டிசம்பர் 19 முதல் புதிய தளர்வுகள் – தமிழக முதல்வர் அறிவிப்பு

கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார். இதன்படி, திறந்தவெளியில் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் நடத்த அனுமதிக்கப்படுகிறது. திறந்தவெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 விழுக்காடு அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் பங்கேற்கலாம்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கை…..

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும்தான் நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி, திறந்தவெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 விழுக்காடு அளவிற்கு மிகாமல் பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் வரும் 19 ஆம் தேதி முதல் நடத்த அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையரிடம் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.

பொதுமக்கள் வெளியே செல்லும் போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியைத் தவறாமல் கடைபிடித்தும், அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த முடியும். எனவே, பொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response