பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் தமிழ்கூர் நல்லுலகும்
எனும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று ஈரோடு பெரியார் மன்றத்தில் சூலை 2 ஆம் தேதி மாலை நடைபெற்றது.
தமிழக மக்கள் முன்னணி நடத்திய இக்கருத்தரங்கில்,பொழிலன், கண.குறிஞ்சி, கி.வே.பொன்னையன், நிலவன்
உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…
.
தீர்மானம் (1)
மிகச்சிறந்த தமிழறிஞரும், தமிழ் நாட்டிற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவருமான பாவலரேறு
பெருஞ்சித்திரனாரின் முழு உருவச் சிலையைத் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் உரிய இடத்தில் நிறுவ வேண்டும் எனவும், அவரது பாடல்களைப் பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும் எனவும், அவரது பெயரால் ஓர் இருக்கையைப் பல்கலைக்கழகத்தில் நிறுவி, ஆண்டுதோறும் அவரது படைப்புகள் குறித்து ஆய்வரங்கு நடத்தி, அந்த ஆய்வரங்கக் கட்டுரைகளைத் தமிழ்நாடு அரசு அச்சிட்டு நூல்களாக வெளியிட வேண்டும் எனவும் இக்கருத்தரங்கு தமிழக அரசைக் கோருகிறது.
தீர்மானம் (2)
தேசியக் கல்விக் கொள்கை 2020 என்கிற பெயரிலும், நீட் நுழைவுத் தேர்வு என்கிற பெயரிலும் தமிழ்நாட்டுக் கல்வி உரிமையை இந்திய அரசு படிப்படியாக நசுக்கித் தேய்த்து அழித்து வருகிறது.
தமிழ்நாட்டு அரசு அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த கல்வி முறையை நெருக்கடி காலத்தில் பிடுங்கிக் கொண்டது மட்டுமன்றி, கேந்திரிய வித்யாலயா, சிபிஎஸ்இ, பன்னாட்டுக் கல்விக்கூடம் என்கிற வகையில் எல்லா அதிகாரங்களையும் கூறு பிரித்துப் பறித்துக் கொண்டிருக்கிற இந்திய அரசின் போக்கைத் தமிழ்நாட்டு மக்கள் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டின் அதிகாரத்திற்கு உட்பட்ட அளவிலேயே கல்விமுறை இருக்க வேண்டும் என்றும், இந்திய அரசு நடத்துகிற நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட வேண்டும் என்றும், தமிழ் மொழி, தமிழ் மக்கள் மற்றும் தமிழ் நாட்டுக்குப் பொருத்தமான தமிழ்நாட்டுத் தேசியக் கல்விமுறையைத் தமிழ்நாடு அரசு எந்த சமரசத்திற்கும் ஆளாகாமல் முழுமைப்படுத்தி நிறைவேற்ற வேண்டும் எனவும், ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை 2020 -ஐத் தமிழ்நாடு அரசு முற்றிலும் ஏற்கக் கூடாது எனவும் இந்த கருத்தரங்கின் வாயிலாக வேண்டுகிறோம்.
தீர்மானம் (3)
ஆலயச் செயல்பாடுகள் அனைத்தும் முழுமையாகத் தமிழில் மட்டுமே நடைபெற வேண்டும் எனவும், அனைத்துச் சாதியினரும் தங்குதடையின்றிப் பூசை செய்யும் முறை வர வேண்டும் எனவும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவரது கொள்கையை நிறைவேற்றும் வண்ணம் தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இக்கருத்தரங்கு வலியுறுத்துகிறது.
தீர்மானம் (4)
ஆளுநர் இரவியின் அதிகார வெறியாட்டம் நாளுக்கு நாள் அத்துமீறிச் சென்று கொண்டே இருக்கிறது. திருவள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை தமிழறிஞர்களை இழிவு படுத்துகிற வகையில் பேசி வருகிறார். தவிரவும், சனநாயக நெறிமுறைகளுக்கு மாறாகத் தமிழக அரசின் அதிகாரங்களுக்குள் தலையிட்டு, தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி வருகிறார். மேலும் அவர் கலந்து கொள்கிற நிகழ்ச்சிகளில் என்னென்ன வண்ணங்களில் பிறர் உடைகள் அணிய வேண்டும், என்னென்ன வண்ணங்களில் உடைகள் அணியக்கூடாது என்றும், என்னென்ன கருத்துகள் பேசப்பட வேண்டும், எவற்றையெல்லாம் பேசக்கூடாது என்றும் கட்டளை இடுகிற வகையில் உச்சபட்ச ஆணவத்தில் எல்லை மீறிச் செல்கிறார். முற்றதிகாரம் கொண்ட தமிழ்நாடு குறித்துக் கனவு கண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இலட்சியத்திற்கு இது முற்றிலும் முரணானதாகும். ‘எனவே தமிழ்நாட்டின் நலன் காக்க ஆளுநர் பொறுப்பையே தூக்கி எறியும் மாபெரும் போராட்டத்தைத் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து தொடங்க வேண்டும் என இக்கருத்தரங்கு அறைகூவல் விடுக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.