நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட சில மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது.

பருவமழைக் காலம் தொடங்கியதில் இருந்து வெளுத்து வாங்கி வரும் மழையால் அனைத்துப் பகுதிகளிலும் இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகி இருக்கிறது.

அந்தவகையில் விழுப்புரம், திருப்பத்தூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, கோவை ஆகிய இடங்களில் இயல்பை விட 100 விழுக்காட்டுக்கு அதிகமாக மழை பெய்து இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 தினங்களைப் பொறுத்தவரையில் கடலோர மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் அந்தப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

அதன் தொடர்ச்சியாக குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மழை நீடிக்கும் என்பதால் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 12 வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழையும், அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (திங்கட்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழையும், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி, இராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழையும்,

அடுத்த மாதம் (டிசம்பர்) 1 ஆம் தேதி, புதன்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

குமரிக் கடல் மற்றும் தென் மேற்கு வங்கக் கடல், தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் இன்றும், அந்தமான் கடல்பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு மேற்சொன்ன நாட்களில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

தற்போது குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகிறது என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் (வருகிற 1-ந் தேதி) மேற்கு-வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும் என்றும் ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

இந்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்துக்குத் தொடர்ந்து மழை இருக்குமா? என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் என்.புவியரசனிடம் கேட்டபோது, அந்தமானில் உருவாகும் தாழ்வுப் பகுதி, வலுப்பெற வாய்ப்பு இருப்பதால், தமிழகத்துக்கு தற்போது வரை வாய்ப்பு இல்லை. ஆனால் அது வலுப்பெறாமல் கீழ் நோக்கி நகரும் பட்சத்தில் தமிழகத்துக்கு மீண்டும் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response