தமிழ்நாடு நாளை மாற்றுவது தமிழின அடையாள அழிப்பு – மு.க.ஸ்டாலினுக்கு ததேபே கண்டனம்

“தமிழ் நாடு நாளை“ சூலை 18 ஆக முதல்வர் மாற்றியது தமிழின அடையாள அழிப்பாகும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அவ்வமைப்பின் தலைமைச்செயற்குழு உறுப்பினர் க. அருணபாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்….

இனி, “தமிழ்நாடு நாள்“ நவம்பர் 1 அல்ல சூலை 18 என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருப்பது பேரதிர்ச்சியைத் தருகிறது.

மொழிவாரி மாநிலமாகச் சென்னை மாகாணம் பிரிக்கப்பட்ட நாள்தான் 1956 நவம்பர் 1, அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வடக்கு, தெற்கு எல்லை மீட்புப் போராட்ட தியாகிகள் குடும்பத்திற்கு உதவித் தொகை வழங்கி வருகிறோம் என்று மிக எளிமைப்படுத்தி, தமிழர் தாயக உருவாக்க நாளை மு.க.ஸ்டாலின் கூறுவது வேதனை அளிக்கிறது.

தாயகம் முதன்மை; தாயத்திற்கான பெயர் அதை ஒட்டி வருவது. தாயகம் அமையவில்லை என்றால்
தாயகத்திற்கான பெயர் எப்படி வரும்?

தேசிய இன – மொழி வழி மாநிலங்கள் அமைக்க இந்திய அரசை வலியுறுத்தி 1947 க்குப் பிறகு தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் போராட்டங்கள் வெடித்தன.

“தமிழ்நாடு தமிழர்க்கே“ முழக்கத்தை 1930களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தமிழ் அறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் எழுப்பினர். பின்னர் இந்தி எதிர்ப்பில் வந்து சேர்ந்த பெரியார் 1938,1939 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு தமிழர்க்கே முழக்கம் கொடுத்தார். அதன் பிறகு திராவிட நாட்டு முழக்கத்திற்கு மாறிவிட்டார்.

1940 களில், 1950 களில் தமிழர் தாயகத்தை மொழி – இன அடிப்படையில் உருவாக்க ம.பொ.சி. பல
போராட்டங்களை நடத்தினார். கட்சி வேறுபாடின்றி தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போராட்டங்களில் கலந்து கொள்ளாதீர்கள் என்று அப்போது பெரியார் அறிக்கை
வெளியிட்டார்.

மொழி இனத் தாயக மாநில அமைப்புப் போராட்டங்களில் தி.க.வும் தி.மு.க.வும் கலந்து
கொண்டதில்லை. தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், தமிழர் ஆகிய அனைவருக்குமான திராவிட
நாட்டை அப்போது தி.மு.க. கோரியது தெலுங்கர், கன்னடர், மலையாளி, தமிழர் ஆகியோருக்குப்
பொதுவான “திராவிடர்“ இனம் பற்றி பேசிக் கொண்டிருந்தார் பெரியார்.

எனவே தமிழர் தாயகமாக அன்றைய சென்னை மாநிலம் 1956 நவம்பர் 1 ல் வடிவமைக்கப்பட்டதற்கும் தி.க., தி.மு.க. கட்சிகளுக்கும் தொடர்பில்லை. அது அக்கட்சிகளின் கோரிக்கை அல்ல. வடக்கு எல்லை, தெற்கு
எல்லை மீட்புப் போராட்டங்களில் அவ்விரு பகுதிகளில் இருந்த தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
மொழி – இன வழித் தாயகமாக தமிழ்நாட்டை அமைக்க வேண்டும் என்பது தி.மு.கவின் கோரிக்கை
அல்ல. அப்போது அதன் கோரிக்கை சென்னை, தெலுங்கு, கன்னட, மலையாள மாநிலங்கள்
இணைந்த திராவிட நாடு.!

அந்த திராவிடப் பாராம்பரியத்தின் தொடர்ச்சிக் குரலாகத்தான் நவம்பர் 1 தமிழ்நாடு அமைக்கப்பட்ட நாளை போகிற போக்கில், பல மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டன, அவற்றில் ஒன்று சென்னை மாகாணம் என்று மிகவும் எளிமைப் படுத்திப் பேசுகிறார் ஸ்டாலின்.

தெற்கெல்லை மீட்புப் போராட்டத்தில் மலையாள இன ஆதிக்க அரசால் 11 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு முன் வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தில் கோவிந்தசாமி, பழனி மாணிக்கம் ஆகிய இருவரும் காவல் துறை தாக்குதலில் இறந்து போயினர்.

பிள்ளை பிறந்தால்தான் பெயர் சூட்டுவிழா நடத்தமுடியும். தமிழர்களுக்கான தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்டதால்தான் பின்னர் தமிழ்நாடு பெயர் சூட்ட முடிந்தது. அதையும் தி.மு.க. அரசு
முதல்முதலாகச் சூட்டவில்லை. காங்கிரசு ஆட்சியில் 1961 ல் தமிழில் “தமிழ்நாடு அரசு“என்றும்
ஆங்கிலத்தில் “மெட்ராஸ் ஸ்டேட்“ (Madras State) என்றும் இருக்கும் என்று சட்டப்பேரவையில்
தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்தியது. எனவே தமிழ்நாடு அரசு என்பது முற்றிலும் புதிதல்ல.

1967 ல் அன்றைய முதல்வர் அண்ணா, ஆங்கிலம் தமிழ் எல்லா மொழியிலும், இந்திய அரசிலும் தமிழ்நாடு பெயர்மாற்றத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.

அம்முன்மொழிவு ஆங்கிலத்தில் Tamil Nad (டமில் நாட்) என்றிருந்தது. ம.பொ.சி. Thamizh Naadu (தமிழ்நாடு) என்று
திருத்தம் கொடுத்தார். கடைசியில் Tamil Nadu (டமில் நாடு) அதாவது d க்குப் பக்கத்தில் u போடும்
திருத்தத்தை மட்டும் தி.மு.க. ஆட்சி ஏற்றுக் கொண்டது. இன்றும் டமில் நாடுதான் உள்ளது.

தமிழர் தாயகமாக தமிழ்நாடு உருவான நாளை தி.மு.க. கொண்டாடியதேயில்லை. ஏனெனில் அதன்
கோரிக்கை அதுவல்ல. ம.பொ.சி.யின் தமிழரசுக்கழகம் மற்ற தமிழ்அமைப்புகள் தமிழ்நாடு நாளைத்
(1956, நவம்பர் 1)தொடர்ந்து கொண்டாடி வந்தனர்.

அ.தி.மு.க.வும் தமிழ்நாடு நாளைக் கொண்டாடியதில்லை. தமிழ்நாடு அமைந்த வெள்ளிவிழா நாளை 1981 நவம்பர் 1 தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும் என்று அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் ம.பொ.சி வலியுறுத்தினார்.
கடைசி நேரத்தில் எம்.ஜி.ஆர் அரசு தமிழ்நாடு வெள்ளிவிழா நாளைக் கொண்டாடியது.

ஐயா நா. அருணாச்சலம் அவர்கள் தலைமையில் இயங்கிய தமிழ்ச் சான்றோர் பேரவை. 1990களில்
தொடர்ச்சியாக நவம்பர் 1யை தமிழர் தாயக நாளாக – தமிழ்நாடு நாளாக மிக எழுச்சியுடன்
கொண்டாடி வெகு மக்களிடம் இவ்வுணுர்வைப் பரப்பியது. அதை ஒட்டி தமிழ்த் தேசியப்பேரியக்கம்
தொடர்ந்து நவம்பர் 1 தமிழ்நாடு நாளை கடைபிடித்து வருகிறது.

தமிழ்நாடு அமைந்த நவம்பர் 1-இன் பொன்விழா 2006 நவம்பர் 1 ல் வந்தது. அப்போது முதலமைச்சர்
கலைஞர். தமிழறிஞர்களும் எங்களைப் போன்ற பல்வேறு தமிழ் அமைப்புகளும் வலியுறுத்திய பின்
முதல்வர் கலைஞரும் நவம்பர் 1 பொன்விழவைக் கடைபிடித்தார்.

ஆந்திர, கர்நாடக, கேரள மாநில அரசுகள் தங்கள் மாநிலம் அமைந்த நாளை ஆண்டு தோறும்
கொண்டாடுகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு இனி ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1ல் “தமிழ்நாடு நாள்“ கடைபிடிக்கப்படும் என்று 2019 நவம்பர் 1 ல் அறிவித்தது.

இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கண்ட வரலாற்றுச் செய்திகளை எல்லாம் ஒரு நொடியில்
புறக்கணித்துவிட்டு, 1967 ல் தி.மு.க. ஆட்சியால் சட்டப்பேரவையில் தமிழ்நாடு தீர்மானம்
நிறைவேற்றப்பட்ட நாளான சூலை 18 தான் இனி “தமிழ்நாடு நாள்“ என்று அறிவித்துள்ளார்.

இத்தீர்மானத்தை இந்திய அரசின் நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்ட பிறகுதான் அது செயலுக்கு
வரும். இந்திய அரசு 1968 ல்தான் இத்தீர்மானத்தை வேறொரு தேதியில் ஏற்றுக் கொண்டது.
எனவே சூலை 18என்பது பெயர்மாற்றத்திற்குக்கூட பொருத்தமான நாளன்று.

முதலமைச்சர் ஆன பிறகு மு.க.ஸ்டாலின் எடுத்துவரும்தமிழின அடையாள அழிப்பு, திராவிடத்
திணிப்பு முயற்சிகளில் இதுவும் ஒன்று என தமிழ்த் தேசியப் பேரியக்கம் கருதுகிறது. தனது
கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

சூலை 18 அறிவிப்பைக் கைவிட்டு, நவம்பர் 1 யை தமிழ்நாடு நாளாகக் கடைபிடிக்குமாறு
முதலமைச்சர் அவர்களை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response