தமிழ்நாட்டுக் கொடி ஏற்றியது குற்றம் – சீமான் மீது வழக்கு

தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடுநாள் கொண்டாடப்பட்டுவருகிறது. தமிழகப் பெருவிழா என்ற பெயர் உட்பட பல பெயர்களில் அந்நாள் கொண்டாடப்பட்டு வந்தது.

இந்நிலையில், இவ்வாண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என்றொ கொண்டாடுவோம் என அறிவித்துள்ளார்.

இதற்குப் பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள்.

அதேநேரம், இவ்வாண்டும் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாகப் பல்வேறு அமைப்பினர் கொண்டாடினர்.

நாம் தமிழர் கட்சியும் நவம்பர் 1 தமிழ்நாடு நாள் என்று கொண்டாடியது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் அந்நாளைக் கொண்டாடினார்.

கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகளோடு நடந்த அந்நிகழ்வின்போது, தமிழ்நாட்டுக் கொடியை ஏற்றிவைத்தார் சீமான்.

அதனால், அவர் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பாய்ந்திருக்கிறது.

கிராம நிர்வாக அலுவலர் ராஜா அளித்த புகாரின் பேரில் சேலம் அம்மாப்பேட்டை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Response