9 மாவட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தல் முடிவுகள் – எல்லா மாவட்டங்களிலும் திமுக வெற்றி

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் 2 கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி அக்டோபர் 6 ஆம் தேதி, 9 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு திமுக, அதிமுக மற்றும் பாமக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் அவரவர் கட்சி சின்னத்தில் நேருக்கு நேர் போட்டியிட்டனர். மேலும், உள்ளூரில் செல்வாக்குள்ள நபர்கள் பலரும் சுயேட்சையாக களமிறங்கினர்.

அதன்படி, தேர்தல் நடைபெற்ற மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை 9 ஆகும். மொத்த மாவட்ட ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 140 ஆகும். மொத்த ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 74ம், மொத்த ஊராட்சி ஒன்றிய வார்டுகளின் எண்ணிக்கை 1381, மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 2,901, மொத்த ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 22,581 ஆக இருந்தது. இந்த இடங்களுக்கான தேர்தல்தான் கடந்த 6ம் தேதி மற்றும் 9ம் தேதி நடைபெற்றது.

இந்த 9 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 79,433 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இவற்றில் 2,981 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இரண்டு கட்டத் தேர்தலில் சுமார் 78 சதவீதம் வாக்குகள் பதிவானது. 14,573 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுகள் மொத்தம் 41,500 வாக்கு பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.

இந்தத் தேர்தலில் வாக்களித்த மக்கள் ஒவ்வொருவரும் 4 வாக்குகள் அளித்தனர். அதன்படி, மாவட்ட கவுன்சிலருக்கு ஒரு ஒட்டு, ஒன்றிய கவுன்சிலருக்கு ஒரு ஓட்டு, ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஒரு ஓட்டு, ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு ஒரு ஒட்டு என 4 வாக்குகளைப் பதிவு செய்தனர். மேலும், ஒருவர் 4 ஓட்டு போட வேண்டியது இருந்ததால் மின்னணு இயந்திரம் பயன்படுத்தாமல், வாக்குச்சீட்டு முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி 4 வாக்குச்சீட்டும் 4 வெவ்வேறு வண்ணங்களில் அச்சிடப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நேற்று (அக்டோபர் 12,2021) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. 31,245 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணும் பணிகள் அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.

அதன்படி, காலை 8 மணிக்கு வாக்குபெட்டிகள் பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு, வாக்குகள் மேஜைகள் மீது கொட்டப்பட்டது. பின்னர் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலருக்கான மஞ்சள் நிற வாக்குச்சீட்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலருக்கான பச்சை நிற வாக்குச்சீட்டு, ஊராட்சி தலைவருக்கான இளம்சிவப்பு நிற வாக்குச்சீட்டு, ஊராட்சி உறுப்பினருக்கான வெள்ளை நிற வாக்குச்சீட்டு என தனித்தனியாக பிரிக்கப்பட்டது. பின்னர் 50, 50 கட்டுகளாக வாக்கு எண்ணும் அலுவலர் பிரித்து கட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தனித்தனி மேஜைக்கு 50 கட்டுகள் அடங்கிய வாக்குச்சீட்டுகள் கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணும் அலுவலர்கள் மூலம் எண்ணப்பட்டது.

இவற்றில் 9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் நேற்று நள்ளிரவு நிலவரப்படி 120 இடங்களுக்கும் அதிகமாக பெற்று ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெற்றது. இதில் சில இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக கட்சிக்கு வெறும் 4 இடங்களே கிடைத்தது. மற்ற கட்சிகளான பாமக, பாஜ, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளனர்.

அடுத்ததாக, 1,381 இடங்களில் நடைபெற்ற ஒன்றிய கவுன்சிலர் தேர்தலிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 800 இடங்களுக்கும் அதிகமாக பெற்று வெற்றி பெற்றது. இன்னும் பல இடங்களில் திமுக முன்னணியில் உள்ளது. 55 இடங்களில் வெற்றி பெற்று 2வது இடத்தில் அதிமுக உள்ளது. மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோன்று, 2,901 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக ஆதரவுடன் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களே அதிக இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 2வது இடத்தில் அதிமுக இருந்தது. 22,581 இடங்களுக்கு நடைபெற்ற ஊராட்சி மன்ற கவுன்சிலர் பதவிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும். இதிலும், திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர். 2வது இடத்தில் அதிமுக ஆதரவு வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர்.

வாக்குச்சீட்டு முறையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், இன்று காலை வரை வாக்குகள் எண்ணும் பணி நடந்து வந்தது. இன்றுதான் முழு முடிவுகள் விவரமாக தெரியவரும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும், வாக்கு எண்ணும் மையங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க 74 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, அதிமுக இதுவரை சந்தித்திராத தோல்வியை இந்தத் தேர்தலில் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியின் அதிகார பலம், பண பலத்தையும் மீறி திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக 9 மாவட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதுவரை காணாத தோல்வியை அதிமுக சந்தித்துள்ளது. அதேபோல மற்ற கட்சிகளான பாஜக, பாமக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட சிறிய கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் காணாமல் போயுள்ளன.

Leave a Response