தில்லை தீட்சிதர்களுக்கு ஆதரவாக திமுக அரசு போட்ட 144 தடை உத்தரவு – கி.வெங்கட்ராமன் எதிர்ப்பு

தில்லை தீட்சிதர்களுக்கு ஆதரவான 144 தடை உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என
தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

சிதம்பரம் நடராசர் ஆலயத்தின் சிற்றம்பல மேடையில் நடராசர் திருமுன் பக்தர்கள் தேவாரம் – திருவாசகம் பாடியும், தங்கள் வேண்டுதல்களை முன்வைத்தும் பன்னெடுங்காலமாக வழிபாடு செய்து வந்தனர்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பல்வேறு ஆலயங்களில் நிகழ்ந்ததுபோல், தில்லை நடராசர் ஆலயத்திலும் பக்தர்கள் கூடி வழிபட தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற வரம்பை தமிழ்நாடு அரசு அனைத்துக் கோயில்களிலும் விலக்கிக் கொண்ட பிறகும், தில்லைக் கோயில் தீட்சிதர்கள் அத்தடையை நிரந்தரமாக நீட்டித்து வருகின்றனர்.

இதனைக் கண்டித்தும், வழக்கம்போல் சிவனடியார்களும், பக்தர்களும் சிற்றம்பல மேடையில் ஏறி வழிபட தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்றி நடராசர் ஆலய நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டுமெனக் கோரியும் தீண்டாமைக் குற்றம் உள்ளிட்ட தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் தீட்சிதர்கள் மீது சட்ட நடவடிக்கை கோரியும் எமது தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் 28.02.2022 முதல் 05.03.2022 வரை ஆறு நாட்கள் அணிவகுப்புப் போராட்டம் நடத்தி, அன்றாடம் கைதானோம்.

அமைதியாக நடைபெற்ற இந்த அறவழிப் போராட்டத்தால், சட்டம் ஒழுங்கிற்கோ நடராசர் ஆலய வழிபாட்டிற்கோ எந்த இடையூறும் ஏற்படவில்லை.

இதேபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து, பல்வேறு அரசியல் கட்சியினரும் மக்கள் இயக்கங்களும் பல போராட்டங்களை நடத்தினர். அவையும் எந்த இடையூறையும் ஏற்படுத்த வில்லை.

இதுகுறித்து, சிதம்பரம் கோட்டாட்சியர் அழைத்துப் பேசியபோது, தீட்சிதர்கள் இவ்வாறு தடை செய்வதற்கு உச்ச நீதிமன்ற ஆணை இருப்பதாகவும், அதை விரைவில் எடுத்துக் காட்டுவதாகவும் அவகாசம் கேட்டுச் சென்றனர். அதையொட்டி, 25.03.2022 வரை எந்த அமைப்பினரும் இச்சிக்கல் குறித்து கூட்டங்களோ, போராட்டங்களோ நடத்த வேண்டாம் என்று கோட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

06.01.2014 நாளிட்ட தீர்ப்பில் (CIVIL APPEAL NO.10620 OF 2013) உச்ச நீதிமன்றம் வரம்பற்ற நிர்வாக அதிகாரம் எதையும் தீட்சிதர்களுக்கு வழங்கிவிடவில்லை. மாறாக, அத்தீர்ப்பின் பத்தி 7 மற்றும் பத்தி 17 ஆகியவை அரசமைப்புச் சட்ட உறுப்பு 26-க்கு இணங்க பொது அமைதி – ஒழுங்கு – நலவாழ்வு ஆகியவற்றுக்கு இடையூறு நேராத வண்ணம் தில்லை நடராசர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வாகம் செய்ய வேண்டுமென்றும், அதில் மீறல் ஏற்பட்டதாகக் கருதினால் தமிழ்நாடு அரசு அதில் தலையிட்டு உரிய ஆணை பிறப்பிக்கலாம் என்றும் தெளிவாகக் கூறியுள்ளன.

இந்நிலையில், 24.03.2022 நாளிட்ட செயல்முறை ஆணை வழியாக சிதம்பரம் கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இச்சிக்கல் குறித்து, “இறுதி முடிவெடுக்கும் பொருட்டு சட்ட வல்லுநர்களுடன் தமிழ்நாடு அரசின் சார்பில், ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது” என்று காரணம்கூறி, போராட்டங்கள் – கூட்டங்கள் – ஆலோசனைக் கூட்டங்கள் ஆகியவற்றிற்கு தடை விதித்திருப்பது மிகவும் தவறானது மட்டுமின்றி, மக்களின் இயல்பான சனநாயக உரிமையைத் தட்டிப் பறிப்பதாகும்!

அரசின் பரிசீலனையில் இருக்கும் ஒரு சிக்கல் பற்றி, கட்சிகளோ, மக்கள் இயக்கங்களோ போராட்டம் ஏதும் நடத்தக்கூடாது என்பது எந்த வகையிலும் ஏற்கக்கூடிய காரணம் ஆகாது.

தீண்டாமைக் குற்றத்திற்காக வழக்குப் பதியப்பட்டு, ஏறத்தாழ ஒரு மாதம் ஆகிய நிலையிலும், முதல் தகவல் அறிக்கையிலுள்ள தீட்சிதர்களில் யாரையும் தமிழ்நாடு காவல்துறை கைது செய்யவில்லை. சட்டத்தின் ஆட்சியிலிருந்து தில்லை தீட்சிதர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப் பட்டிருக்கிறதா என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது. ஆனால், மறுபுறம் மக்கள் இயக்கங்களுக்கு எதிராக 144 தடை விதிப்பது அரசின் நடுநிலையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

எனவே, தமிழ்நாடு அரசு சிதம்பரம் கோட்டாட்சியருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கி, இந்த 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென்று தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response