மொத்த அமெரிக்காவுக்கும் தெரிந்த தில்லி விவசாயிகள் போராட்டம் – அதிரும் இந்திய அரசு

3 வேளாண் சட்டங்களை இரத்து செய்யக்கோரி, தில்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சர்வதேச பிரபலங்கள் பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவாக, பாப் நட்சத்திரம் ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மற்றும் அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸின் வழக்கறிஞர் மருமகள் மீனா ஹாரிஸ் ஆகியோர் உட்பட பலர் பதிவிட்டுள்ளனர்.

அமெரிக்கப் பாடகி ரிஹானா, விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்தியைப் பகிர்ந்து, ‘ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதர்கு பதிலளிக்கும் விதமாக சச்சின் தெண்டுல்கர் போட்ட ட்வீட்டால் பலத்த சர்ச்சை உருவானது.

ரிஹானா ட்வீட் கிளப்பிய சர்ச்சை போதாதென்று போராட்டம் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கிறது. அமெரிக்காவில் சூப்பர் பௌல் (Super Bowl) எனப்படும் கால்பந்துப் போட்டி மிகவும் பிரபலம். அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்வுகளிலேயே அதிக அளவு பார்வையாளர்கள் கொண்ட ஒரே நிகழ்வு இதுதான்.

இந்தியாவில் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் போல அங்கே சூப்பர் பௌல் என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் 30 நொடி விளம்பரம் ஒன்று போடுவதற்கு கட்டணம் 5.5 மில்லியன்கள்! அதாவது ஏறக்குறைய 40 கோடி!

அமெரிக்க கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்த சீக்கிய சமூகம் இணைந்து நிதி திரட்டி இந்த ஆண்டு சூப்பர் பௌல் நிகழ்ச்சியில் ஒரு விளம்பரம் வெளியிட்டு இருக்கிறது. வேளாண் போராட்டங்கள் குறித்து இந்த விளம்பரம் பேசுகிறது.

ரிஹானா ட்வீட்டை குறிப்பிட்டு அது இந்தியாவில் உருவாக்கிய அலைகள் குறித்தும் பேசுகிறது. இந்திய அரசின் ஒடுக்குமுறைகள் குறித்தும் சொல்லி விட்டுப் போராட்டத்துக்கு அமெரிக்க மக்களின் ஆதரவைக் கோருகிறது.

ரிஹானா ட்வீட்டுக்கு வந்த ஆதரவைப் பார்த்து அரண்டவர்களுக்கு இதோ அடுத்த காட்சி: இப்போது மொத்த அமெரிக்காவுக்கும் வேளாண் போராட்டங்கள் குறித்தும் அதனை அரசு அணுகிய விதம் குறித்தும தெரிந்து போய் விட்டிருக்கும்.

இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்களும் பாலிவுட் நடிகர்களும் இணைந்து நிதி திரட்டி இந்திய அரசின் தாயுள்ளம் குறித்தும், மோடியை அன்னை தெரசாவுடன் ஒப்பிட்டும் ஒரு விளம்பரம் ஒன்றை அமெரிக்காவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவை மறுபடி உன்னதமாக ஆக்குகிறேன் என்று சொல்லி ஆட்சியை ஆரம்பித்த டிரம்ப், ஆட்சி முடியும் பொழுது அமெரிக்க மானத்தை சந்தி சிரிக்க வைத்து விட்டுப் போனார். பண்டைய இந்தியாவின் பெருமைகளை தொடர்ந்து பேசி ஆட்சிக்கு வந்த கட்சியின் நடவடிக்கைகள் இன்றைய இந்தியாவின் மானத்தை வாங்கிக் கொண்டு இருக்கிறது.

– ஸ்ரீதர் சுப்பிரமணியன்

அந்த விளம்பரம்…

Leave a Response