சிங்கள இராணுவதளபதி மகள் பாடிய பாட்டை நீக்கவேண்டும் – ஹாரிஸ்ஜெயராஜுக்கு மு.களஞ்சியம் கோரிக்கை

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது.ஜேடி ஜெர்ரி ஆகியோர் இயக்குகிறார்கள்.

இந்தப்படத்தில் புதுமுக நடிகை கீதிகா திவாரி என்பவர் நடிக்கிறார். நடிகர்கள் பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட பெரிய கூட்டம் இப்படத்தில் இருக்கிறது.

இப்படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்கிறார்.மதன்கார்க்கி மற்றும் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள்.

இப்படத்தில் இடம்பெறவிருக்கும் ஒரு பாடலைப் பாட அண்மையில் புகழ்பெற்றிருக்கும் சிங்களப் பாடகி யோகானியை அழைத்துப் பாட வைத்திருக்கிறார்கள்.

அக்டோபர் ஆறாம் தேதி அவரை மும்பைக்கு வரவழைத்து மதன்கார்க்கி எழுதிய பாடலைப் பாடவைத்திருக்கிறார்கள்.

அவருடன் ஹாரிஸ்ஜெயராஜ் மற்றும் மதன்கார்க்கி ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் ஹாரிஸ்ஜெயராஜ்.

அதற்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

அந்தப் பாடகி யோகானி சிங்கள இராணுவ தளபதி பிரசன்ன டி சில்வாவின் மகள்.

சிங்கள இனவெறியர்கள் தமிழர்கள் மீது நடத்திய போரைப் புகழ்ந்து பாடிய பெண்.

இப்படி தமிழுக்கும்,தமிழருக்கும் எதிரானவர்களை தேடித் தேடி வாய்ப்பு கொடுப்பது தமிழ்த் திரை உலகின் சாபக்கேடு என்றெல்லாம் பல எதிர்ப்புகள் கிளம்பின.

அந்தப்பாடகியைப் பரிந்துரைத்ததே வைரமுத்துதான் என்றும் சொல்லப்பட்டது.

இது தொடர்பாக நிறைய எதிர்ப்புகள் வந்ததால், டிவிட்டரிலிருந்து அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ்.

இதனால், அந்தப்பெண் பாடிய பாடலையும் நீக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பாடலை நீக்கமாட்டோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.

இந்தத் தகவல் தெரிந்து தமிழ் உணர்வாளர்கள் கூடுதல் எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளார்களாம்.

இதற்கிடையே மும்பையில் பாட்டுப்பாடிவிட்டு கொழும்பு சென்ற யோகானிக்கு சிங்கள இராணுவத்தின் அதிஉயர் பாதுகாப்பு கொடுக்கப்பட்ட காணொலிகள் பகிரப்பட்டுவருகின்றன.

சிறிலங்காவில் இனாணுவத்தளபதிகளுக்கும் அதிஉயர்பதவி அரசியல்வாதிகளுக்கு மட்டுமே கிடைக்கும் அதி உயர் இராணுவப்பாதுகாப்பு யொகானிக்கு கிடைக்கிறது என்றால் இவர் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தால் promote செய்யப்படுபவர் என்பது உறுதியாகிறது இவரை அங்கீகரிப்பது தமிழர்கள் படுகுழியில் விழுவது போன்றது.

என்று எதிர்ப்புக்குரல்கள் எழுகின்றன்.

இயக்குநர் மு.களஞ்சியம் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.அவருடைய பதிவில்….

என் அப்பாதான் விடுதலைப்புலிகளையும், தமிழர்களையும் கொன்ற, “சிங்கள சிங்கம்”
என்று பெருமைப்படும் இனப்படுகொலையாளி ராணுவ தளபதி பிரசன்ன டீ சில்வாவின் மகள் பாடிய பாட்டை ஹாரிஸ் ஜெயராஜும், மதன் கார்க்கியும் நீக்க வேண்டும்.
இன எதிரியின் குரல் நமக்கெதற்கு?

எனப்பதிவிட்டுள்ளார்.

இவ்வளவையும் மீறி அந்தப்பாடலைப் பயன்படுத்துவார்களா? இல்லையா? என்பது போகப்போகத் தெரியும்.

எதிர்ப்புகளை மீறிப் பாடலைப்ப பயன்படுத்தினால் வைரமுத்து, மதன்கார்க்கி, ஹாரிஸ் உள்ளிட்ட அனைவரும் தமிழ் மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளாவார்கள் என்பது உறுதி.

Leave a Response