நீட் அச்சத்தால் மாணவர் தனுஷ் மரணம் – நடந்த அரசியலும் திமுக எதிர்கொண்ட விதமும்

சேலம் மாவட்டம், மேட்டூர், கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரது இரண்டாவது மகன் தனுஷ் ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சியடையாத நிலையில், இன்று நடைபெற்ற நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு, இந்த முறையும் தோல்வி அடைந்தால் தனது மருத்துவர் கனவு கலைந்துவிடுமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் தனுஷ் தற்கொலை என்றதுமே, இம்மரணத்துக்கு திமுகவே பொறுப்பு எனக் கருத்துத் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, மாணவரின் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதோடு சமூகவலைதளங்களிலும் திமுகவுக்கு எதிராகக் கருத்துகள் பரப்பப்பட்டன.

அதை எதிர்கொள்ளும் விதமாக உடனே ஓர் அறிக்கையை வெளீயிட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அதில்….

நீட் தேர்வு அச்சம் காரணமாகத் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தி – அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சிபெற முடியாத அளவுக்குக் கிராமப்புற – நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மனமுடைந்து தனுஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களைப் புரிந்துகொள்ளாத மத்திய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வரவேண்டிய மாணவ – மாணவிகள் தற்கொலைக்குக் காரணமாகத் தொடர்ந்து அமைந்து வருகிறது.

நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், மாணவ – மாணவிகள் தற்கொலைகளும் மத்திய அரசின் மனதை மாற்றவில்லை என்பது, கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் மேலும் வலுவடைய வைக்கிறது.

இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்குப் பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது. இதனை இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாக் கருதி அனைத்து மாநில முதல்வர்களின் கவனத்துக்கும் கொண்டுசென்று ஆதரவு திரட்டி, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மாணவச் செல்வங்கள் மனம் தளரவேண்டாம். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துத்தரும் பெரும் பொறுப்பும் கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பினை உணர்ந்து, நீட் தேர்வை மத்திய அரசு நீக்கும்வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்’.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையோடு நில்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளச் சென்றிருந்த உதயநிதியை உடனடியாக மாணவரின் வீட்டுக்குச் செல்ல உத்தரவிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

கறம்பக்குடி அருகே வாணக்கன்காட்டில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்துக் கொண்டிருந்த நேரத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு போன் வந்தது. அதன்பிறகு, தான் அவசரமாக கிளம்ப இருப்பதாக கூறி மணமக்களை உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.

அப்போது, “நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் வீட்டுக்குச் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுமாறு திமுக தலைவர் அறிவுறுத்தியுள்ளதால் அங்கு சாலை மார்க்கமாக புறப்படுகிறேன்” என்று கூறியதோடு அங்கு புறப்பட்டுச் சென்றார்.

இதனால், அங்கு திமுக சார்பில் நடப்பட்டிருந்த கட்சிக் கொடியைக்கூட ஏற்றாமல் அவசர அவசரமாகப் புறப்பட்டுச் சென்றார்.

அவருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் படையும் சென்றது.

அவர்கள், மாணவர் தனுஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.அதன்பின், மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.10 இலட்சம் தொகையை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அதற்குப்பிறகு, நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்ய திமுக தொடர்ந்து போராடும் என்று கூறினார்.

திமுகவின் இந்த உடனடி நடவடிக்கைகள் மூலம், மாணவர் தனுஷின் மரணத்தை முன் வைத்து திமுக எதிர்ப்பு அரசியல் நடத்த முனைந்த அதிமுகவுக்குத் தோல்வி ஏற்பட்டிருக்கிறது.

ஆனாலும், நீட்டை நிரந்தரமாக நீக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி நீட்டை இல்லாமல் செய்வதுதான் திமுகவுக்கு உண்மையான வெற்றியாக இருக்கும்.

Leave a Response