தில்லி விவசாயிகள் போராட்டத்தைத் திசைதிருப்பிய நடிகர்

குடியரசு நாளில் தில்லியில் நடந்த போராட்டத்தின் போது காவல்துறை தாக்குதல் தடியடி கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு ஆகியன நடந்ததால் இந்திய அரசுக்கு மிகுந்த கெட்டபெயர். அதேநேரம் திலி செங்கோட்டைக்குள் நுழைந்து கொடியேற்றி வன்முறையில் ஈடுபட்டதாக விவசாயிகள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இது திட்டமிட்ட சதி என்கிறார் எழுத்தாளர் இரா.முருகவேள்.

அவருடைய பதிவு….

நேற்றைய டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் சீக்கியர் கொடி ஏற்றியவர் தீப் சித்து என்ற பஞ்சாபி நடிகர் என்பதும் அவர் பிஜேபி எம்பி சன்னி தியோல்க்கு நெருக்கமானவர் என்பதும், வெளியாகியுள்ளது. தீப் சித்து மோடி, அமித் ஷா ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இந்த தீப் சித்து பிஜேபி ஆள் என்று தொடக்கம் முதலே விவசாயிகள் சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இவர் தனியாக ஒரு இடத்தில் தளம் அமைத்து போராட்டம் நடத்தி வந்தார். டிராக்டர் பேரணியில் ஒரு பகுதி தடம் மாறி செங்கோட்டை செல்லவும் இவர்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. சீக்கியர் கொடி ஏற்றப்பட்டதுமே விவசாயிகள் இவர்மேல் கோபம் கொண்டு விரட்டி அடிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

தீப் சித்து தலைவர் ஆகும் எண்ணத்தில் கூட இப்படி நடந்து கொண்டு இருக்கலாம்.ஆனால் வேறு சில விசயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

இவர் காலிஸ்தான் தலைவர் பிந்தரன் வாலேவை மேற்கோள் காட்டிப் பேசியது குறித்து விவசாயிகள் தலைவர் யோகேந்திர யாதவ் முன்பே போலீசில் புகார் கொடுத்துள்ளார். இவருடன் சதானா என்ற ஒருவரும் இருந்துள்ளார். அவர் பல வழக்குகளில் தொடர்புடையவர். ஆனால் அவர்மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே . . .

முன்பெல்லாம் போராட்டங்களின் போது அரசு போராட்டத் தலைவர்களில் சிலரை மிரட்டியும், ஆசை காட்டியும் திசை திருப்பும். துரோகிகளாக மாற்றும்.

இப்போது திட்டவட்டமான தலைமை இல்லாமல் தன்னெழுச்சியாகப் போராட்டங்கள் தோன்றுவது வழக்கமாகி விட்டது. எனவே போராட்டம் தொடங்கும் போதே விசித்திரமான நபர்கள் உள்ளே நுழைந்து தலைமையைக் கையில் எடுத்துக் கொள்கின்றனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது லாரன்ஸ், ஆதி போன்ற நடிகர்கள் திடீர் தலைவர்களாக மாறிவிட்டனர். பின்பு காணாமல் போனார்கள்.

நெருக்கடியின் போது இவர்கள் அரசை ஆதரித்தது நன்கு தெரிந்தது.

தமிழகத்தில் போராட்டத்தின் தீவிரத்தைக் குறைத்து அது கை மீறிப் போகாமல் தடுக்க அரசுக்கு இந்த நடிகர்கள் உதவினர்.

விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாத முத்திரை குத்த நடிகர் தீப் சித்து உதவி இருக்கிறார்.

திடீர் தலைவர்களாக உருவாகக்கப்பட ஏற்கெனவே மக்களிடம் பிரபலமாக உள்ள நடிகர்கள் நல்ல மெட்டீரியல் ஆகப் பயன் படுகின்றனர். இவர்களை குறுகிய காலத்தில் போராட்டத்தின் முகமாகவும் செய்தித் தொடர்பாளர்கள் ஆகவும் மாற்றிவிட முடியும்.

இது ஒரு புது டிரெண்ட் போலிருக்கிறது.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response