அதிமுக சசிகலா கைக்குள் செல்லும் – பாதிக்கப்பட்டவர் உறுதி

அதிமுக தலைமை, முன்னாள் அமைச்சர் ஆகியோரை விமர்சித்த சசிகலா ஆதரவாளரின் கார் நள்ளிரவில் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி காமராஜர் நகரை சேர்ந்த கான்ட்ராக்டர் வின்சென்ட் ராஜா. அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடன், சசிகலா கைபேசியில் பேசிய குரல்பதிவும் வெளியானது.

இதனால் அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்தனர்.

இதற்கிடையே பரமக்குடி அருகே காவனூரில் உள்ள தனது தார் பிளான்ட்டில் வின்சென்ட் ராஜா நேற்று முன்தினம் தங்கியுள்ளார். நள்ளிரவு 3 மணி அளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால், வெளியே வராமல் சிசிடிவி கேமராக்களை பார்த்துள்ளார்.

அப்போது வெளியில் நிறுத்தியிருந்த தனது கார் தீ பிடித்து எரிந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.உடனே இரவுநேர ரோந்து காவல்துறையினர் சென்று பார்வையிட்டனர். தீயணைப்புத் துறையினர் வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது.

காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பாார்த்தபோது இரு மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வந்து, காரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது பதிவாகி இருந்தது. அதையொட்டி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிகழ்வு பற்றி வின்சென்ட் ராஜா கூறுகையில், ‘‘நான் சசிகலாவுடன் செல்போனில் பேசியதிலிருந்து எனக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்தன. தற்போது நேரடியாக என்னைக் கொலை செய்யத் திட்டமிட்டு இங்கு வந்துள்ளனர். வெளியில் நிறுத்தியிருந்த காரில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர். அதிமுக தலைமை மற்றும் மண்டலப் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆகியோரை விமர்சனம் செய்ததால், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இதைச் செய்துள்ளனர். எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் இறுதியில் அதிமுக சசிகலா கைக்குள் தான் செல்லும். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்’’ என்றார்.

Leave a Response