இந்தி திணிப்பு எனும் கசடுகளை அகற்றுவோம் – சு.வெங்கடேசன்

இந்தி திணிப்புக்கு எதிராக 1937ம் ஆண்டே, போராட்டத்தை பார்த்த மாநிலம் தமிழகம். இதன்பிறகு நீறுபூத்த நெருப்பாக இந்த கனல் தமிழர்கள் மனதில் நிலை கொண்டது.

எப்போதெல்லாம் இந்தி திணிப்பு நடக்கிறதோ அப்போதெல்லாம் அது தீப்பிழம்பாக வெளிப்பட்டது வரலாறு. பிற்காலத்தில் திமுக இந்தி திணிப்புக்கு எதிராக பெரும் போராட்டங்களை முன்னெடுத்தது. 1965ம் ஆண்டு நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு, காவல்துறையை வைத்து ஒடுக்க முற்பட்டபோது பரிபோன உயிர்கள் எண்ணிக்கை மட்டும் 70-ஐத் தாண்டியது.

இந்த போராட்டம், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கே வித்திட்டது. 1967ம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது. அத்தோடு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி கனவு மறைந்தும்போனது. இன்று வரை காங்கிரசால் தமிழகத்தில் எழ முடியாமல் போனதற்கு அப்போது விழுந்த அடியும் காரணம்.

இந்த நிலையில்தான், மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு அவ்வப்போது இந்தி திணிப்பு பிரச்சினை வெடிக்க ஆரம்பித்தது. கல்வியில் இந்தி, ரயில்வே துறையில் இந்தி என, எங்கும் இந்தி எதிலும் இந்தி என்ற கொள்கையால், தேச ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்பது பாஜக தரப்பினர் பதிலாக இருந்தால், ஒற்றுமையை குலைக்கத்தான் இது பயன்படும் என்பது எதிர்க்கட்சியினர் விமர்சனமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில்தான், எம்.பி. சு.வெங்கடேசன் ஒரு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

‘ஒன்றிய அரசின் NACO திட்டங்களின் கீழ் இரத்த வங்கி வாகனம் பராமரிப்பு பணிக்காக ஹைதராபாத் அனுப்பப்படுகிறது. பராமரிப்பு முடிந்து வரும் போது தமிழ் எழுத்துக்கள் இந்தியாக மாற்றப்பட்டு வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு, பராமரிப்பு முடிந்து ஹிந்தி எழுதப்பட்டு வந்த வாகனத்தில் மீண்டும் தமிழ் எழுதப்பட்டது. இந்தி திணிப்பு எனும் கசடுகளை அகற்ற தொடர்ந்து பராமரிப்பு பணியினை மேற்கொள்வோம்.’ இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

Leave a Response