புதுச்சேரி கிரிக்கெட் அணியில் தமிழர்களுக்கு இடம் கோரி த தே பேரியக்கம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி கிரிக்கெட் அணியில் 90% இடங்களை புதுச்சேரி தமிழருக்கே ஒதுக்கீடு செய் எனும் கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதுகுறித்த விவரம்….

தொடர்ந்து இந்திக்காரர்ளும், வடமாநிலத்தவர்களும் மட்டுமே புதுச்சேரி கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் நிலையில், புதுச்சேரி அணியில் 90% இடங்கள் புதுச்சேரி – காரைக்கால் தமிழர்களுக்கே ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று (26.12.2020) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி இராசா திரையரங்கம் அருகில் இன்று (26.12.2020) காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், புதுச்சேரியில் மட்டைப்பந்து விளையாடும் தமிழர்களும், பல்வேறு அரசியல் கட்சி – இயக்க உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

“ஒதுக்கிடு, ஒதுக்கிடு, புதுச்சேரி கிரிக்கெட் அணியில் 90% இடங்களை தமிழர்களுக்கே ஒதுக்கிடு”, “இந்திக்காரர்களை அணியில் திணிக்கும் சி.ஏ.பி. கிரிக்கெட் சங்கத்தை புதுச்சேரி அரசே தடை செய்!”, “தனி கிரிக்கெட் சங்கம் அமைத்து, புதுச்சேரி தமிழர்களுக்கே இடம் வழங்க நடவடிக்கை எடு” என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் இரா.வேல்சாமி தலைமை தாங்கினார். பாரதிதாசன் புதுச்சேரி கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் சங்கச் செயலாளர் க.சந்திரன் முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி போராளிகள் இயக்கம் சுந்தர், பாரதிதாசன் புதுச்சேரி கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் சங்கப் பொருளாளர் சுந்தரமூர்த்தி, பி.சண்முகசுந்தரம் (சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் கிளப்) ஆகியோர் கிரிக்கெட் சங்கத்தில் நடக்கும் ஊழல்களையும், முறைகேடுகளையும் தங்கள் கண்டன உரையில் வெளிச்சமிட்டுக் காட்டினர்.

மட்டைப்பந்து வீரர்களை ஒருங்கிணைக்கும் எஸ்.சரவணன் (சரவணா ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கிளப்), கே.பாஸ்கர் (ஏ.எப்.டி. கிரிக்கெட் கிளப்), தி.விசுவநாதன் (மெர்குரி கிரிக்கெட் கிளப்), பி.சிவகுரு (புதுவை சூப்பர் கிங்ஸ்), ஆ.சதீஷ் (அரசூர் – பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப்), தே.சந்தோஷ் (இலாசுப்பேட்டை – சகாரா கிரிக்கெட் கிளப்) ஆகியோர் தங்கள் அணி மட்டைப்பந்து வீரர்களுடன் நிகழ்வில் பங்கேற்றனர். கிரிக்கெட்டில் சாதனைகளைப் புரிந்துவரும் சேலம் சின்னம்பட்டி தமிழன் தங்கராசு நடராசனின் முகம் பொறித்த முகமூடியை அணிந்து கொண்டு, அவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி, ஏ.ஐ.யு.டி.யு.சி. தலைவர் வழக்கறிஞர் செ.பு.சங்கரன், நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க செயலாளர் த.இரமேசு, கைவினைஞர்கள் வாழ்வுரிமைக் கட்சிப் பொதுச்செயலாளர் ஜெ. தனாளன், ஜாக்சியா – அரசு ஊழியர் சங்க கூட்டுப் போராட்டக் குழு சார்பில் திருமதி.சுமித்ரா ஆகியோர் தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் புறக்கணிக்கப்படுவதை எடுத்துக்கூறி கண்டன உரையாற்றினர்.

உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி தலைவர் கோ.தமிழுலகன், தமிழர் களம் தலைவர் கோ.அழகர், புதுச்சேரி தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ.சடகோபன், புதுச்சேரி மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஆ.உதயசங்கர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி – இயக்கப் பொறுப்பாளர்களும், சாரம் தே.சத்தியமூர்த்தி, கிருமாம்பாக்கம் பட்டாபி, விசயகணபதி, கடலூர் மணி, காரைக்கால் திருநாவுக்கரசு, செல்வி தமிழழகி, சத்தியா உள்ளிட்ட திரளான த.தே.பே.உறுப்பினர்களும் சிறுவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Response