மீண்டும் மஞ்சப்பை திட்டத்துக்குப் பெரும் வரவேற்பு

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற விழிப்புணர்வு இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் சுற்றுச்சுழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு `குட்-பை’ சொல்லும் வகையில், அதற்கு மாற்றுப் பொருளைப் பயன்படுத்தும் வகையில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்தின் மூலம் பொதுமக்களுக்குக் கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் என்ற நிகழ்ச்சியை சென்னை, கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

முன்னதாக விழாவுக்கு காலை 10.25 மணிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைவாணர் அரங்கத்தில் வைக்கப்பட்டு இருந்த, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட உள்ள பொருட்களின் கண்காட்சியை சுற்றிப் பார்த்தார். கண்காட்சியில் இருந்த பணியாளர்கள் முதல்வருக்கு, பிளாஸ்டிக் பொருளுக்குப் பதிலாக பயன்படுத்த உள்ள பொருட்கள் குறித்து எடுத்துக் கூறினர்.

‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தும், குறும்படத்தை வெளியிட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது…..

மஞ்சள் பை கொண்டு வந்தால், ‘வீட்டில் ஏதாவது விசேசமா?. பத்திரிகை கொண்டு வந்திருக்கிறீர்களா? என்று கேட்ட காலம் ஒன்று உண்டு. அதன்பிறகு பிளாஸ்டிக் பை வந்து அதுதான் நாகரிகம், மஞ்சள் பை வைத்திருப்பது கேவலம் என்ற ஒரு சூழல் உருவானது. மஞ்சள் பை வைத்திருந்தாலே அவரை பட்டிக்காட்டான் என்று கிண்டல் செய்யக் கூடியவர்களும் உருவானார்கள். சினிமாவிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் கூட மஞ்சள் பையை கக்கத்தில் வைத்து ஒருவர் வந்தால் அவரை கிராமத்துக்காரர் என்று அடையாளம் காட்டுவதற்காக பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அழகான, விதவிதமான பைகளை ஒவ்வொரு வணிக நிறுவனங்களும் தயாரித்து தங்களது போட்டிகளுக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதை வாங்குவதால் மஞ்சள் பையை எடுத்துச் செல்வது மக்கள் மத்தியிலும் குறைந்து விட்டது. அந்த மஞ்சள் பைதான் சூழலுக்கு, சுற்றுச்சூழலுக்கு சரியானது, அழகான, நாகரிகமான, பிளாஸ்டிக் பை என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது என்பதை பரப்புரை செய்தபிறகு இப்போது துணிப்பைகளை கொண்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. அது மேலும் அதிகமாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு பயணம் ஆகும்.

வேளாண் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்தநாள் விழாவில் நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னேன். சுற்றுச்சூழல் பிரச்னைதான் மானுடத்தின் நாளொரு பிரச்னை என்பதை நான் வலியுறுத்திச் சொன்னேன். அந்தச் சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடு விளைவிப்பதுதான் பிளாஸ்டிக். அந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைத்தாக வேண்டும். இப்போது இந்த மஞ்சப்பை இருக்கிறது.

பருத்திச் செடியில் இருந்து பஞ்சு கிடைக்கிறது. அதிலிருந்து நூலாக நெய்கிறோம், பை தைக்கிறோம். அந்தப் பை கிழிந்தது என்றால், அதை கரித்துணியாக, மிதியடியாக வீட்டில் பயன்படுத்துகிறோம். ஆனால் பிளாஸ்டிக் மக்காது. அதுதான் சுற்றுச்சூழலைக் கெடுக்கிறது.

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக்தான் இந்த சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. அதுதான் நீர், காற்று என எல்லாவற்றையும் சீரழிக்கிறது. பிளாஸ்டிக்கை மண்ணில் போட்டால் மட்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் மண் கெடுகிறது. மண் கெட்டால் வேளாண்மை பாதிக்கிறது. கால்நடைகளும் இதைச் சாப்பிட்டு இறந்து போகின்றன. நீர்நிலைகளில் தூக்கி எறிந்தால் அங்குள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. நீர் மாசுபடும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களால் கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. கடல்சார் உயிரினங்கள் சாப்பிட்டு மடிந்து போகின்றன. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்கை எரித்தால் அதிலிருந்து டையாக்சின் வேதிப் பொருள் காற்றில் கலந்து காற்று நஞ்சாகிறது. இதைச் சுவாசிக்கும் மனிதர்களுக்கு சுவாச கோளாறு, நுரையீரல் பாதிப்புக்கள் ஏற்படுகிறது.

இதுபோன்ற பாதிப்புகளை உருவாக்குகின்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தியாக வேண்டும். இன்றைய பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது, உற்பத்தி செய்வது, ஓரிடத்தில் சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

மக்கும் தன்மையுடைய மாற்றுப்பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு விதிகளை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 130 தொழிற்சாலைகளுக்கு இதுவரை மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களையும் அரசு செய்து வருகிறது. உணவகம், திருமண மண்டபங்கள், உணவுப் பாதுகாப்புத் துறை என அனைவரையும் அழைத்து பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பெருநகரங்களில் மண்டல மாநாடு நடத்தப்பட்டது. அரசாங்கம் நினைத்தால் மட்டும் இதனைச் செயல்படுத்த முடியாது. மக்களும் இணைய வேண்டும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும். அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழக்கூடிய தமிழ்நாடு சுற்றுச்சூழலைக் காப்பதிலும் முன்னிலை வகிக்க வேண்டும். இயற்கையைக் காப்போம், இயற்கையோடு இணைந்து காப்போம். இயற்கையைக் கெடுக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மஞ்சப்பை என்பதை யாரும் அவமானமாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை. சுற்றுச்சூழலின் அடையாளத்தை காப்பவரின் அடையாளம்தான் இந்த மஞ்சப்பை. அதை நாம் நிரூபித்துக் காட்டுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையுரை ஆற்றினார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ஜெர்மன் நாட்டின் துணை தூதர் காரின் கிறிஸ்டினா மரியா ஸ்டோல், வனத்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உதயன் நன்றி கூறினார்.

தமிழ்நாடு அரசிம் இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வல்ர்கள் மற்றும் சமுதாய அக்கறை கொண்டோர் பெரும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.

மாணவர்களும் தொழில்முனைவோரும் மஞ்சள்பை திட்டத்தை மக்களிடம் வேகமாகக் கொண்டு செல்கின்றனர்.

Leave a Response