மழை வெள்ளத்தால் கன்னியாகுமரி மாவட்டம் கடும்பாதிப்பு – காரணம் இதுதான்

அண்மை மழையால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருகிறது. அதற்கு என்ன காரணம்? என்பது குறித்து சூழலியலாளர் சுந்தர்ராஜன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்….

கன்னியாகுமரி மாவட்டம் தற்போது மிதப்பதற்கு ஒரு முக்கியமான காரணம், அங்குள்ள மலைகள் உடைக்கப்பட்டு அது குவாரிகளாக மாற்றப்பட்டு, கேரளாவிற்கு கல் கடத்தப்படுவதுதான்.

மலைகளில் உள்ள மரங்கள், தாவரங்கள், புதர்கள், புல்வெளிகள் எல்லாம் மழை பொழியும் போது தண்ணீர் வேகமாக சென்றுவிடாமல் மெதுவாக தடுத்து அனுப்பும், கீழே உள்ள பகுதிகளில் திடீர் வெள்ளம் தவிர்க்கப்படும்.

இப்போது மலைகள் தகர்க்கப்படுவதால் தண்ணீர் விரைவாக ஓடி, வெள்ளம் ஏற்படுத்தி, கடலுக்குள் சென்று கலந்துவிடும். குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள கல் குவாரிகளிலிருந்து பாறைகள் கேரளாவில் உள்ள துறைமுகத்திற்கு அனுப்பியதன் விளைவை குமரி மாவட்டம் அனுபவித்து வருகிறது.

ஏற்கனவே,“ மீண்டும் தேவைப்படும் குமரி மீட்புப் போராட்டம்” என்று எழுதியிருந்தேன்.

முதல்வரே, குமரி வெள்ளத்தில் தத்தளித்ததை சில நாட்களுக்கு முன்னர் நாம் பார்த்தோம், இது குறித்து இப்போது கூட முடிவெடுக்கவில்லை எனில் குமரி மாவட்டத்தை நம்மால் காப்பாற்ற முடியாது, கேரளா, கடந்த பல ஆண்டுகளாக மேற்கு மலைகளைக் காப்பாற்றத் தவறியதன் விளைவை இப்போது சந்திக்கிறது. இதே நிலை குமரி மாவட்டத்திற்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்வீர்களா தமிழக முதல்வர் அவர்களே!

இவ்வாரு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response