மீண்டும் அதே தவறைச் செய்யாதீர்கள் – திமுக அரசுக்கு கி.வெங்கட்ராமன் கோரிக்கை

விரிவுரையாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை வரவேற்கிறோம்! புதிய அறிவிப்பில் வெளி மாநிலத்தவர் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….

தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்காக 2021 அக்டோபர் 28, 29, 30 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக ஆசிரியர் பணித்தேர்வு வாரியம் (Teachers Recruitment Board – TRB) அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

17.10.2021 அன்று அறிக்கை வெளியிட்டிருந்த நாம், இத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்றும், இத்தேர்வில் வெளி மாநிலத்தவர் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தோம். கடந்த 22.10.2021 அன்று, சென்னை பாரிமுனையில், தமிழ்நாட்டு வேலைகள், தொழில், வணிகம் தமிழருக்கே என தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டுமெனக் கோரி நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்திலும் இதனை வலியுறுத்தியிருந்தோம்.

நேற்று (25.10.2021), தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள், இதுகுறித்து ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பேசும்போது, இத்தேர்வுக்கான தேர்வு எழுதும் மையங்கள் பல நூறு கிலோ மீட்டர் தள்ளி அறிவிக்கப்பட்டிருந்ததால், பல தேர்வர்கள் சிரமங்களுக்கு ஆளாயினர், எனவே இதனைச் சரி செய்யும் பொருட்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், புதிய அரசாணை வெளியிடப்பட்டு தேர்வு நடக்கும் என்றும் கூறினார்.

தேர்வெழுதும் மையங்கள் அந்தந்த மாவட்டத்திலேயே அமைந்திட வேண்டும் என்பது முதன்மையான சிக்கல் அல்ல! இத்தேர்வில், தமிழ்நாடு அல்லாத பிற மாநிலத்தவர் பங்கேற்க உள்ளனர் என்பதே முகாமையான சிக்கல்! எனவே, தமிழ்நாடு அரசு புதிய தேர்வு அறிவிப்பை வெளியிடும்போது, வெளி மாநிலத்தவரைத் இத்தேர்வில் பங்கேற்க விடாமல் தடை விதித்து ஆணையிட வேண்டும்.

உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தி தெரியாமல் எந்த அரசுப் பணியும் பெற முடியாத நிலை உள்ளபோது, தமிழ் தெரியாதோரும் தமிழ்நாடு அரசுப் பணிக்கான தேர்வை எழுதலாம் என கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பிறப்பித்த அரசாணைப்படியே, இப்போதுள்ள தி.மு.க. அரசும் விரிவுரையாளர் பணித் தேர்வை நடத்துவது அநீதியானது!

எனவே, தமிழ்நாடு அரசு புதிய தேர்வு அறிவிப்பை வெளிடும்போது, மிக கவனமாக பிற மாநிலத்தவர் இத்தேர்வில் பங்கேற்கச் செய்வதைத் தடை செய்யும் வகையில் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், அந்தந்த மாவட்டங்களிலேயே தேர்வெழுதும் மையங்களை அமைத்திட வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Response