சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசு தீர்மானம் – நீட்டை ஏற்றுத்தான் ஆகவேண்டுமென எடப்பாடி பேட்டி

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 14 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து,நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விலக்குப் பெறும் வகையில் புதிய சட்டமுன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் இந்தக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (செப்டம்பர் 13) நீட் தேர்வுக்கு விலக்குப் பெறும் வகையில் புதிய சட்டமுன்வடிவை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து தாக்கல் செய்தார்.

முன்னதாக, நீட் தேர்வு பயத்தால் மாணவர் தனுஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது…..

நீட் தேர்வைத் தடுத்து நிறுத்தி, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்வியில் சேர்த்தவர் கருணாநிதி. ஏன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூட நீட் தேர்வை நடத்த அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர், முதல்வராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழகத்தில் முதன்முதலில் நடத்தப்பட்டது.

‘நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று இதே சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதும், எதிர்க்கட்சித் தலைவரான இவர் முதல்வராக இருந்தபோதுதான்.

நீட் தேர்வு அச்சத்தில், அனிதா உள்பட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது உங்கள் ஆட்சியில்தான். குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் மசோதாவை இந்த அவைக்குச் சொல்லாமல் மறைத்ததும் அதிமுக ஆட்சிதான்.

அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராக இருந்தபோதுதான். இப்போது உயிரிழந்த மாணவர் தனுஷ் இருமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததும் நீங்கள், அதாவது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோதுதான்.

மத்திய அரசுடன் கூட்டணியாக இருந்தீர்கள். இப்போதும் இருக்கிறீர்கள். சிஏஏ மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலை வந்தபோது, பாஜக கூறியபோது, நீட் தேர்வுக்கு விலக்கு தர வேண்டுமென்று அதிமுக நிபந்தனை விதித்து இருக்கலாம். அந்தத் தெம்பு, திராணி அதிமுகவுக்கு இல்லை.

அதைச் செய்திருந்தால், நீட் தேர்வுக்கு ஓரளவுக்கு விலக்கு கிடைத்திருக்கும். ஆனால், நீட் தேர்வால் மாணவர்கள் மடிந்தபோது மரண அமைதி காத்து, ஆட்சி நடத்தியதுதான் அதிமுக.

ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சட்ட மசோதாவை இன்று நான் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். ஆகவே, நீட் தேர்வை இரத்து செய்து, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவக் கல்வியில் மாணவர்களைச் சேர்க்க இந்த அரசு அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது”.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இன்று (செப். 13) நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து தாக்கல் செய்தார்.

அப்போது, “நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக அரசு எதிர்த்து வருகிறது. இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே அதற்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா நிறைவேற்றப்படும் என உறுதியளித்தோம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சிறந்த மருத்துவர்களை தமிழகம் உருவாக்கியுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதுதான் நியாயமான சேர்க்கையாக இருக்கும்” என்றார்.

இதனிடையே, நீட் தேர்வு தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடையே விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வு இரத்து செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் வேலையாக நீட் தேர்வு இரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நீட் தேர்வு இரத்து செய்யப்படவில்லை.

இது தொடர்பாக தெளிவான முடிவையும் அரசு எடுக்கவில்லை. இதனால், மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்துக்கு உள்ளானார்கள். ஜூன் 23 ஆம் தேதி ஆளுநர் உரையின் போது, இந்தாண்டு நீட் தேர்வு நடைபெறுமா, நடக்காதா என நேரடியாக முதல்வரிடம் கேட்டேன். அதற்கு முதல்வர் மழுப்பலான பதிலைத் தெரிவித்தார்.

இந்நிலையில், குழப்பமான மனநிலையில் மாணவர்கள் நீட் தேர்வை சந்திக்க வேண்டிய சூழ்நிலை எழுந்ததால், சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இது மிகுந்த வருத்தத்தைத் தரக்கூடியது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்.

இதற்குக் காரணம் திமுக அரசுதான். முதல்வரும் அமைச்சர்களும் நீட் தேர்வு இரத்து செய்யப்படும் என தொடர்ந்து வாக்குறுதி அளித்து வந்ததால், மாணவர்கள் தங்களை முழுமையாக நீட் தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ளவில்லை. இதனால்தான் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முழுப் பொறுப்பு திமுக அரசுதான். இதற்கு தகுந்த பதிலளிக்காத காரணத்தால் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

அதிமுக அரசும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. அது அப்படியே நிலுவையில் இருந்தது. தவிர நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் நீட் தேர்வு எதிர்ப்பின்றி நடத்தப்படுகிறது. நாம் தான் விலக்கு கோருகிறோம்.

திமுக அரசு நீட் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்தது. அந்த ஆணையம் அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு ஒன்றில் பதில் அளித்த திமுக அரசு, நீட் தேர்வை இரத்து செய்வோம் என எங்கும் சொல்லவில்லை. மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றிய அரசு திமுக அரசு.

அதிமுக தீர்மானத்தை அயோக்கியத்தனமானது என, திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார். இது அவர்களுக்குப் பொருந்தும்தானே. உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அனைத்து மாநிலங்களும் மதித்து செயல்பட்டுத்தான் ஆக வேண்டும். நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது 2010, டிசம்பர் 21 திமுக – காங்கிரசு கூட்டணி அரசின் போதுதான்”.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Leave a Response