முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கு – கைபேசி ஆதாரங்கள் சிக்கின

நாடோடிகள் திரைப்படம் உட்பட சில படங்களில் நடித்துள்ள நடிகை சாந்தினி(36), மே 28 ஆம் தேதி அதிமுக அமைச்சரவையில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது புகாரளித்தார். அதில், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன்- மனைவி போல் குடும்பம் நடத்தி ஏமாற்றி விட்டார். 3 முறை கருவுற்ற என்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்து மணிகண்டன் என்னை ஏமாற்றிவிட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார்.

அந்த புகாரின்படி அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐபிசி 313, 323, 376, 417, 506(i) மற்றும் 67(ஏ) தொழில் நுட்ப சட்டப்பிரிவு உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை 2 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இதற்கிடையே, நண்பர்கள் உதவியுடன் பெங்களூரு எலட்க்ரானிக் சிட்டி அடுத்த கெப்பகோடி பகுதியில் பெங்களூரு கல்குவாரி தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ரிசாட்டில் பதுங்கி இருந்த மணிகண்டனை, கைபேசி அலைவரிசை உதவியுடன் தனிப்படையினர் நேற்று முன்தினம் அதிகாலை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 2 கைபேசிகள் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், சென்னை அழைத்து வரப்பட்ட மணிகண்டனிடம், அடையார் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மணிகண்டன் காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. நாங்கள் இருவரும் சம்மதத்துடன் குடும்பம் நடத்தினோம். நான் சாந்தினியை கட்டாயப்படுத்தி குடும்பம் நடத்தவில்லை என்று மட்டும் கூறியுள்ளார்.

கருக்கலைப்பு குறித்து அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. அதேநேரம் நிர்வாண படங்கள் அனுப்பி மிரட்டியதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அதைதொடர்ந்து போலீசார் மணிகண்டனை நேற்று முன்தினம் மாலை சைதாப்பேட்டை 17 ஆவது நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் வீட்டில் ஆஜர்படுத்தி வரும் ஜூலை 2 தேதி வரை சிறையில் அடைத்தனர்.

அதைத்தொடர்ந்து மணிகண்டனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 கைபேசிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் வழக்கிற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. அதன்பின் 2 கைபேசிகளையும் சைபர் க்ரைம் காவல்துறை உதவியுடன் ஆய்வு செய்தபோது, நடிகை சாந்தினியுடன் ஒன்றாக படுக்கை அறையில் நிர்வாண நிலையில் எடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் இருந்ததாம்.

அதை தனது போனில் தனி போல்டராக வைத்து இருந்தது தெரியவந்தது. அதில் பெரும்பாலான காணொலிகள் குளியல் அறையில் இருவரும் ஒன்றாக குளிக்கும் காட்சிகள் மற்றும் படுக்கை அறையில் இருவரும் மது அருந்தும் காட்சிகள். இந்த சம்பவங்களில் இருவரும் நிர்வாண நிலையில் இருந்த காட்சிகள் பதிவாகி உள்ளதாம்.

எனினும் அதன் உண்மைத் தன்மை அறிய தடயவியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதேநேரம், மணிகண்டன் தலைமறைவாக இருக்க உதவி செய்த பெங்களூரு கல்குவாரி உரிமையாளரின் கைபேசியைத்தான் மணிகண்டன் பயன்படுத்தி வந்துள்ளார். பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்று தெரிந்தும் அடைக்கலம் கொடுத்ததும் இல்லாமல் அவருக்கு தனது கைபேசியைக் கொடுத்து உதவியதால் கல்குவாரி உரிமையாளரைக் கைது செய்து விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் நடிகை சாந்தினியை மணிகண்டனுக்கு அறிமுகம் செய்து வைத்து பல வகையில் உதவிய செய்து வந்த பரணி என்பவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த வழக்கில் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு முழு விபரங்கள் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Response