பாசக காங்கிரசு ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தை மதிக்காதா? – பழ.நெடுமாறன் கேள்வி

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்….

தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றின் நீர் வருவதை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் மேகதாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடகம் மேற்கொண்டுவரும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஒன்றிய அரசு அதற்கு அனுமதித் தரக்கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டமன்றப் பேரவையில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

காவிரிப் பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையே சிறிதும் மதிக்காமல் கர்நாடகம் செயல்படுவது அரசியல் சட்டத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் முற்றிலும் மதிக்காத போக்காகும். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டுச் செயலாற்றவேண்டிய அவசியத்தை உணர்ந்திருப்பது காவிரி விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஊட்டியுள்ளது.

காவிரி, பெரியாறு அணை, பாலாறு, ஈழத் தமிழர் பிரச்சனை போன்றவை எந்தக் கட்சிக்கும் உரிய பிரச்சனையல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் பொதுவான பிரச்சனைகளாகும். இதுபோன்ற பிரச்சனைகளிலாவது கட்சி வேறுபாடுகளுக்கப்பால் அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து போராடினாலொழிய இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்காது.

கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் காவிரிப் பிரச்சனையில் தமிழகத்தை வஞ்சிப்பதில் ஒருவரையொருவர் மிஞ்சிச் செயல்படுகிறார்கள். கர்நாடகத்தில் அகில இந்தியக் கட்சிகள்தான் மாறிமாறி ஆட்சியில் இருக்கின்றன. காவிரிப் பிரச்சனை உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும் வரை இக்கட்சிகளின் அகில இந்தியத் தலைமைகள் இதில் தலையிட முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கிய பிறகு கர்நாடகத்தில் உள்ள அகில இந்தியக் கட்சியினர் அத்தீர்ப்பினை மீறிச் செயல்படுவதை அகில இந்தியத் தலைமைகள் வேடிக்கைப் பார்ப்பது தமிழகத்தை வஞ்சிப்பதாகும்.

பா.ச.க., காங்கிரசுக் கட்சிகளின் அகில இந்தியத் தலைமைகள் கர்நாடகத்தில் உள்ள தங்கள் கட்சியினரின் அடாத போக்கினைக் கண்டித்துத் திருத்தவேண்டும். இல்லையென்றால் இந்திய ஒருமைப்பாடு குறித்து அகில இந்தியக் கட்சிகளின் தலைமைகள் பேசுவது கேலிக்கூத்தாவதுடன், அதைத் தகர்த்துவிடும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response