பே.மேரி ஆகியோர் தலைமை தாங்கி வழி நடத்தினர். பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், பொருளாளர் அ.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை, பூதலூர் ஒன்றியச் செயலாளர் பி.தென்னவன் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பேரியக்கத் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு இருபால் உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பேரியக்கத்தின் புதிய தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவராக பெ.மணியரசன், பொதுச்செயலாளராக கி.வெங்கட்ராமன், பொருளாளராக அ.ஆனந்தன், துணைத் தலைவராக க.முருகன், துணைப் பொதுச்செயலாளராக க.அருணபாரதி ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1

“தமிழ்நாட்டு தொழில் – வணிகம் – வேலை தமிழர்களுக்கே!கோவையில் தமிழர் பெருந்திரள் போராட்டம் நடத்துவோம்!”

தமிழ்நாட்டின் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு ஆகியவை இந்திய அரசின் ஆதரவோடு வெளி மாநிலத்தவரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது. தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதோடு, தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாகத் தமிழ்நாடு நீடிப்பதற்கு அச்சுறுத்தலாக இந்த ஆக்கிரமிப்பு மாறி வருகிறது.

தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றுவழித் தாயகமாக தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்டு, 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் – ”தமிழ்நாடு” ஒரு மாநிலமாக அமைக்கப்பட்டது. தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர்களின் வாழ்வுரிமை ஆகியவற்றை உறுதி செய்வதற்காகவே, மொழிவழி தேசிய இன மாநிலங்கள் உருவாக்கப்படுவதாக மாநிலச் சீரமைப்புச் சட்டத்தின் நோக்கவுரையில் தெளிவுபடுத்தப்பட்டது.

ஆனால், அந்த நோக்கத்தைச் சீர்குலைத்து தமிழர் தாயகத்தையே கலப்பின மண்டலமாக மாற்றும் முயற்சியில் திட்டமிட்ட முறையில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும், இப்போதைய தி.மு.க. ஆட்சியிலும் தொழில் வளர்ச்சி என்ற பெயரால் வெளிநாட்டு – வெளி மாநில முதலாளிகளைத் தமிழ்நாட்டில் திணிப்பதையே சாதனையாகக் கூறி வருகிறது. “மூலதனத்தை ஈர்ப்பதில், முதலிடத்தில் தமிழ்நாடு” என்ற முழக்கத்தின்கீழ் மு.க.ஸ்டாலின் ஆட்சி, இத்திசையில் வேகமாகச் செயல்படுகிறது.

தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ்நாட்டு வேலை வாய்ப்பில் 75 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்போவதாகத் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி வழங்கிய தி.மு.க. அரசு, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், வசதியும் வழங்கப்படும் என்று சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

வெளிநாட்டினர் – வெளி மாநிலத்தவர் வேட்டைக்காடாக தமிழ்நாடு மாற்றப்படும்போது, இந்த மண்ணின் நீர் – நில வளங்கள் சூறையாடப்படுகின்றன. இந்தியாவின் கழிவுக் கூடமாக தமிழ்நாடு மாற்றப்படுகிறது.

இவ்வளவு சீர்கேடுகளோடு தமிழ்நாட்டில் திணிக்கப்படும் தொழில் வீக்கம், தமிழர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் இல்லை! உருவாகிற புதிய வேலை வாய்ப்புகளில் மிகப்பெரும்பாலும் வெளி மாநிலத்தவரே அமர்த்தப்படுகின்றனர். தமிழ்நாட்டு இளையோர் வாயில் காப்போராகவும், எடுபிடி வேலைகளிலும் வெளியில் நிறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு குவியும் வெளியார்களுக்கு இந்திய – தமிழ்நாடு அரசுகள் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை கொடுத்து அவர்களை இங்கேயே நிலைப்படுத்துகின்றன. இதனால், தமிழ்நாட்டின் இனச் சமநிலையும், தமிழ்நாட்டு அரசியலும் வெளியாரின் குறுக்கீட்டால் சீர்குலைகிறது. இவ்வாறு குவியும் வெளியார் மிகப்பெரும்பாலோர் பாரதிய சனதா கட்சியின் வாக்காளர்களாக அமைகிறார்கள்.

இந்தப் போக்கு தொழில் நகரங்களில் தொடங்கி இன்று கிராமங்கள் வரை விரிந்துள்ளது.

தமிழர்களின் வாழ்வுரிமையையும், தமிழர் தாயகத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், தமிழ்நாட்டு சிறுதொழில் முனைவோரையும், தமிழ்நாட்டு உழைப்பாளிகளையும் ஊக்கப்படுத்தும் கொள்கைத் திசைவழிக்குத் தமிழ்நாடு அரசு மாற வேண்டும்.

தமிழ்நாட்டு தொழில் – வணிக வாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். வெளி மாநிலத்தவர்களுக்கு உரிமங்கள் வழங்குவதைக் கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டு அரசு வேலை வாய்ப்பில் 100 விழுக்காடும், தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காட்டு வேலை வாய்ப்புகளும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும். இவ்வாறு தொழில், வணிகம், வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கும் தனிச்சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும்!

வெளி மாநிலத்தவருக்கு குடும்ப அட்டை – வாக்காளர் அட்டை வழங்கக்கூடாது.

நாகாலாந்து – அருணாச்சலப்பிரதேசம் – மணிப்பூர் – மிசோரம் ஆகிய மாநிலங்களில் இருப்பதுபோல், இந்திய அரசு – தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவருக்கு வரம்பு கட்டும் வகையில் உள் நுழைவு அனுமதிச் சட்டம் கொண்டு வர வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து போராடி வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் அடுத்தகட்டமாக, கோவையில் இந்திய அரசு அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது!

தீர்மானம் – 2

மேக்கேதாட்டைத் தடுக்க – தமிழ்நாடு தழுவிய மக்கள் திரள் போராட்டங்களை முதலமைச்சர் முன்மொழிய வேண்டும்!

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது. இந்நிலையில், அதற்கு ஆதரவாக இந்திய அரசும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் சௌமித்திர குமார் ஹல்தரும் தொடர்ந்து செயல்பட்டு வரும் போக்குக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

காவிரித் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் என யார் ஆணையிட்டாலும், தொடர்ந்து கன்னட இனவெறியுடன் செயல்பட்டு தமிழ்நாட்டுக்கு உரிமையான காவிரி நீரை கர்நாடகம் மறுத்து வருகிறது. இந்நிலையில், மேக்கேதாட்டு அணையைக் கட்டி, வெள்ளக் காலங்களில் தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீரையும் தடுக்கத் துடிக்கிறது கர்நாடகம்! எனவே, மேக்கேதாட்டு அணைத் திட்டத்தைத் தொடக்கத்திலிருந்தே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. அத்திட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கும் தொடுத்துள்ளது.

இவையெல்லாம் நன்கு தெரிந்தும், தமிழ்நாட்டிற்கெதிராக இனவெறியோடு செயல்பட்டு வரும் எஸ்.கே. ஹல்தர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராகத் தொடர்வது ஆபத்தானது. எனவே, ஹல்தரை உடனடியாக காவிரி ஆணையத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். காவிரி ஆணையத்தின் பொருள் நிரலில் மேக்கேத்தாட்டு அணை வைக்கப்படுவதாக இருந்தால் தமிழ்நாடு அரசு அக்கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும்.

சட்டவிரோதமான மேக்கேத்தாட்டு அணைக்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், இச்சிக்கலின் அவசரத்தைப் புரிந்து கொண்டு, தமிழ்நாட்டு முதலமைச்சர் சட்ட நடவடிக்கையையும் அரசியல் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும்.

கர்நாடக அரசின் சட்ட மீறலையும் இந்திய அரசின் இனப்பாகுபாட்டு அணுகுமுறையையும் கண்டித்து, தமிழ்நாட்டு மக்கள் பேரெழுச்சியோடு பங்குபெறும் வகையில் “காவிரிக் காப்பு நாள்” என்று ஒருநாளை அறிவித்து, மக்கள் போராட்டத்தை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் விரைந்து அனைத்துக் கட்சியினரைக் கலந்து பேசி அறிவிக்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்குரிய முன்முயற்சி எடுத்து, அனைத்துக் கட்சிகள், அனைத்து உழவர் அமைப்புகள், நுகர்வோர் அமைப்புகள் ஆகியவற்றைக் கூட்டி, இந்தப் போராட்டத்திற்கான நாளை விரைவாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஒன்பதாவது சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 3

ஆளுநர் இரவியைத் திரும்பப் பெற வேண்டும்!ஆளுநர் பதவியையே நீக்க வேண்டும்!

தமிழ்நாட்டு ஆளுநராக ஆர்.என். இரவி அமர்த்தப்பட்டதற்குப் பிறகு, தமிழ்நாடு அரசின் செயல்பாட்டில் ஆளுநரின் குறுக்கீடும், தடையும் அதிகரித்துள்ளன. ஏழு தமிழர் விடுதலை குறித்த கோப்பை அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161க்கு முரணான வகையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததும், நீட் விலக்கு சட்டம் தொடர்பான கோப்பின் மீது இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் மாளிகையிலேயே வைத்திருப்பதும் – இதற்கு சான்றுகளாகும்!

இதுபோதாதென்று, ஆளுநர் மாளிகையையே ஆர்.எஸ்.எஸ். மாளிகையாக மாற்றி வருகிறார் ஆர்.என். இரவி! பாபர் மசூதி இடிப்பு வழக்கில், இராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடிய வழக்குரைஞர் பராசரனை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து, பாராட்டு விழா நடத்தினார். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களில் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு எதிராகவும், சமற்கிருதத் திணிப்பை வலியுறுத்தியும் ஒற்றை ஆட்சியை முன்மொழிந்தும் பேசி வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ்.சின் ஆரியத்துவ பரப்புரை மன்றமாகவே ஆளுநர் மாளிகை ஆர்.என். இரவி மாற்றிவிட்டார்.

இவ்வாறு தமிழினத்திற்கெதிராகவும், தமிழ்நாடு அரசின் நிர்வாகச் செயல்பாட்டின் குறுக்கீடாகவும் செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர்.என்.இரவியை இந்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

பெயரளவுக்கு உள்ள கூட்டாட்சியில் கூட இந்திய அரசமைப்புச் சட்டத்திலுள்ள ஆளுநர் பதவி ஏற்கப்பட முடியாதது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சியை அதிகாரமற்றதாக தாழ்த்தும் ஆளுநர் பதவி தமிழினம் உள்ளிட்ட தேசிய இனங்களை இழிவுபடுத்தும் ஏற்பாடாகும். எனவே, இந்திய அரசு ஆளுநர் என்ற பதவியையே இரத்து செய்து, அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது!

தீர்மானம் – 4

பெட்ரோல் – டீசல் – எரிவளி விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்!

கடந்த பத்து நாட்களாக முன் எப்போதையும்விட கடும் வேகத்தில் பெட்ரோல் – டீசல் – எரிவளி ஆகியவற்றின் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தளவில், இரசிய – உக்ரைன் போரை இதற்குக் காரணமாகக் காட்ட முடியாது. ஏனெனில், அமெரிக்கா விதித்திருக்கிற பொருளாதாரத் தடையிலிருந்து மீள்வதற்கான ஒரு வழியாக இரசியா இந்தியாவிற்கு மலிவு விலையில் பெட்ரோலியம் வழங்க முன் வந்திருக்கிறது.

இச்சூழலில், ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடியும் வரையில் காத்திருந்து, இப்போது நாள்தோறும் பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்துவதிலிருந்தே இது அடிப்படையில் பன்னாட்டு எரி எண்ணெய் விலை நிலவரத்தைப் பொறுத்து எழுந்த சிக்கல் அல்ல என்பது புலனாகும்.

குறைந்தது இந்திய அரசு பெட்ரோல் – டீசல் – எரிவளியின் மீது விதிக்கும் வரியைக் குறைத்துக் கொண்டாலேகூட, இந்த வரி உயர்வை தவிர்க்க முடியும்.

பெரு முதலாளிகளுக்கு நேரடி வரியில் பல இலட்சம் கோடி ரூபாய் சலுகை வழங்கி வரும் இந்திய அரசு, பெட்ரோலியப் பொருள்களின் மீது கிடைக்கக்கூடிய கொழுத்த வரி வருமானத்தை தனது வருவாயின் முதன்மை வழியாகக் கொண்டுள்ளது. பெட்ரோல் – டீசல் விலை உயர்வு அனைத்துப் பொருட்களின் தாறுமாறான விலை உயர்வுக்கு வழி ஏற்படுத்துகிறது. ஏழை எளிய மக்களும் சிறு உற்பத்தியாளர்களும் வணிகர்களும் இந்த விலை உயர்வில் சிக்கி விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைக்கும் பெட்ரோலியத்தை – தமிழ்நாட்டிற்கு முதன்மையாக வழங்கி, பெட்ரோல் – டீசல் – எரிவளி விலையைத் தமிழ்நாட்டிற்கு சலுகை விலையில் வழங்குவதுதான் நீதியானது.

தமிழ்நாடு அரசு, இவ்வாறான தெளிவான கோரிக்கையை இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு விதிக்கும் பெட்ரோல் – டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை மேலும் குறைக்க முன்வர வேண்டும்.

தீர்மானம் – 5

அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் – அன்னைத் தமிழில் அர்ச்சனை உண்மையாக உறுதியாக செயல்படுத்த வேண்டும்!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் என்ற திட்டத்தின் கீழ் ஒரு சிலருக்கே அர்ச்சகர் பணி வழங்கப்பட்டது. ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சி முடித்து, பெரும்பாலோர் காத்திருக்கிறார்கள்.

பணியில் அமர்த்தப்பட்ட அர்ச்சகர்களும் நடைமுறையில் அர்ச்சகர் பணியிலிருந்து சமையல்காரர் போன்ற வேறு பணிகளுக்கு ஏற்கெனவே திருக்கோயில்களில் உள்ள பிராமண அர்ச்சகர்களால் விரட்டப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி பரவலாக வருகிறது.

தமிழ்நாடு அரசும், அர்ச்சகர் அமர்த்தல் ஆணையை சிலருக்கு வழங்கியதோடு, தன் கடமை முடிந்ததாகப் பாராமுகமாகவே இருப்பதும் கண்டிக்கத்தக்கது.

இன்னொருபுறம், “அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்று பெரும் விளம்பரத்தோடு அறிவிக்கப்பட்ட திட்டம் வெறும் பெயரளவிலேயே இருக்கிறது. பெரும்பாலான கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறவே இல்லை.

ஏற்கெனவே கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, இவ்வாறு தமிழில் அர்ச்சனைத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, பணியில் இருந்த அனைத்து அர்ச்சகர்களும் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டுமென்று ஆணை இருந்தது. ஆனால், மு.க. ஸ்டாலின் ஆட்சியில் தமிழில் அர்ச்சனை செய்வோர் என ஓரிருவரை அமர்த்தி, அவர்களது கைப்பேசி எண்களை பலகைகளில் பொறித்து வைப்பது என அறிவித்தார்கள். இது தமிழ் அர்ச்சனை செயலுக்கு வருவதை தடுத்துவிட்டது.

இவ்வாறு அன்னைத் தமிழில் அர்ச்சனை என்பது வெற்றுவேட்டு அறிவிப்பாக இருக்கிறது.

தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் அறநிலையத்துறை அமைச்சரை சந்தித்து பணியில் உள்ள அனைத்து அர்ச்சகர்களும் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். உடனடியாக இதனை செயல்படுத்த வேண்டுமென அமைச்சர் ஒத்துக் கொண்டார். இதுவரை ஒரு அசைவும் இல்லை!

எனவே, பணியில் உள்ள அனைத்து அர்ச்சகர்களும் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும், அர்ச்சனை என்று வருபவர்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்வதை இயல்பானதாகவும், சமற்கிருதத்தில் கோருவோருக்கு மட்டுமே சமற்கிருதத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு உடனடியாக ஆணை வெளியிட வேண்டும்!

பயிற்சி முடித்து காத்திருக்கிற அனைத்து அர்ச்சகர் மாணவர்க்கும் பணி வழங்கி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை பொருள் பொதிந்த வகையில் செயல்படுத்த வேண்டுமென்றும் ஏற்கெனவே பணி வழங்கப்பட்டுள்ள பிராமணரல்லாத அர்ச்சகர்களை அர்ச்சனைப் பணியிலேயே உறுதி செய்ய வேண்டுமென்றும் இச்சிறப்புப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 6

புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டைப் போலவே தமிழரின் இன்னொரு தாயகமாக உள்ள புதுச்சேரி, இந்திய அரசின் நேரடி ஒன்றிய ஆட்சிப் பகுதியாக – அரசியல் அதிகாரமற்ற நிலையில் உள்ளது. தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், அமைச்சர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை விட, இந்திய அரசின் துணைநிலை ஆளுநருக்கே அனைத்து அதிகாரங்களும் என்ற நிலை நீடிக்கிறது.

அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்வது, பேரிடர்களின் போது மக்களுக்கு துயர் துடைப்பு பொருட்கள் – நிதி வழங்குவது போன்ற அனைத்துமே புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை முடிவெடுத்தாலும்கூட, துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

தனி மாநிலத் தகுதி பெறாத நிலையில், புதுச்சேரியிலிருந்து வசூலிக்கப்படும் ஒன்றிய அரசின் வரிகளில் புதுச்சேரிக்கு முறையான பங்கு அளிக்கப்படுவதில்லை. தனி கல்வி வாரியமோ, தொல்லியல் துறை போன்ற அடிப்படையான துறைகளோ இல்லை! தமிழர்களின் அரசியல் முடிவுகள் எதற்கும் அரசு நிர்வாகம் கட்டுப்படாது என்ற அவலநிலை உள்ளது. தமிழ்நாட்டு ஆளுருடன் போட்டிபோட்டுக் கொண்டு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பா.ச.க. கட்சித் தலைவர் செயல்பாடுபோல் நடந்து கொண்டிருக்கிறது. பா.ச.க.வின் கூட்டணிக் கட்சியாக உள்ள என்.ஆர். காங்கிரசு கூட எரிச்சலடையும் வகையில் இது எல்லை மீறிச் செல்கிறது.

இந்நிலையில், தற்போதுள்ள புதுச்சேரி ஒன்றிய அரசின் சிறுசிறு உரிமைகளைக் கூட பறிக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபடத் தொடங்கிவிட்டது. புதுச்சேரி மக்கள், அரசியல் கட்சிகள் என அனைவரும் எதிர்க்கும் நிலையில் மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை இந்திய அரசு ஒருதலைச்சார்பாக அறிவிக்கிறது.

எனவே, புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வழங்கி, தமிழ் மக்களின் அரசியல் உரிமையை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இச்சிறப்புப் பொதுக்குழு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 7

தமிழ்நாட்டுக்கு வரும் ஈழ எதிலியருக்கு இந்தியக் குடியுரிமை பெறப் போராட வேண்டும்!

சிங்கள இனவெறியுடன் தொடர்ந்து செயல்பட்டு, உள்நாட்டுப் பொருளியலை திவாலாக்கிக் கொண்டுள்ள இலங்கையில் தற்போது மக்கள் போராட்டம் தீவிரமாக வெடித்து, அவற்றை அடக்க அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வை நடத்த முடியாமல், அங்கிருந்து தப்பி, தமிழ் மக்கள் தமிழ்நாட்டிற்கு ஆபத்தானக் கடல் பயணம் மேற்கொண்டு ஏதிலியராக வந்திறங்குகிறார்கள்.

அவர்களை அரவணைத்து வாழ்வுரிமை வழங்காமல், அவர்களை சட்டவிரோதக் குடியேற்றக் குற்றவாளிகள் போல் இந்திய அரசு நடத்துகிறது. அதை தமிழ்நாடு அரசு வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. கடந்த 23.03.2022 அன்று, தனுஷ்கோடிக்கு, பெண்கள் – குழந்தைகளுடன் அவ்வாறு வந்த 16 ஈழத்தமிழர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்கள். தற்போது, அவர்களுக்கு உணவு அளிப்பதற்குக்கூட இந்தியத் தலைமையமைச்சர் மோடியிடம் மனு கொடுத்து மன்றாடுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

சீனத் தாக்குதலிலிருந்து தப்பிக்க திபெத்திலிருந்து வரும் ஏதிலியரை கண்ணியமாக நடத்தி, அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துத் தரும் அதே இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களை மட்டும் குற்றவாளிகள் போல் நடத்துவது அப்பட்டமான தமிழினப் பாகுபாடாகும். பாக்கித்தான், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து வரும் இந்து ஏதிலியருக்கு குடியுரிமை உள்ளிட்ட வாழ்வுரிமையை வழங்கி வரும் மோடி அரசு, தமிழ்நாட்டுக்கு அடைக்கலம் தேடி வரும் ஈழத்தமிழர்கள் அவர்கள் இந்துக்களாக இருந்தபோதும் குற்றவாளிகளாக நடத்துகிறது. தமிழ்நாடு முதலமைச்சரும் இப்போக்கைக் கண்டிக்காதது வேதனையளிக்கிறது.

எனவே, தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர் ஏதிலியருக்கு ஏதிலியர் தகுதி வழங்கிட இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். இந்திய அரசு, பன்னாட்டு ஏதிலியர் சட்டப்படி ஈழத்தமிழர்களுக்கு வசதிகளை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் தமிழ்நாடு அரசே முன்னின்று போராட வேண்டும்! தமிழ்நாடு அரசு, ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் கண்ணியமான வாழ்வை நடத்த, அவர்களுக்கு வாழ்வுரிமை வழங்க வேண்டும். தனது காவல்துறையை வைத்து, அவர்களைக் கண்காணிப்புக்கு உட்படுத்தி அவர்களை மேலும் சித்திரவதை செய்யும் போக்கில் ஈடுபடக்கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 8

செங்கிப்பட்டி, சானடோரியம் காசநோய் மருத்துவமனையை மாவட்ட அரசு மருத்துவமனையாக மறுகட்டமைப்பு செய்க!

தஞ்சை மாவட்டம் – பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி ஊராட்சி சானடோரியத்தில் 60 ஆண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தி நினைவு காசநோய் மருத்துவமனை கட்டப்பட்டது. அப்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்து காசநோய் மருத்துவம் பார்த்து வந்தனர். அதற்கு அப்போது பலர் சாகுபடி நிலங்களை நன்கொடையாகக் கொடுத்தார்கள். இன்றும் அந்நிலங்கள் இந்த மருத்துவமனைக்குச் சொந்தமாக இருக்கின்றன.

இந்த மருத்துவமனைக்கு இப்பொழுதும் சற்றொப்ப 100 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் சிறப்புக் காசநோய்ப் பிரிவு உருவாக்கப்பட்ட பின், மேற்படி சானடோரியம் முக்கியத்துவம் இழந்து, ஏதோ பேருக்கு உயிரை வைத்துக் கொண்டுள்ளது.

பூதலூர் ஒன்றியம், தஞ்சை ஒன்றியம், கந்தர்வக்கோட்டை போன்ற பல பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குப் பயன்படும் வகையில் மாவட்டப் பொது மருத்துவமனைத் தகுதியில் புதிய மருத்துவமனை கட்டுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சிறப்புப் பொதுக்குழு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 9

புதிய கட்டளை உயர்மட்டக் கால்வாயில் புதிய கிளை வாய்க்கால் வெட்ட வேண்டும்!

காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது பாசன விரிவாக்கத்திற்காக மாயனூர் அருகே, காவிரியில் இருந்து புதிய கட்டளை உயர்மட்டக் கால்வாய் வெட்டப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்குப் புதிய பாசன வசதி செய்யப்பட்டது.

அப்போது, முதலில் போடப்பட்ட கிளைவாய்க்கால் தடம் மாற்றப்பட்டு, இப்போது பாதை வடிவம் அமைக்கப்பட்டது. இதனால் சற்றொப்ப 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறாமல் போய்விட்டது.

இப்பொழுது காவிரியில் மாயனூர் வைப்பாறு புதிய இணைப்புக் கால்வாய் வெட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதிலும் நாங்கள் குறிப்பிடும் மேற்படிப் பகுதி விடுபட்டுள்ளது. இந்தப் பகுதி என்பது புதிய கட்டளை உயர்மட்டக் கால்வாய்ப் பாசனப் பகுதிக்கும் காவிரி – வைப்பாறு இணையும் பாசனப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியாக மேற்படி பகுதி உள்ளது.

இந்தப் பகுதிக்குப் பாசன வசதி கொடுக்க புதிதாக மேற்படி புதிய கட்டளை உயர்மட்டக் கால்வாயில் (ழிரிபிலிசி) திருச்சி மாவட்டம் – பொய்கைக்குடி ஏரியில் இருந்து கிளைக்கால்வாய் வெட்டி – 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி செய்து தருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்க சிறப்புப் பொதுக்குழு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 10

ஆன்லைன் கொள்முதல் முறையைக் கைவிட்டு நேரடி நெல் கொள்முதலை மேற்கொள்ள வேண்டும்!

நெல் கொள்முதலை இணையம் வழியே (ஆன்லைன்) மேற்கொள்ளும்போது, உழவர்களுக்கு அதன்வழியே பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பட்டா சிட்டா போன்ற ஆவணங்களைப் பதிவு செய்வது, உரிமையாளர் குடும்பத்தின் மூத்தவராக இருந்து பட்டா பெயர் மாற்றம் நடக்காத சூழல் போன்ற பலவற்றில் சிக்கி, உழவர்கள் பாடுபட்டு உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு செல்வதில் தடைகள் ஏற்படுகின்றன.

அனைத்தையும் தாண்டி, நெல்லைக் கொண்டு செல்கிறபோது, உழவர்கள் வாழும் கிராமத்திற்கு தொலைவிலுள்ள வேறொரு கொள்முதல் நிலையத்தில்தான் இடமிருக்கிறது என்று சொல்லி அலைக்கழிக்கும் போக்கு நடக்கிறது. இதனால், அரசு அறிவிக்கும் விலையை விட குறைவாகத் தந்தாலும், களத்திலே வந்து கொள்முதல் செய்யும் தனியார் வியாபாரிகளிடம் உழவர்கள் வந்த விலைக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

எனவே, இந்திய அரசு திணித்தாலும் – தமிழ்நாடு அரசு இணையம் வழியே (ஆன்லைனில்) நெல் கொள்முதல் செய்வதைக் கைவிட்டு, நேரடி நெல் கொள்முதலையே மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது!

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Leave a Response