கேரளா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் – முழுவிவரம்

கேரளாவில் உள்ள 941 கிராம ஊராட்சிகள், 152 வட்டார பஞ்சாயத்து, 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள், 14 மாவட்ட ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரசு தலைமையிலான கூட்டணி, பா.ஜனதா கூட்டணி ஆகியன தனித்தனியாகப் போட்டியிட்டன.

தேர்தலில் மொத்தம் 78.64 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.

தொடக்கம் முதலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி பல இடங்களில் முன்னணியில் இருந்தது. காங்கிரசுக் கூட்டணி 2 ஆவது இடத்தில் இருந்தது. பின்னர் மாலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. இதையடுத்து அந்தக் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

அதுபோன்று காங்கிரசுக் கட்சியும் கணிசமான இடங்களை பிடித்து உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள் விவரம் வருமாறு:-

கிராம ஊராட்சிகள் (941)

மார்க்சிஸ்ட் கம்யூ. கூட்டணி – 514

காங்கிரசுக் கூட்டணி – 375

பா.ஜனதா- 23

சுயேச்சை – 29

வட்டார பஞ்சாயத்துகள் (152)

மார்க்சிஸ்ட் கம்யூ. கூட்டணி- 108

காங். கூட்டணி – 44

நகராட்சிகள் (86)

மார்க்சிஸ்ட் கம்யூ. கூட்டணி- 35

காங். கூட்டணி – 45

பா.ஜனதா- 2

சுயேச்சை- 4

மாவட்ட ஊராட்சிகள் (14)

மார்க்சிஸ்ட் கம்யூ. கூட்டணி- 10

காங். கூட்டணி- 4

மாநகராட்சிகள் (6)

மார்க்சிஸ்ட் கம்யூ. கூட்டணி- 5

காங். கூட்டணி – 1

5 மாநகராட்சிகளில் கம்யூனிஸ்டு வெற்றி

மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, திருச்சூர், கொச்சி ஆகிய 5 மாநகராட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளும், கண்ணூர் மாநகராட்சியை காங்கிரசும் கைப்பற்றி உள்ளது. வட்டார பஞ்சாயத்து, மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் பா.ஜனதாவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

Leave a Response