சசிகலா கார் மாறி பயணம் செய்வது ஏன்? – டிடிவி.தினகரன் விளக்கம்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையாகியுள்ள சசிகலா மீண்டும் தமிழகம் திரும்பியிருக்கிறார். காரில் அதிமுக கொடியுடன் தமிழக எல்லையான ஜூஜூவாடி வந்த சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதி அருகே அதிமுக கொடியுடன் வந்து கொண்டிருந்த நிலையில், சசிகலாவின் காரில் இருந்து அதிமுக கொடி திடீரென அகற்றப்பட்டது. தொடர்ந்து, கொடி அகற்றப்பட்டு வேறு ஒரு காரில் அதிமுக கொடியுடன் சசிகலா தமிழக எல்லையை வந்தடைந்தார்.

அவருக்கு அமமுக தொண்டர்கள் மலர்தூவியும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தடையை மீறி காரில் அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி காவல்துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காரில் இருந்த படியே தனியார் செய்தி நிறுவன செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சசிகலாவுக்கு நோட்டீஸ் தர காவல்துறைக்கு அதிகாரம் இல்லை. காரில் சிறு கோளாறு ஏற்பட்டதால் தான் சசிகலா தனது காரை மாற்றினார். உடனடியாக வேறு கார் இல்லாததால், அதிமுக ஒன்றியச் செயலாளரின் காரில் சசிகலா பயணிக்கிறார்.

அமமுக தொண்டர்கள் யாரும் அதிமுக கொடியைப் பிடிக்க மாட்டார்கள். சின்னம்மாவை வரவேற்க வந்த அதிமுக தொண்டர்கள்தான் கொடி பிடித்துள்ளனர். சசிகலாவுக்கு அதிமுகவினரே வரவேற்பளித்து வருகின்றனர். சசிகலா வருகைக்கு இடையூறு செய்பவர்கள், நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாவார்கள். அதிமுக மற்றும் இரட்டை இலையைக் கைப்பற்றும் பணி தொடரும்.

காவல்துறை நடுநிலையுடன் செயல்படாவிட்டால் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். காவல்துறை நடுநிலை தவறுவது நீதிமன்ற அவமதிப்பாகும்; அதற்குரிய பலனை அவர்கள் அனுபவிப்பார்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response