ஒமைக்ரானுக்கு சிகிச்சையளிக்கும் தில்லி மருத்துவர்கள் கருத்து – மக்கள் நிம்மதி

கர்நாடகத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி 2 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த 23 நாளில் நாட்டின் 17 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒமைக்ரான் வைரஸ் பரவி விட்டது. பல நூறு பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.

தலைநகர் தில்லி, ஒமைக்ரான் பாதிப்பில் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளானவர்கள், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.

அவர்களுக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை பற்றி மூத்த மருத்துவர் ஒருவர் கூறியதாவது…..

தில்லி விமானநிலையம் வந்திறங்குகிற பயணிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர். அவர்களில் பெரும்பாலானவரகள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். நான்கில் மூன்று பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்தான்.

ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகிறவர்களில் 90 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் அறிகுறியில்லாதவர்கள். எஞ்சியவர்கள் தொண்டை வலி, இலேசான காய்ச்சல், உடல்வலி ஆகியவற்றால் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் மற்றும் காய்ச்சல் சிகிச்சைக்கான பாரசிட்டமால் மாத்திரைகளைத் தருகிறோம். அவர்களுக்கு வேறு எந்த மருந்துகளும் தர வேண்டிய தேவை ஏற்படும் என்று நாங்கள் கருதவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை மருத்துவ அதிகாரி ரிது சக்சேனா கூறுகையில்,

நாங்கள் இதுவரை 40 பேரை அனுமதித்துள்ளோம். 2 பேருக்கு மட்டுமே தொண்டை வலி, இலேசான காய்ச்சல், உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கு பாரசிட்டமால், ஆன்டிபயாடடிக் மருந்துகள் கொடுத்தோம். அறிகுறிகள் இல்லாத மற்ற நோயாளிகளுக்கு பல்வேறு வைட்டமின் மாத்திரைகளையே கொடுத்தோம் என்றார்.

ஒமைக்ரான் பற்றி மக்கள் பயந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் கருத்து மக்கள் அச்சத்தைப் போக்கும் வண்ணம் உள்ளது.

Leave a Response