காங்கிரசு அமோக வெற்றி – கட்சியினர் உற்சாகம்

கேரளாவில் 6 மாநகராட்சிகள், 87 நகராட்சிகள், 941 கிராம ஊராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள், 14 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 1,200 உள்ளாட்சி அமைப்புகளும், அவற்றில் 23,612 வார்டுகளும் உள்ளன. இதில் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. நிர்வாக காரணங்களால், மட்டனூர் நகராட்சிக்கு மட்டும் 2027 செப்டம்பரில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தொடக்கம் முதலே காங்கிரசு தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி(யுடிஎஃப்) அதிக உள்ளாட்சி அமைப்புகளில் முன்னிலையில் இருந்தது.

கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 6 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் கொச்சி, திருச்சூர், கண்ணூர் மாநகராட்சிகள் காங்கிரசுக் கூட்டணி வசமாகியுள்ளன. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி முதல்முறையாகக் கைப்பற்றியுள்ளது. கொல்லம், கோழிக்கோடு மாநகராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது.

மொத்தம் உள்ள 14 மாவட்ட ஊராட்சிகளில் காங்கிரசு, மார்க்சிஸ்ட் கூட்டணிகள் தலா 7 மாவட்ட ஊராட்சிகளைக் கைப்பற்றியுள்ளன. 86 நகராட்சிகளில் காங்கிரசு கூட்டணி 54, மார்க்சிஸ்ட் கூட்டணி 28 நகராட்சிகளைக் கைப்பற்றின. 152 ஊராட்சி ஒன்றியங்களில் காங்கிரசு கூட்டணி 79, மார்க்சிஸ்ட் கூட்டணி 63-ஐ பெற்றுள்ளன.

மொத்தம் உள்ள 941 ஊராட்சிகளில் காங்கிரசு கூட்டணி 504, மார்க்சிஸ்ட் கூட்டணி 341 ஊராட்சிகளில் வெற்றி பெற்றன. ஒரு நகராட்சி, 10 ஊராட்சி ஒன்றியங்கள், 64 ஊராட்சிகளில் இழுபறி நிலை காணப்படுகிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக உள்ளாட்சித் தேர்தல் கருதப்படுகிறது. இந்தத் தேர்தல் வெற்றி காங்கிரசுக் கூட்டணிக்கு ஊக்கம் தருவதாக உள்ளது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதனால் காங்கிரசுக் கட்சித் தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Leave a Response