திருவள்ளுவருக்குக் காவி உடை – தமிழக அரசுக்கு டிடிவி.தினகரன் கண்டனம்

பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் புகட்டுவதற்காக தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை கல்வித் தொலைக்காட்சி நடத்தி வருகிறது. அதில், திருவள்ளுவருக்குக் காவி உடை தரித்து அவருக்குக் ‘காவி வண்ணம்’ பூசப்பட்டுள்ளது.

இதற்கு கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியிருப்பதாவது…..

உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்த வள்ளுவப் பெருந்தகையை எந்தவொரு மதத்திற்குள்ளும், சித்தாந்தத்திற்குள்ளும் வண்ணம் பூசி அடைக்க முயற்சிப்பது சரியானதல்ல. அதிலும் தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியே இப்படியொரு தவறு செய்வது கண்டிக்கத்தக்கது.

வள்ளுவர் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவானவர். அவரது சிந்தனைகள், மதங்களைக் கடந்து மனிதர்கள் அனைவரும் பின்பற்றத்தக்கவை. திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, அதிலும் குறுகிய எண்ணத்தோடு செயல்படக்கூடாது.

எனவே, தமிழக அரசின் கல்வித்துறை உடனடியாக இந்தத் தவறைச் சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response