திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், புதுடெல்லி மிண்டோ சாலை, டிடியு மார்க்கில் கட்டப்பட்டுள்ள ‘அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை’ நேற்று (02-04-2022) மாலை திறந்து வைத்தார்.
அதன் வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலையை நீர்வளத்துறை அமைச்சரும் தி.மு.கழகத்தின் பொதுச் செயலாளருமான துரைமுருகனும், முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை திமுகழக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் பொருளாளருமான டி.ஆர்.பாலுவும் திறந்து வைத்தனர்.
பின்னர், மு.க.ஸ்டாலின் கழகக் கொடியினை ஏற்றி வைத்து, முரசொலி மாறன் வளாகத்தையும், இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள பேராசிரியர் நூலகத்தை காங்கிரசுக் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் திறந்து வைத்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியின்போது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய “Karunanidhi: A Life” என்ற புத்தகத்தை ‘தி இந்து பப்ளிஷிங் குழுமத்தின் இயக்குநர் என்.ராம் வெளியிட காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தி பெற்றுக் கொண்டார்.
அதேபோல், பொருளாதார ஆய்வறிஞரும் – மாநிலத் திட்டக் குழுவின் துணைத்தலைவருமான ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய “A Dravidian Journey” என்ற புத்தகத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட திமுகழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில், இந்திய தேசிய காங்கிரசுக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், சி.பி.எம். கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, சி.பி.ஐ. கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, காங்கிரசுக் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த அமர் பட்நாயக் எம்.பி., திரிணாமுல் காங்கிரசுக் கட்சி சார்பில் அபரூபா பொத்தர் எம்.பி., மற்றும் மகுவா மொய்த்ரா எம்.பி உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், சிரோமணி அகாலி தளம் சார்பில் ஹர்சிம்ரத் கவுர் பாதல் எம்.பி., காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த சு,திருநாவுக்கரசர் எம்.பி., தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ரவீந்திர குமார் எம்.பி., ராம் மோகன் நாயுடு எம்.பி., ஜெயதேவ கல்லா எம்.பி., சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராம்கோபால் யாதவ் எம்.பி., உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அதோடு, கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள் இ. பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, ஆ.ராசா எம்.பி., கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கழக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி., மக்களவைத் துணைத் தலைவர் கனிமொழி எம்.பி., கழகச் செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தமிழக அரசிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த எ.வ.வேலு, கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் பொன்னாடை அணிவித்தார்.
அதோடு, தமிழகத்தைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். தெற்கின் வரலாற்றை டெல்லிப் பட்டணத்தில் எழுதும் பெருமிதமிகு நிகழ்வாக இந்தத் திறப்பு விழா நடந்தேறியுள்ளது.
இவ்விழாவின் சிறப்பம்சமாக சோனியாகாந்தி குத்துவிளக்கேற்றி வைத்த நிகழ்வு பேசப்படுகிறது.
70 ஆண்டுகால சுதந்திர இந்திய ஒன்றிய வரலாற்றின் உருவான கட்டமைப்புகள் மோடி அரசால் அடித்து நொறுக்கப்பட்டு அதானிக்கும், அம்பானிக்கும் வழங்கப்படுகிறது.அறிவியல் வளர்ச்சி,பண்பாட்டு மாற்றங்கள் நிர்மூலமாக்கப்பட்டு பழைய இந்து மரபுக்கு நாடு திரும்பிக் கொண்டிருக்கிறது. குஜராத் முதல் முசாபர் நகர் வரையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் வென்றவர்கள் அதை நாடு முழுக்க விரிவு படுத்துகிறார்கள்.
பழமைவாதமே இந்து தேசியவாதத்தின் அடிப்படை. இத்தனைக்கு மத்தியிலும், டெல்லி அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில், ஒரு மங்கல நிகழ்வில் அமங்கலமாக இந்து நம்பிக்கைகளில் கருதப்படும் கைம்பெண்ணை முதன் முதலாகக் குத்து விளக்கேற்ற வைப்பதெல்லாம் திராவிட மாடலின் அழுத்தமான அடையாளம் என்று பலரும் பாராட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.