ஆளுநரைப் பதவி நீக்க திமுக கோரிக்கை – பாசகவுக்குக் கடும் நெருக்கடி

கடந்த மே மாதம் திமுக ஆட்சி அமைந்ததும், நீட் விலக்குக் கோரும் சட்ட மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆளுநர் மாளிகைக்குச் சென்று,ஆளுநரைச் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், 142 நாட்களுக்குப் பிறகு பிப்ரவரி 1 ஆம் தேதி நீட் விலக்கு கோரும் மசோதாவை சபாநாயகருக்கே திருப்பி அனுப்பினார்.

ஆளுநரின் இந்தச் செயலுக்குப் பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 8 ஆம் தேதி கூடி, மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இதுவரை தமிழக ஆளுநர் இந்த மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை. 2 ஆவது முறையாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், கண்டிப்பாக அனுப்பியே ஆக வேண்டும். இதனால் அவர் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஆளுநர் முடிவு எடுக்காததைக் கண்டித்து விவாதம் நடத்தக்கோரி மக்களவையில் திமுக சார்பில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மக்களவையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாகக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசிய நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,

தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு 7 மசோதாக்களுக்கு மேல் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.ஆளுநர் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு மசோதாக்களை அனுப்ப வேண்டும்.

அனைத்து மசோதாவையும் கையெழுத்துப் போடாமல் ஆளுநர் வைத்துள்ளார்.காட்டாட்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.அரசு நிர்வாகம் சட்டப்படி நடக்க வேண்டும். கூட்டுறவு சங்கம் தொடர்பான மசோதாவும் 6 மாதமாகக் கிடப்பில் உள்ளது.அந்த மசோதாவையும் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார், சட்டப்படி செயல்படாத ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

ஆளுநர் விவகாரம் மாநில பிரச்சனை எனக்கூறி டி.ஆர்.பாலு தொடர்ந்து பேச சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதனால் ஆவேசம் அடைந்த திமுக உறுப்பினர்கள் சட்டத்தை மதிக்காமல் செயல்படும் தமிழக ஆளுநர் ரவியை பதவி நீக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…..

நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவை குடியரசுத்தலைவருக்கு அனுப்புமாறு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தினார். நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 142 நாட்களுக்குப் பிறகு, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது.

அதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில், இந்த சட்டமுன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டு,குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

2021-2022ஆம் கல்வி ஆண்டு முடிவுக்கு வந்து, 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும் என்று தமிழக ஆளுநரை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

மேலும், இதே போன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமைந்திடும் என தமிழக ஆளுநரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் முதல்வரே நேரில் சந்தித்துப் பேசிய நேரத்தில் தில்லியில் அவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று முழக்கம் எழுப்பி ஆளும் பாசகவுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது திமுக.

Leave a Response