அறநிலையத்துறையின் புதிய அறிவிப்பு – திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்பு

மகா சிவராத்திரி விழாவை மக்கள் விழாவாக மாற்றி அவர்களிடையே மதப்பிரச்சாரம் செய்யும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முயற்சியை விமர்சித்தோம். இப்போது இந்து அறநிலையத்துறையினுடைய ஆணையர் ‘குமரகுருபரன்’ அனைத்து மண்டல இணை இயக்குனர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

அந்த சுற்றறிக்கையில் “மகாசிவராத்திரி கொண்டாட்டத்தை கோவிலுக்குள் மட்டுமே நடத்த வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களின் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்து அவர்களுக்கான கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகளை, குறிப்பாக தமிழில் அந்தந்த கோவிலுக்குள்ளேயே நடத்த வேண்டும் என்று ஆணையிட்டு இருக்கிறார்”.

கோவிலுக்கு வெளியே மக்களைத் திரட்டி ஒரு மாபெரும் மதப் பிரச்சார விழாவாக அரசே நடத்த வேண்டும் என்று அமைச்சர் கூறிய கருத்திற்கு மாறாக இப்போது அறநிலையத்துறையினுடைய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

அறநிலையத்துறையின் இந்த அறிவிப்பை நாம் பாராட்டி வரவேற்கிறோம்.

கோவிலுக்குள்ளே நிகழ்த்தப்படுகின்ற நிகழ்வுகளில் பங்கேற்கின்ற கலைஞர்கள் கூட தமிழ்நாடு அரசு இசைப் பள்ளியில் பயின்ற கலைஞர்களாக இருக்க வேண்டும் என்றும் அதற்குச் செய்யப்படுகின்ற செலவு அந்தந்த கோவில் உடைய நிர்வாக நிதி நிலைமைக்கு ஏற்ப அதற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறநிலையத்துறை ஆணையர் வலியுறுத்தியிருக்கிறார்.

இதன் வழியாக கோவிலுக்கு வெளியே ஒரு பிரம்மாண்டமான மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி இரவு முழுவதும் கண் விழிக்கச் செய்து அவர்களுடைய ஆன்மீக பிரச்சாரம்,ஆன்மீக பட்டிமன்றம் என்ற பெயரில் மத நம்பிக்கைகளை, மத உணர்வுகளை திணிக்கின்ற ஒரு முயற்சியில் ஏற்கனவே அமைச்சர் சேகர்பாபு, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும் செய்து வந்த ஏற்பாடு அரசினுடைய அறநிலையத்துறையின் வேலை அல்ல என்பதை, அறநிலையத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள இந்த உத்தரவு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. ஆணையரின் இந்த அறிவிப்பை நாம் பாராட்டி வரவேற்கிறோம்.

– விடுதலை இராசேந்திரன்

Leave a Response