எந்தக் கோயிலிலும் தமிழில் அர்ச்சனை நடக்கவில்லை – உடனே சரி செய்ய பெ.மணியரசன் கோரிக்கை

தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் இன்று (24.12.2021) திருச்சி இரவி சிற்றரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் சித்தர் மூங்கிலடியார் (பதிணென் சித்தர் பீடம்), தேனி மாவட்டம் – குச்சனூர் வடகுரு மடாதிபதி அருட்திரு. குச்சனூர் கிழார், சேலம் – சத்தியபாமா அறக்கட்டளை நிறுவனர் சிம்மம் சத்தியபாமா அம்மையார், தெய்வத்தமிழ்க் கூடல் இறைநெறி இமயவன், திருவல்லிப் புத்தூர் சைவத்தமிழ் வழிபாட்டு மன்றம் மோகனசுந்தரம் அடிகளார், சென்னை சிவனடியார் சிவ.வடிவேலன், வள்ளலார் பணியகம் செங்கிப்பட்டி சுந்தரராசன், வத்தலகுண்டு பொன்னுசாமி அடிகளார், ஆசீவக சமய நிறுவனர் சுடரொளி, கடலூர் மாவட்ட வள்ளலார் பணியக ஒருங்கிணைப்பாளர் முனைவர் வே.சுப்பிரமணிய சிவா, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், தமிழின மொழி விடுதலை இயக்கம் இரமேசு, வழக்கறிஞர் கரூர் தமிழ் இராசேந்திரன், விராலிமலை வே.பூ.இராமராசு, புதுச்சேரி வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

வரும் 2022 சனவரி 2 அன்று தொடங்கி சனவரி 9 வரை – “தமிழ் வழிபாட்டு வாரம்” கடைபிடித்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிளிலும் உள்ள திருக்கோயில்களில் தமிழில் கருவறை அர்ச்சனை மற்றும் வழிபாடு நடத்த தமிழ் மக்களைக் கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்லவும், தமிழில் அர்ச்சனை செய்ய மறுப்போர் மீது இந்து சமய அறநிலையத்துறையில் உடனடியாகப் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவும் விரிவான மக்கள் இயக்கத்தை நடத்துவதென ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1 :

தமிழ் அர்ச்சனை “சாதனை” விளம்பரமாகத் தேங்கிவிட்டது!அனைத்து அர்ச்சகர்களும் தமிழ் அர்ச்சனை செய்ய வேண்டும்!

இந்து சமய அறநிலையத்துறையில் இணைக்கப்பட்டுள்ள திருக்கோயில்களில் கருவறைப் பூசைகளைத் தமிழ் மந்திரங்கள் சொல்லி நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆணையிட்டு, அந்நிகழ்வை சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் 5.08.2021 அன்று அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அதன்பிறகு மேலும் பல கோயில்களில் தமிழ்வழிபாட்டைத் தொடங்கி வைத்தார்கள்.

சமற்கிருதத்திலும் தமிழிலும் கருவறைப் பூசை நடக்கும் என்பதே இந்து சமய அறநிலையத் துறையின் நிலைபாடு!
ஆனால், அத்தொடக்க நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, தொடர்ச்சியாக மயிலை கபாலீசுவரர் கோயில் உட்பட எந்தக் கோயிலிலும் தமிழ் அர்ச்சனை நடப்பதாகத் தெரியவில்லை.

கடந்த 13.12.2021 திங்கட்கிழமை தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு வழிபடச் சென்ற தேனி மாவட்டம் – குச்சனூர் வடகுரு இராசயோக பீடத்தின் ஆதினகர்த்தர் அருள்திரு.குச்சனூர் கிழார் அவர்களும், சைவத் திருமுறை வித்தகர் திருவில்லிபுத்தூர் அருள்திரு.மோகனசுந்தரம் அடிகளார் அவர்களும் தமிழ்வழியில் அர்ச்சனை செய்யுமாறு கருவறையில் இருந்த அர்ச்சகர்களைக் கேட்டுள்ளார்கள். அப்போது அங்கிருந்த அர்ச்சகர்கள், “எங்களுக்குத் தமிழ் அர்ச்சனை தெரியாது, சமற்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்யத் தெரியும்; கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தட்டியில், தமிழில் அர்ச்சனை செய்வோர் கைப்பேசி எண்கள் இருக்கின்றன. தொலைபேசியில் அவர்களைத் தொடர்பு கொண்டு அழைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி, தமிழில் அர்ச்சனை செய்ய மறுத்து விட்டார்கள். வழிபடுவதற்கு வரிசையில் நின்ற பலரும் இந்த உரையாடலைக் கேட்டிருக்கிறார்கள்.

கபாலீசுவரர் கோயிலில் தமிழ் அர்ச்சனையைத் தொடங்கி வைத்த அறநிலையத்துறை அமைச்சர் அப்போது செய்தியாளர்களிடம், தமிழில் அர்ச்சனை செய்வோர் பெயரும், அவர்களின் கைப்பேசி எண்ணும் விளம்பரப் பலகையில் வைக்கப்படும், தமிழ் அர்ச்சனை விரும்புவோர் பேசி அழைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார்.

அப்போதே, தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், “அந்த விளம்பரப் பலகை ஏற்பாடு தமிழ் அர்ச்சனைக்குப் பயன்படாது. வேண்டுதல்களோடு வழிபட வருபவர்கள் விளம்பரப் பலகையைப் பார்த்து, தொலைபேசி செய்து அழைக்கும் அளவுக்கு முயலமாட்டார்கள். அவ்வாறு அழைத்தாலும் – அந்தத் தமிழ் அர்ச்சகர் வரும் நிலையில் இருப்பார் என்பதற்கும் உறுதி இல்லை. எனவே, இப்போது சமற்கிருதத்தில் அர்ச்சனை செய்பவர்களுக்குத் தமிழ் மந்திரப் பயிற்சி கொடுத்து, அவர்களே சமற்கிருதத்திலும் தமிழிலும் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

தமிழில் அர்ச்சனை செய்ய, நிரந்தரமற்ற தனிநபர்கள் என்ற ஏற்பாடு, தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் மட்டுமல்ல, கபாலீசுவரர் கோயில் உட்பட எந்தக் கோயிலிலும் செயல்படுத்தப்படவில்லை என்றே தெரிகிறது.

தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் அதன் செயற்குழு உறுப்பினர்களும், திருச்செந்தூர்ப் பகுதியில் உள்ள பல குடும்பத்தினரும் ஆண்கள் – பெண்கள் – குழந்தைகள் என நாங்கள் சற்றொப்ப 50 பேர், 25.08.2021 அன்று திருச்செந்தூர் செந்தில்வேலன் திருக்கோயிலில் தமிழ் அர்ச்சனை செய்ய முன்கூட்டியே அதிகாரிகளுக்குத் தெரிவித்து விட்டுச் சென்றோம். அன்றுதான் அங்கு தமிழ் அர்ச்சனை அறநிலையத்துறையால் தொடங்கப்பட்டது. தமிழில் அர்ச்சனை செய்து தந்தனர். ஆனால், அங்கும் இப்போது நடைமுறையில் தமிழ் அர்ச்சனை செயல்படுவதில்லை என்கிறார்கள்.

தமிழ் அர்ச்சனை என்பது வெறும் சாதனை விளம்பரமாக இருக்கக் கூடாது என்பதைத் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

1. எந்த மொழி அர்ச்சனை என்று கேட்காமல் அர்ச்சனை செய்ய வருவோர்க்குத் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனை செய்ய அரசு ஆணையிட வேண்டும். கூடுதலாகத் தமிழில் அர்ச்சனை செய்யத் தெரிந்த – பயிற்சி பெற்ற – தகுதி உள்ளவர்களை அர்ச்சகர்களாக அமர்த்த வேண்டும்.

அதற்கு வசதியாக இப்போது அர்ச்சகர்களாக உள்ளவர்களுக்கத் தமிழ் அர்ச்சனைக்கான சிறப்புப் பயிற்சியை உடனடியாகத் தர வேண்டும்.

விளம்பரப்பலகையில் அர்ச்சகரின் கைப்பேசி எண்ணை அறிந்து அவரைப் பேசி அழைக்கும் முறையை அரசு கைவிட வேண்டும்.

2. சமற்கிருதத்தில் அர்ச்சனை கோருவோர்க்கு மட்டுமே சமற்கிருதத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட வேண்டும்.

3. திருக்கோயில் வழிபாடுகளில் எந்தெந்த தமிழ் மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்பது குறித்து அரசுக்கு அறிவுறுத்தல் வழங்க, நடைமுறையில் தமிழ் வழிபாட்டுச் சடங்குகளை மேற்கொண்டு வரும் தெய்வத் தமிழ்ப் பேரவை-யிலுள்ள ஆன்மிகச் சான்றோர் பெருமக்கள் அணியமாக உள்ளனர். அரசு இதனைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழ் வழிபாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

4. கருவறை பூசை முதற்கொண்டு அனைத்து வழிபாட்டுச் சடங்குகளையும் மேற் கொள்ள பெண்களுக்கு முறையான பயிற்சி வழங்கி, பணியமர்த்தம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்வழி அர்ச்சனைச் செயல்திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, தமிழ் மந்திர அர்ச்சனையை நடைமுறை சாத்தியம் உள்ளதாக ஆக்க வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப் பேரவை கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் 2 :

அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் ஆணையைச் செயல்படுத்துக!மாவட்டத்திற்கொரு அர்ச்சகர் பள்ளி தொடங்குக!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணை ஏட்டளவில்தான் இருக்கிறது. நடைமுறையில் கருதத்தக்க அளவில்கூட செயல்படுத்தப்படவில்லை.

அண்மையில் தமிழ்நாடு அரசு பிராமணரல்லாத தகுதியுள்ள அர்ச்சகர்கள் சிலரை சில திருக்கோயில்களில் அமர்த்தியது. ஆனால், அவர்கள் அந்தந்தக் கோயிலிலும் அர்ச்சகர் பணியில் இல்லை. கோயிலுக்குரிய வேறு பணிகள் செய்ய வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அவலத்தைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நீக்க வேண்டும்.

1. ஏற்கெனவே தமிழ்நாடு அரசால் அர்ச்சகர் பயிற்சி கொடுக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்ட அனைவரையும் உடனடியாக அர்ச்சகர்களாக அமர்த்தவேண்டும். அகவை (வயது) வரம்பு 35 என்று வைத்திருப்பதை நீக்க வேண்டும். பயிற்சி கொடுத்து, சான்றிதழ் வழங்கி அர்ச்சகர் பணி கொடுக்காதது அரசின் குறைபாடே தவிர அவர்களின் குறைபாடு அன்று.

எனவே, அகவை வரம்பு 35 என்பதை நீக்கி பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரையும் உடனடியாக அர்ச்சகர் பணியில் அமர்த்த வேண்டும்.

இவ்வாறு ஏற்கெனவே பயிற்சி பெற்றோருக்கு பணியமர்த்தல் வழங்கினால் தான், புதிதாக நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிகளில் மாணவர்கள் நம்பிக்கையுடன் சேர்வார்கள் என்பதால், தமிழ்நாடு அரசு உடனே பணி அமர்த்த வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. தமிழ் அர்ச்சனை செய்ய தகுதியுள்ளோர் நிறையத் தேவைப்படுகிறார்கள். எனவே முதல்கட்டமாக மாவட்டத்திற்கொரு தமிழ் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியைத் தமிழ்நாடு அரசு தொடங்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதற்கான ஏற்பாடுகளைப் போர்க்கால அவசரத்துடன் செய்யுமாறு கனிவுடன் தெய்வத் தமிழ்ப் பேரவை கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் 3 :

இந்து சமய அறநிலையத்துறையை மேலும் செம்மைப்படுத்த உயர் நீதிமன்றநீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்துப் பரிந்துரை பெறுக!

தமிழ்நாட்டில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்து சமய அறநிலையத்துறை முதல் முதலாக பழைய சென்னை மாகாணத்தில் 1927 ஆம் ஆண்டு அப்போதைய சுயேச்சை அமைச்சரவையின் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களால் நிறுவப்பட்டது. பின்னர் காமராசர் ஆட்சியில் இச்சட்டம் 1959ஆம் ஆண்டு செழுமைப்படுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே தனிச்சிறப்புமிக்க சட்டம் இது. ஆனால், பிற்காலத்தில் ஆளுங் கட்சியினர் தலையீடுகளும் அரசியல் குறுக்கீடுகளும் இந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தின் மீது நல்லோர் பலர்க்கு மனக்குறையை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை இந்தக் குறைபாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு, ஆரிய – பிராமணிய ஆதிக்க ஆற்றல்களும், அவர்களின் அடிவருடிகளும் இந்து சமய அறநிலையத் துறையைக் கலைத்துவிட வேண்டும் என்றும், கோயில்கள் அனைத்தையும் பக்தர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் சூழ்ச்சிக் குரல் எழுப்புகின்றனர்.

கர்நாடகத்திலிருந்து வந்து தமிழ்நாட்டில் ஆன்மிகப் பெருங்குழுமம் நடத்தும் ஜக்கி வாசுதேவும் இந்துசமய அறநிலையத்துறையைக் கலைத்துவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்நாடு அரசு தலையிடக் கூடாது என்றும் குரல் எழுப்புகிறார்.

நம் திருக்கோயில்களை சீரும் சிறப்புமாக நிர்வகித்திடவும், தமிழர் ஆன்மிகம் செழித்திடவும் ஊக்கமளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகளையும், செயல்பாடு களையும் மேம்படுத்துதல் மிகமிகத் தேவை!

தமிழ்நாடு திருக்கோயில்களில் அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்படாத நிலை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட அறங்காவலர் குழுக்களும் நேர்மையான ஆன்மிகத்திற்குத் தொடர்பில்லாத ஆளுங்கட்சிப் புள்ளிகளை உறுப்பினர்களாக – தலைவர்களாகக் கொண்டவையாகப் பெரும்பாலும் இருந்தன. ஊழல் செயல்பாடுகளும் நிகழ்ந்தன.

இவ்வாறான இன்னபிற குறைபாடுகளையும் நீக்கும் வகையில் தமிழர் ஆன்மிகத்தில் அக்கறையுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு அமைத்து, ஆன்மிக மக்களிடமும் கருத்துக் கேட்டு – ஆணையத்தின் பரிந்துரை பெற்று செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தெய்வத் தமிழ்ப் பேரவை கனிவுடன் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் 4 :

உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துத் திருக்கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடைபெறுவதை உறுதி செய்க!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்கள், 13.12.2021 அன்று ஊடகவியலாளர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில் வரும் ஏழு மாதங்களில் 551 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது! அத்திருக்குடமுழுக்கு விழாக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்துள்ள தீர்ப்பின்படி தமிழில் நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 05.12.2020 அன்று கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு குறித்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் கிருபாகரன் – புகழேந்தி அமர்வு, தமிழ் மந்திரங்களை எல்லா இடங்களிலும் ஓதி குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டுமென்றும், தமிழ் குடமுழுக்கு நடத்தும் ஆன்மிகச் சான்றோரின் பெயரை குடமுழுக்கு விழா அழைப்பிதழில் அச்சிட வேண்டும் என்றும், இதை கடைபிடிக்காத இடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துத் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இத்தீர்ப்பு சரிவரி கடைபிடிக்கப்படுவதில்லை.

தமிழ்க் குடமுழுக்கு விழாக்களில், கருவறைக்கு வெளியே ஓதுவார்களை நிற்கவைத்து விட்டு, தமிழில் சில பாடல்களை மட்டும் பாடி ஏமாற்றும் நடைமுறை செயல்பாட்டில் இருக்கிறது. இம்முறையை நீக்கி கருவறை – கலசம் – வேள்விச் சாலை ஆகிய அனைத்து இடங்களிலும் தமிழில் கிரியை செய்யத் தெரிந்த கருவறை உயிர்ப்பாளர்கள், குடமுழுக்காளர்கள், வேள்வியாளர்கள் ஆகியோரைப் பயன்படுத்தி குடமுழுக்கு விழாவை முழுமையாகத் தமிழில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

எனவே, தமிழ்நாடு அரசு, வரும் காலங்களில் நடைபெறும் அனைத்துக் குடமுழுக்கு களிலும் கலசம் – கருவறை – யாகசாலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ் மந்திரங்கள் ஓதப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வரும் சனவரி மாதம் நடைபெறவுள்ள வடபழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவை தமிழிலேயே நடத்த வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் 5 :
தை ஒன்றே தமிழர் புத்தாண்டு என தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டு உறுதி செய்ய வேண்டும்!

தமிழரின் புத்தாண்டு எதுவென 1921ஆம் ஆண்டு, தமிழறிஞர் மறைமலையடிகள் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ச்சான்றோர்கள் திரு.வி.க, தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சா. நமச்சிவாயனார், உ.வே. சாமிநாத ஐயர் உள்ளிட்டோர் ஒன்றுகூடி தீர்மானித்து, “தை ஒன்றே தமிழ்ப் புத்தாண்டு” என அறிவித்தனர். கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் திருவள்ளுவர் எனக் கணக்கிட்டு, “திருவள்ளுவர் ஆண்டு” முறையை செயலுக்குக் கொண்டு வந்தனர்.

தமிழறிஞர்களும், தமிழின உணர்வாளர்களும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், “தை ஒன்றே தமிழ்ப் புத்தாண்டு” என கடந்த 2008ஆம் ஆண்டு அதனை ஏற்றுக் கொண்டு தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. பின்னர் வந்த, அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இதனை நீக்கி புதிய அரசாணை வழியே – ஆரியமயமாகிப் போன “சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு” என அறிவித்தது.

தற்போது, புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள திரு. மு.க. ஸ்டாலின் அரசு, அ.தி.மு.க. அரசின் சித்திரைப் புத்தாண்டு அரசாணையை இதுவரை நீக்கி அறிவிக்கவில்லை. அதனை இன்னமும் நீக்காமல் வைத்திருப்பது சித்திரை புத்தாண்டு என ஏற்றுக் கொண்டது போலாகும். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக பழைய அரசாணையை நீக்கி, “தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு” என புதிய அரசாணை வெளியிட வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் 6 :

ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர் ஆன்மிகத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டும், சூழலியல் சீர்கேடு – நிதி மோசடி எனத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்கி, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்த வேண்டும்.

யானை வலசைப்பாதையிலேயே ஈஷா யோகா மையத்தின் கட்டடங்கள் இருப்பதாக கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசின் வனத்துறை ஆவணங்கள் மட்டுமின்றி, இந்திய அரசின் தலைமைக் கணக்காயர் அலுவலக அறிக்கைவரை (Report of the Comptroller and Auditor General of India on Economic Sector for the year ended March 2017) கூறி வந்த நிலையில், தற்போதுள்ள தி.மு.க. அரசின் கோவை மாவட்ட வனத்துறை அதிகாரி ஈஷா மையம் யானைப் பாதையில் இல்லையென தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளித்துள்ள செயல் கடும் அதிர்ச்சியளிக்கிறது. ஈஷா யோகா மையம் அமைந்திருக்கிற இடம் யானைகள் வாழிடம் மற்றும் யானைகளின் வழித்தடம் என்பது நடைமுறை உண்மை!

தமிழ்நாடு அரசு, உடனடியாக இதுகுறித்து விசாரித்து, தவறான தகவல் அளித்த வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், சைவ நெறிக்கு எதிராகவும் – பல்வேறு குற்றச் செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டுவரும் ஈஷா மையத்தை அரசுடைமையாக்கி, இந்து சமய அறநிலையத்துறையின் வழியே அங்கு தமிழர் வழிபாட்டை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Leave a Response