சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவினர் அமைதி காத்துவந்தனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தனித்தனியாக அறிக்கைகள் மட்டும் கொடுத்து வந்தனர்.
இப்போது இருவரும் இணைந்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த இலஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையைக் கண்டித்ததோடு திமுக ஆட்சிக்கு எதிராகப் போராட்டமும் அறிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், வளர்மதி ஆகியோருக்குக் கட்சியில் பதவி கொடுத்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சார்பட்டா பரம்பரை படத்துக்கு எதிராக அறிக்கை கொடுக்கிறார்.
இப்படி திடீரென அதிமுக சுறுசுறுப்படைந்திருப்பது அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதற்குக் காரணம் சசிகலாதான் என்றும் சொல்கிறார்கள்.
அவர், கட்சியினரோடு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோதே பதட்டப்பட்டு அவரை வேலைக்காரி என்றெல்லாம் விமரிசித்தார்கள்.
இப்போது அவர் தொலைக்காட்சிகளில் பேட்டிகள் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். அவற்றில் வரும் கேள்விகளுக்கு எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் ஆணித்தரமாகப் பதிலளிக்கிறார். அதோடு அதிமுக தொண்டர்கள் எல்லோரும் என் பக்கம் நிற்கிறார்கள். அவர்கள் என்னைக் கட்சிக்குத் தலைமையேற்க அழைக்கிறார்கள் என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறார்.
இதனால், ஓபிஎஸ், இபிஎஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் மிகவும் பயந்துபோயிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சியின் மூத்த தலைவர்கள் எல்லோருமே ஜானகி அணியில் இருந்தார்கள். ஆனால் அதிமுக தொண்டர்களோ ஜெயலலிதாவைத் தலைவியாக ஏற்றுக்கொண்டார்கள்.
அந்த வரலாறு மீண்டும் திரும்பிவிடுமோ? என்கிற அச்சம் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஏற்பட்டிருக்கிறதாம்.
அதனால், அதிமுக மிகவும் வேகமாக இயங்குவதாகக் காட்டிக்கொள்ளத்தான் போராட்ட அறிவிப்பு மற்றும் அறிக்கைகள் எல்லாம் என்கிறார்கள்.
ஆனால், எல்லாவற்றையும் தாண்டி அதிமுக தொண்டர்கள் சசிகலாவை தலைவியாக ஏற்றுகொள்ளத் தயாராகிவிட்டதாக அரசியல்பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.
பார்ப்போம்.