தில்லி விவசாயிகள் போராட்டம் – அதானியைத் தொடர்ந்து அம்பானியும் அலறல்

அதானி அலறியதையும் அறிக்கை விட்டதையும் இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். இன்று அம்பானி அலறுகிறார்.

ஜியோவிலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் வெளியேறுகிறார்களாம். “விவசாயிகள் போராட்டத்தை ஆதரியுங்கள், ஜியோவிலிருந்து வெளியேறுங்கள்” என்று தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல்லும் வோடபோனும் மெசேஜ் அனுப்புகிறார்களாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிராய் க்கு புகார் செய்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.

அம்பானி, டேட்டாவுக்கு அலைவரிசையை ஏலமெடுத்து வாய்ஸ்க்கு மாற்றினார். வரம்பு மீறிய காலத்துக்கு இலவச சேவை அளித்து வாடிக்கையாளர்களை வளைத்து விட்டு பின்னர் விலை உயர்த்தினார். பி.எஸ்.என்.எல் கம்பி வடங்களை நாசமாக்கினார். சந்தை ஏகபோகத்தைக் கைப்பற்றுவதற்காக எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்த அம்பானி, இன்று தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக அலறுகிறார்.

அம்பானி அதானி நிறுவனங்கள், பொருளாதார ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்படாவிடினும், அவர்கள் இந்திய மக்களின் எதிரிகள் என்பதும், மோடி அரசு அவர்களது அடிமை என்பதும் பொதுக்கருத்தில் பதிவாகிவிட்டது.

இதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆர்.எஸ்.எஸ் இன் முன்னணி அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்சின் மாநாட்டுத் தீர்மானத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். (RSS affiliate picks holes in laws, warns against monopoly by MNCs, The Tribune,14.12.20)

அதன் அனைத்திந்திய மாநாடு கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறது:

“சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைத் தடை செய்யவேண்டும்.
ஒரேயொரு ஏகபோக நிறுவனம், விவசாயிகளையும் நுகர்வோரையும் சுரண்டும் வகையில் சட்டம் இருக்கக் கூடாது.
குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக்க வேண்டும்.
விவசாயி என்று ஒரு கார்ப்பரேட் கம்பெனியையே இந்தச் சட்டம் வரையறுக்கிறது. இதனை மாற்றவேண்டும்.”

“ஹிந்து ஹ்ருதய சாம்ராட்”டுக்கு எதிராக சங்கிகளே தீர்மானம் போட வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை!

காலிஸ்தான், மாவோயிஸ்டு பூச்சாண்டிகளெல்லாம் போணியாகாத நிலையில், பஞ்சாப் – அரியானா வுக்கு இடையிலான நீண்டகாலத் தண்ணீர்ப் பிரச்சனையான, சட்லஜ் – யமுனா இணைப்புக் கால்வாய் பிரச்சனையைக் கிளப்பி பஞ்சாப் விவசாயிகளுக்கு எதிராக அரியானா விவசாயிகளைக் கொம்பு சீவ முடியுமா என்று பார்க்கிறார் அரியானாவின் விவசாயத்துறை அமைச்சர்.

“இந்த நேரத்தில்தான் நமக்கு சுலபமாக அப்பாயின்ட்மென்ட் கிடைக்கும். உடனே டெல்லிக்குப் போய் மோடிக்கு ஆதரவு கொடுத்துவிட வேண்டியதுதான்” என்று, தமிழ்நாடு, தெலுங்கானா, பிகார் போன்ற மாநிலங்களிலிருந்து, பச்சைத் துண்டணிந்த சில அல்லக்கைகள் கிளம்பி விட்டார்கள். மந்திரி தோமரை சந்தித்து “ஆதரவு” தெரிவித்து போட்டோ எடுத்து போட்டுக் கொள்கிறார்கள்.(தமிழ்நாட்டிலிருந்து போன இந்த அல்லக்கை யாரென்று தெரியவில்லை)

எல்லையில் வந்து குவிந்த வண்ணம் இருக்கும் விவசாயிகள் கூட்டத்தைக் கண்டு கதிகலங்கி, “போதும் இதற்கு மேல் கூட்டம் சேர்க்காதீர்கள்” என்று விவசாய சங்கத் தலைவர்களிடம் இரகசியமாக கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் அரியானா போலீஸ் அதிகாரிகள்.

நிலைமை இப்படி இருக்க பாஜக வின் தேசியச் செயலர் அருண் சிங் “நாட்டின் 99% விவசாயிகள் மோடியின் பக்கம்” அண்ணன் மேல கை வெச்சி பாருங்கடா என்று சவால் விடுகிறார். மோடியோ, “விவசாயிகளை வேண்டுமென்றே குழப்புவதற்கு சதி நடக்கிறது” என்று குஜராத்துக்குச் சென்று குமுறுகிறார்.

அண்ணன் மோடி, அரை பாடி வண்டியிலேயே கம்பியைப் பிடிக்காமல் நிற்கக்கூடியவர். அவர் இப்போது பேலன்ஸ் பண்ணுகிறாரா, தடுமாறுகிறாரா என்று சக சங்கிகளால் ஒரு தீர்மானத்துக்கு வர முடியவில்லை.

நெடுஞ்சாலையில் காய்கறி விவசாயம்!

மோடியின் நிலை இவ்வாறிருக்க, திக்ரி நெடுஞ்சாலையில் காய்கறி பயிரிடத் தொடங்கியிருக்கிறார்கள் விவசாயிகள்.

“சாலைகளுக்கு இடையிலுள்ள பகுதியில் மண் அருமையாக இருக்கிறது. கொத்தமல்லி, காலி ஃபிளவர், முள்ளங்கி, கீரையெல்லாம் போட்டிருக்கிறோம். வீட்டுத் தோட்டம்னு வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் ஆத்ம நிர்பார். இதுவும் ஒரு போராட்டம்தான். கோரிக்கை நிறைவேறாமல் இங்கிருந்து கிளம்ப மாட்டோம் என்று மோடிக்கு புரிய வைக்கின்ற போராட்டம்” என்கிறார்கள் விவசாயிகள்.

மெரினாவின் ஜல்லிக்கட்டுக் காட்சி நினைவுக்கு வருகிறது. மேடையில் யார் யாரோ பேசியவண்ணம் இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் பேசலாம். பேச விரும்பினால் தனது ஊர், பெயர் மற்றும் விவரங்களை எழுதிக்கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட மதம் அல்லது கட்சி பற்றிப் பேசக்கூடாது. அவ்வளவுதான் நிபந்தனை.

கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என்று காலை 11 மணி முதல் பகல்பொழுது துடிப்புடன் நகர்கிறது. பகல் நேரத்தின் திறந்த மேடைதான் இரவு நேரத்தில் பலருக்குப் படுக்கையறை.

நன்கொடையாகப் பொருட்கள் வந்த வண்ணமிருக்கின்றன. உண்டியலில் பணம் சேர்கிறது. அன்று இரவு பணத்தை எண்ணி, கணக்கு வைத்து, தேவையான பகுதிகளுக்குப் பிரித்துத் தருகின்றனர்.

இரவுச் சாப்பாடு 12 மணி வரையில் தொடர்கிறது. குளிருக்கு சூடான தேநீரைப் பருகிய வண்ணம், கும்பல் கும்பலாக இளைஞர்கள் கூடி நின்று அரசியல் விவாதம் நடத்துகிறார்கள். முன் பின் தெரியாதவர்களும் போர்வைகளையும் விரிப்புகளையும் பரிமாறிக் கொள்கிறார்கள்.

விவசாயிகளிடையே பிரச்சனையை உருவாக்கி போராட்டத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கையாக 200 மீட்டருக்கு நான்கு பேர் என இரவு ரோந்து செல்கிறார்கள் தொண்டர்கள்.

காலை நான்கரை மணிக்கெல்லாம் துப்புரவுப் பணி, சமையல், தேநீர் … என காலைப்பொழுது சுறுசுறுப்பாகத் தொடங்குகிறது. (Night at the farmers protest, Ind exp, 14.12.20)

குளிர் 4 டிகிரிக்கு கீழே போய்க் கொண்டிருக்கிறது. நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. “களைப்படைந்து வெளியேறுவார்கள்” என்று மோடி அரசு நம்பக்கூடும். அரசியல் ரீதியாகவோ, மத ரீதியாகவோ பிளவை ஏற்படுத்தவும் அவர்கள் முயற்சிக்கக்கூடும்.

அது எளிதல்ல. நிலைமை அவ்வாறு இல்லை.

அன்று, “கேளாத செவிகள் கேட்கட்டும்” என்று நாடாளுமன்றத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக குண்டு வீசினான் பகத்சிங்.

இன்று, மோடி அரசுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் எழுப்பியிருக்கும் போர்க்குரல், நாடெங்குமுள்ள விவசாயிகளின் காதுகளை மெல்ல எட்டி வருகிறது. உ.பி, ம.பி, அரியானா, ராஜஸ்தான் எனப் பல மாநில விவசாயிகளும் டில்லியை நோக்கி வந்த வண்ணமிருக்கிறார்கள்.

ராஜஸ்தான் விவசாயிகளை ஜெய்ப்பூர் – டில்லி நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தியிருக்கிறது அரியானா போலீஸ். மோடி அரசு டில்லிக்குள்ளே மனிதர்களை அனுமதிக்க மறுப்பதால், மாடுகளைப் பெரும்படையாக அனுப்பியிருக்கிறார்கள் ராஜஸ்தான் விவசாயிகள்.

கோமாதாவுக்கும் தடைதான்.

தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் இடம் எது தெரியுமா? ஆல்வார் நகரம்.

பெஹ்லுகான் அடித்துக் கொல்லப்பட்ட அதே நகரத்தில், அதே நெடுஞ்சாலையில், கோமாதாக்களும் ஹிந்து விவசாயிகளும் மோடிக்கு எதிராக முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கவித்துவ நீதி என்பது இதுதானோ?

– மருதையன்

Leave a Response