330 கிமீ பயணம் செய்ய 23 மணி நேரம் – சசிகலாவுக்கு வரவேற்பு டிடிவி.தினகரன் நெகிழ்ச்சி

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 2017 ஆம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்த நிலையில் 2021 சனவரி மாதம் 27 ஆம் தேதி விடுதலையானார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிகிச்சைக்குப் பின் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தேவனஹல்லியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி 7 நாட்கள் ஓய்வுவெடுத்தார்.

ஓய்வை முடித்துக்கொண்டு திட்டமிட்டப்படி நேற்று காலை 7.45 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை புறப்பட்டார். புரோகிதர்கள் குறித்துக்கொடுத்த 7.45 மணிக்கு அதிமுக கொடி கட்டிய ஜெயலலிதாவின் காரில் புறப்பட்டார். சசிகலாவுடன் டி.டி.வி தினகரன், வெங்கடேஷ், வழக்குரைஞர் செந்தூர் பாண்டியன், உறவினர் இளவரசி, அவரது மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் பயணித்தனர்.

பெங்களூரு-ஓசூர் சாலையில் சசிகலா வரும் போது வழித்துணை ஆஞ்சநேயசாமி கோயிலில் சசிகலா தரிசனம் செய்தார். ஓசூர் அடுத்த ஜூஜூவாடி என்ற தமிழக எல்லைப் பகுதிக்குள் காலை 10.45 மணிக்கு சசிகலாவின் கார் வந்தது. அப்போது, ஓசூர் டிஎஸ்பி மற்றும் மாவட்ட வருாய் அலுவலர் ஆகியோர் காரை வழி மறித்தனர். பின்னர், காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்ற வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கினர். அப்போது காவல்துறையினருக்கும், தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கொடி கட்டப்பட்ட அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சம்பங்கி என்பரின் காருக்கு மாறினார். அதே காரில் அவர் சென்னை நோக்கி பயணத்தைத் தொடங்கினார்.

வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே வரும் போது சசிகலா காரில் இருந்தவாரே தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது: அன்புக்கு நான் அடிமை, தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை, தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால், அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன். தொண்டர்களுக்காக நிச்சயமாகத் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன். அமைச்சர்கள் புகார்கள் கொடுப்பது அவர்களின் பயத்தையே காட்டுகிறது. விரைவில் மக்களைச் சந்திப்பேன். சந்திக்கும் போது விரிவாகப் பேசுவேன் என்றார். அதிமுக தலைமை அலுவலகம் செல்வீர்களா? என்ற நிருபர்களின் கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றும், அதிமுகவைக் கைப்பற்றுவீர்களா என்ற கேள்விக்கு, இதுகுறித்து விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். அப்போது விரிவாகப் பேசுகிறேன் என்றார்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் பூவிருந்தவல்லி நசரத்பேட்டை பகுதிக்கு வந்தடைந்தார் சசிகலா.
அவருக்கு திருவள்ளூர் கிழக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா, பூவிருந்தவல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏழுமலை ஆகியோர் கட்சியினருடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அப்போது, சுமார் 2 டன் பூக்களை சசிகலா காரின் மீது தூவி பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் வாணவேடிக்கையுடன் உற்சாகமான வரவேற்பை அளித்தனர். சசிகலாவிற்கு வெள்ளியால் ஆன விநாயகர் சிலை, ரூபாய் நோட்டு மாலை என வழங்கப்பட்டது. அப்போது தொண்டர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ராமாபுரம் வந்தடைந்தார் சசிகலா. அங்கு எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டிற்குச் சென்று அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அங்கிருந்து புறப்பட்ட அவருக்கு சைதாப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வர சுமார் 330 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க சுமார் 23 மணி நேரம் ஆனது. பிப்ரவரி 8 காலையில் பெங்க்ளூருவில் புறப்பட்ட அவர் பிப்ரவரி 9 (இன்று) காலை ஆறரை மணியளவில் தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீட்டுக்கு வந்தார்.

இதுகுறித்து அறிக்கை வெளீயிட்டுள்ள டிடிவி.தினகரன், 8.2.21 காலையில் தொடங்கி 9.2.21 காலை வரை சிரித்த முகத்தோடு சின்னம்மாவுக்கு அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா வருகை – முக்கிய நிகழ்வுகள்

சசிகலாவை வரவேற்க, கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே திரண்ட தொண்டர்களின் கார்கள், டோல்கேட் அருகே காலி இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. அவரது வருகைக்கு முன்னதாகவே, தொண்டர்கள் திடீரென பட்டாசுகளை வெடித்தனர். அப்போது, கதவு திறந்த நிலையில் நின்றிருந்த ஒரு காரில் தீப்பொறி பட்டு திடீரென எரியத் தொடங்கியது. பின்னர், மளமளவென பரவத்தொடங்கிய தீ, அருகே இருந்த மற்றொரு காருக்கும் பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொண்டர்கள் அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்ற கார்களை விரைந்து அப்புறப்படுத்தினர். தகவலின் பேரில் கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால்,அதற்குள் 2 கார்களும் முழுவதுமாக எரிந்து நாசமானது.

சசிகலாவுக்கு கார் கொடுத்தவர் உள்பட 7 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்

சசிகலா சென்னை வரும்போது கட்சிக் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று போலீசார் கெடு விதித்தனர். இதனால் பெங்களூரில் இருந்து ஜெயலலிதாவின் காரில் சசிகலா வந்தார். தமிழக எல்லை வந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சம்பங்கியின் காரில் பயணம் செய்தார். இதனால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அவரைப் போல, வரவேற்பில் கலந்து கொண்டதற்காக ஒன்றிய விவசாயப் பிரிவு செயலாளர் சந்திரசேகர ரெட்டி, ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதி ஜானகி ரவீந்திர ரெட்டி,கொம்மேப்பள்ளி ஊராட்சி தகவல் தொழில் நுட்பப் பிரிவு பொறுப்பாளர் பிரசாந்த் குமார், ஒன்றிய இளைஞர் பாசறை தலைவர் நாகராஜ், சிங்கிரிப்பள்ளி, சூளகிரி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஆனந்த், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.

Leave a Response