இன்றும் நாளையும் – தமிழ்நாடு மழை நிலவரம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொறுத்தமட்டில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. வேப்பேரி, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், பெரம்பூர், தியாகராயநகர், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று காலை திடீரென மழை பெய்தது.

இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் நனைந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டது. சிறிது நேரம் பெய்த மழையால், பிரதான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைநீர் சாலைகளில் வடிய இடமின்றி தேங்கியதால், வழக்கத்துக்கு மாறாக முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தநிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல்பகுதியில் (3.1 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோரப் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக 23 ஆம் தேதி (இன்று) மதுரை, இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

24 ஆம் தேதி (நாளை) இராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Response