தமிழ்நாடு பிறந்த நாள் ஏன் கொண்டாட வேண்டும்?
இந்தக் கேள்விக்கு தமிழ்நாடு தமிழ் மாநிலமாக உருவான நாளிலேயே பதில் அளித்திருக்கிறார் அறிஞர் அண்ணா.
அவர் தன் தம்பிக்கு எழுதிய கடிதத்தில். 1956 நவம்பர் 4 தேதியிட்ட திராவிட நாடு இதழில் வெளிவந்த அந்தக் கடிதம். முழுமையாக.
வாழ்க தமிழகம், வருக திராவிடம்!
– அறிஞர் அண்ணா
தமிழகம் திருநாள் கொண்டாடுகிறது – தாயகம் விழாக் கோலம் பூண்டிருக்கிறது – திருநாட்டைப் பெற்றோம்,
இனி இதன் ஏற்றம் வளரத்தக்க வகையிலே பணிபுரிதலே நமது தலையாய கடன் என்று, தமிழ்ப் பெருங்குடி மக்களெல்லாம் உறுதி கொண்டிடும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது – கொடியும், படையும், முரசும் அரசின் முறையும் வேறு வேறு எனினும், எல்லா முற்போக்குக் கட்சிகளும், தாயகத்தின் திருவும் திறனும் செழித்திடப் பணியாற்ற வேண்டும் என்பதிலே, முனைந்து நிற்கின்றன – புதிய தமிழகம் கண்டோம், இது புதியதோர் உலகிலே உரிய இடம் பெற்றுத் திகழ்ந்திட வேண்டும் – நாம் அனைவரும் அதற்கான வழியிலே தொண்டாற்றும் திறன் பெறல் வேண்டும் என்ற ஆர்வம் மலர்ந்திருக்கிறது.
நவம்பர் திங்கள் முதல் நாள், புதிய தமிழகம் உருவாகிறது. ஓர் அரை நூற்றாண்டுக் காலமாக, அரசியல் தெளிவும் நாட்டுப் பற்றும் கொண்டோரனைவரும், நடத்தி வந்த இலட்சியப் பயணம், தடைபல கடந்து படை பல வென்று ஆயாச அடவிகளையும், சஞ்சலச் சரிவுகளையும் கடந்து வெற்றிக் கதிரொளி காணும் இடம் கொண்டுவந்து சேர்ந்திருக்கிறது.
– இன்று நம்முன் தோன்றி, நம்மை எலாம் மகிழ்விக்கும் இத்தாயகம், புதியதோர் அமைப்பு அன்று ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே இந்த மாநில முழுதும், மதிப்பும் பெற்றிருந்த மணித்திருநாடாகும். இடைக் காலத்திலே இடரும் இடியும் தாக்கின, இழிநிலைக்கு இழுத்துச் சென்று அழுத்திவைக்கப்பட்டிருந்தது; இன்று கட்டுண்ட நிலைபோயிற்று, தளைகள் நொறுங்கின, தமிழகம் புதிய கோலம் காட்டி நம்மை மகிழ்விக்கிறது.
மக்களாட்சியின் மாண்பும் பயனும் மிகுதியும் மொழிவழி அரசு மூலமே கிட்டும் என்று அரை நூற்றாண்டாகப் பேசி வந்தனர் பேரறிவாளர், போரிட்டனர் ஆற்றல் மிக்கோர், அந்த உயரிய குறிக்கோளை அழித்துவிட முனைந்தனர் ஆணவக்காரர், எனினும், எல்லா இடையூறுகளையும் காலச் சம்மட்டி நொறுக்கித் தூளாக்கிற்று. கருத்துக்கு விருந்தாய் அமைகிறது தமிழகம்.
புதிய தமிழகம் – ஏதேதோ புதுமைகள் நிகழ்ந்திடும் என்று எதிர்பார்த்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்றன்று, அது ஆட்சி அலுவலைச் செம்மையுடையதாகச் செய்விக்கும் ஒரு வசதி தரும் ஏற்பாடு – வேறில்லை – என்று எண்ணுவோர், புதிய தமிழகம் கண்டு, மக்கள் விழாக்கொண்டாடுவதன் கருத்து யாது, அவர்தம் அகமும் முகமும் மலர்ந்திடும் காரணம் என்ன என்பதறியாது கிடக்கின்றனர்.
அட்லிக்கும் ஸ்டீவன்சனுக்கும், அபிசீனிய மன்னருக்கும், அயிசனவருக்கும், இது, வெறும் ஏற்பாடுதான் – அரசியல் அலுவலுக்காகச் செய்து கொள்ளப்படும் நிர்வாக அமைப்புத்தான்! அவர்களால், அதற்குமேல் இது குறித்து உணர்ந்திடமுடியாது – அவர்கள் தமிழர் அல்லர் என்ற காரணத்தால். தமிழர்க்கோ, தமிழ்நாடு புதிய அமைப்பாகக் கிடைப்பது, மன எழுச்சி அளித்திடுவதாகும். முத்தம் வெறும் ‘இச்சொலி’தானே, இதிலென்ன சுவை காண்கிறாய் என்று, தான் பெற்றெடுத்த பாலகனை உச்சிமோந்து முத்தமிடும் தாயிடம் கேட்பார் உண்டா! தமிழர், தமிழகம் கண்டோம் என்று களிநடமாடி, விழாக்கொண்டாடும்போது, இதிலே என்ன பெரிய சுவை கண்டுவிட்டீர்கள், முன்பு இருந்த ராஜ்ய அமைப்பு நிர்வாக காரியத்துக்குக் குந்தகம் விளைவிப்பதாக இருந்தது, அதன் பொருட்டு, இப்போது ‘ராஜ்ய சீரமைப்பு’ செய்துள்ளோம், இதனாலேயே தமிழர், ஆந்திரர், கேரளத்தார். கருநாடகத்தார் என்றெல்லாம் கருத்திலே உணர்ச்சிகளை வளரவிட்டுக் கொள்ளாதீர்கள்; அனைவரும் இந்தியர், அது நினைவிலிருக்கட்டும், யாவரும் பாரத நாட்டினர், அதனை மறந்துவிடாதீர்கள் என்று நேரு பண்டிதர்கூடப் பேசுகிறார். அவருடைய மனது குளிர நடந்து கொள்வதுதான் இன்றைய அரசியல் சூழ்நிலையில் பலன் அளிக்கும் என்று எண்ணும் பலரும், அதுபோன்றே பேசிடக் கேட்கிறோம்.
தமிழருக்குத் தமிழகம் அமைகிறது என்பதனால் ஏற்படும் எழுச்சி, எங்கே, ஊட்டிவிடப்பட்டிருக்கும் பாரதம் – இந்தியர் – என்பன போன்ற போலித் தேசியத்தைத் தேய்த்து, மாய்த்து விடுமோ, புதிய தமிழகம் என்று பூரிப்புடன் பேசத்தொடங்கி, தாயகம் என்று பெருமையுடன் பேசத் தொடங்கி விடுவார்களோ என்ற அச்சம், எல்லாத் தேசிய இனங்களையும் ஒரே பட்டியில் அடைத்து, எதேச்சாதிகாரத்தால் ஆட்டிப்படைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்போருக்கு இருக்கத்தான் செய்கிறது. எனவேதான் அவர்கள், அட்லி போலவும், அபிசீனிய மன்னர் போலவும், இதெல்லாம் நிர்வாக ஏற்பாடு என்று கூறுகின்றனர். மாலை விலை ஆறணா என்பது மட்டுந்தான், மலர் விற்போனால் அறிய முடிந்தது – அதனை மங்கை நல்லாளுக்காகப் பெறுகிற மணவாளன் அல்லவா அறிவான், மாலையைக் கண்டதும் கோலமயில் சாயலாள், குமுதவிழிப் பாவையாள், பாகுமொழியாள், அடையும் மகிழ்ச்சி எத்துணை சுவையுள்ளது என்பதனை.
தமிழகம் புதிய அமைப்பாகிறது என்பதிலே காணக்கிடைக்கும் எழுச்சியைத் தமிழர் மட்டுமே முழுதும் பெறமுடியும் – மற்றையோர் முயற்சித்தும் பலன் இல்லை. ஓரளவுக்கு இந்த இயற்கையை அறிய முடிந்ததனாலேயே, நேரு பண்டிதர், காந்தியார் காலத்திலே வாக்களிக்கப்பட்ட திட்டமாகிய மொழிவழி அரசு பற்றி முகத்தைச் சுளித்தபடி பேசவும், அது என்ன பித்தம் என்று கேலி செய்யவும், அது வெறி அளவுக்குச் சென்று விடாமற் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை ஏவவும் முற்பட்டார். உலக அரங்கிலே காணக்கிடக்கும் பிரச்சினைகளை அறிந்தவர், உயர்நிலையில் அமர்ந்திருக்கும் நேரு பண்டிதர். தேசிய இன எழுச்சி வரலாறுகளைத் தெரிந்தவர். அழுத்திவைக்கப்பட்ட தேசிய எழுச்சி, என்றேனும் ஓர் நாள் வெடித்துக் கிளம்பிடும் என்ற பேருண்மையை அறிந்தவர். பல தேசிய இனங்களை தலைதூக்கவிடாதபடி அடக்கி ஒடுக்கி ஆட்சி நடாத்தியோர் இறுதியில், என்ன கதியாயினர் என்பதைப் படித்திருக்கிறார். தேசிய இன எழுச்சியை அலட்சியப் படுத்தும், அறிய மறுக்கும், அப்பாவிகள் பட்டியலில் அவர் பெயரை அறிவிலியும் சேர்த்திடத் துணியமாட்டான்.
அவர் காண்கிறார், மேலை நாடுகளிலே, காலம் கிடைத்ததும், புயலெனக் கிளம்பிடும் தேசிய இன எழுச்சிகளை. எனவே நேரு பண்டிதர், ‘மொழிவழி அரசு’ எனும் திட்டத்தை அமலாக்குவதில், தாமதம் தயக்கம் காட்டினார், காலத்தை ஓட்டினார், பிறகு கட்டுக்கு அடங்காத நிலைகிளம்பும் என்பதற்கான குறிதோன்றியதும் மொழிவழி அரசு எனும் திட்டத்தை மூளியாக்கியே தந்திருக்கிறார். மூளியாக்கப்பட்ட நிலையிலும், மொழிவழி அரசு என்பது, புதியதோர் நம்பிக்கையை, ஊட்டும் என்பதையும் அறிந்து, ‘பாரதத்தை மறவாதீர்! இந்தியர் என்பதை நினைவிலே கொள்ளுங்கள்! இதெல்லாம் வெறும் நிர்வாக ஏற்பாடு!’ என்று பன்னிப் பன்னிக் கூறுகிறார் – அவருக்குப் பக்கம் நின்று அதே பல்லவியைப் பாடப் பல கட்சிகள் உள்ளன.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரதமணித் திருநாடு! என்று அவர்கள் கீதம் இசைப்பது அனைவரும் வாழவேண்டும் என்ற நல்லறத்தைக் கூறுவதற்காக மட்டுமல்ல – தமிழர்காள், தமிழகம் பெறுகிறீர்கள்! புதிய அமைப்பு! விழாக் கொண்டாடுகிறீர்கள்! உற்சாகம் பெறுகிறீர்கள்! அதுவரையில் சரி – ஆனால் இந்த உற்சாகத்தை உறுதுணையாக்கிக்கொண்டு தனி அரசு என்று பேச ஆரம்பித்துவிடாதீர்கள் – பாரதமணித் திருநாட்டை வாழ்த்துங்கள்! – என்று கூறி, கட்டிவிடப்பட்டிருக்கும் அந்தப் போலித் தேசியத்தைக் காப்பாற்றும் நோக்கத்துடனும்தான், பாடுகின்றனர்.
பாரதமணித் திருநாடு என்று பாடுவதும், சொந்தம் கொண்டாடுவதும், பரந்த மனப்பான்மை, பண்புக்கு அறிகுறி; தமிழ்நாடு என்று மட்டும் கூறிக்கிடப்பது குறுகிய மனப்பான்மை; கிணற்றுத் தவளைப்போக்கு அறிவீரா? என்று வாதாடுவோர் உளர்! தம்பி! விரிந்து பரந்த மனப்பான்மையைத் தமிழருக்கு எவரும் புதிதாகக் கற்றுத்தர வேண்டியதில்லை! பாரில் இந்தப் பண்பு பேச்சளவுக்கேனும் வளருவதற்குப் பன்னெடுங் காலத்துக்கு முன்பே ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று பாட்டு மொழியிற் கூறிய பண்பாளர் தமிழர்! எனவே, பரந்த மனப்பான்மையைத் தமிழர்க்கு அளித்திட ஆசான்கள் தேவை இல்லை – தமிழருக்கு அந்தப் பாடத்தைக் காட்டி, ஓர் பேரரசுக்குக் குற்றேவல் புரியும் எடுபிடியாக்கிடவே முனை கின்றனர் என்று ஐயப்பாட்டுக் கிடமின்றித் தெரிகின்றபோது, எங்ஙனம் அதனை நீதிநெறி விளக்கமென்று கொள்ள முடியும்.
போராற்றலால் பெற்ற வெற்றிகளைப் பேரரசு அமைத்திடப் பயன்படுத்தியவர்களிலே பலரும், தமது இரும்புக் கரத்தின் மூலமே, அந்தப் பேரரசுகளை முடிந்த வரையில் கட்டிக் காத்தனர் – பிறகோ, தேசிய இன எழுச்சி சூறாவளியாகி, சாம்ராஜ்யங்களைச் சுக்கு நூறாக்கி விட்டிருக்கிறது.
கிரேக்க சாம்ராஜ்யம், ரோமானிய சாம்ராஜ்யம், உதுமானிய சாம்ராஜ்யம் என்பவைகளெல்லாம் இன்று பாடப் புத்தகங்கள் – படித்து அதுபோல் சாம்ராஜ்யங்கள் கட்டப் பயிற்சிபெற அல்ல – பேரரசு வேண்டும் என்று தோன்றும் மன அரிப்பை அடக்கிக் கொள்வதற்கான பாடம் பல பெற!
நேரு பண்டிதர் இந்த உண்மைகளை நன்கு அறிவார் – அறிந்த காரணத்தாலேயே. அவர், மிகச் சாமர்த்தியமாக நடந்து கொள்வதாக எண்ணிக் கொண்டு, பல்வேறு முறைகளாலும், மறைமுக வழிகளாலும், பாரதம் எனும் பேரரசுக்குள்ளே அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பல்வேறு தேசிய இனங்களையும், தத்தமது தேசியத்தன்மையை, நினைப்பை இழந்துவிடச் செய்யப் பார்க்கிறார். இதனை எதேச்சாதிகாரியின் குரலிலே அவர் கூறவில்லை – வரலாறு தெரிந்திருப்பதால் – இனிக்கப் பேசினால் இளித்துக் கிடப்பர் என்று திட்டமிட்டுக் காரியமாற்றி வருகிறார்! கேட்போருக்கு மன மயக்கம் ஏற்படச் செய்யும் விதமான விசாரம் நடத்தி, இந்தியா – இந்தியர் – என்பன போன்ற கற்பனைகளைக் கவர்ச்சிகரமானதாக்கிக் காட்டி, போலித் தேசிய போதையை ஊட்டி, தமிழர் போன்ற தேசிய இனத்தவர்களை, தாசர்களாக்கிடப் பார்க்கிறார். மொழி, கலை, ஆகியவற்றால் தனித் தன்மை பெற்றிருப்பதை அழித்திட இந்தியை ஏவுகிறார்… சல்லாபி வடிவத்தில்!! இந்தியை, அஞ்சல் நிலையத்திலும், அங்காடி அலுவலுக்கும், அரசாங்க காரியத்துக்கும், புகுத்தும் நேரத்திலேயும், தமிழ் என்ன சாமான்யமானதா, உயர் தனிச் செம்மொழி என்று மொழி வல்லுநர் பலர் கூறக் கேட்டுள்ளேன், இந்தி மொழி தமிழ் கொலுவிருக்கும் இடத்தருகேயும் வரத் தகுதியற்றது, என்றாலும், வசதிக்காக, நிர்வாக ஏற்பாட்டுக்காக, பாரதத்தின் ஐக்கியத்துக்காக இந்தியைத் தேசிய மொழியாகக் கொள்ளத்தான் வேண்டும் என்று பேசுகிறார்.
கிழப்புலி பொன்காப்பு காட்டிய கதை படிக்கிறார்களல்லவா, சிறார்கள்; அதுபோல, எதேச்சாதிகாரம் கிழடு தட்டிய பருவத்திலே இவ்விதமான போக்குத்தான் கொள்ளும்.
நேரு பண்டிதர் இந்த வகையிலே, தம்பி, மிகத் திறமையாகப் பணியாற்றி வருகிறார் – என்றாலும் அவருக்கும், உள்ளூரத் தெரிகிறது, எத்தனை முறைகளைப் புகுத்தினாலும் தேசிய உணர்ச்சி அழிந்து படாது என்ற உண்மை. மொழிவழி அரசு எனும் திட்டம், மெத்தச் சிரமப்பட்டுத் தாம் தயாரிக்கும் போலித் தேசியத்தை நாளா வட்டத்திலே நைந்துபோகச் செய்துவிடும் என்று அவருக்குப் புரிகிறது. எனவேதான் அவர், மொழி அரசு என்ற பிற்போக்குத் திட்டம் கூடாது, ஆகாது என்று அடிக்கடி பேசுகிறார். இதோ, புதிய தமிழக அமைப்புக்கு, விழா நடத்தப்படுகிறதே, இதன் உட்பொருள் என்ன? கம்யூனிஸ்டுக்கு இந்த விழா மகிழ்ச்சி தருவானேன்? பொது உடைமை பூத்தாலன்றோ விழா, கம்யூனிஸ்டு சித்தாந்தப்படி! புதிய தமிழக அமைப்பினைத் திருநாள் ஆக்கி மகிழக் காரணம்? இதனை அறியாயோ, பேதாய்! பேதாய்! புதிய தமிழக அமைப்பு, பொது உடைமை அடைவதற்கான பாதையிலே ஓர் கட்டமாக்கும்! என்று கடிந்துரைப்பர் கம்யூனிஸ்டுகள்! தம்பி! அவர்கள் கோரும் கம்யூனிசம், பாரதம் முழுவதற்கும் – எனவே, அதிலே, தமிழகம் என்று ஓர் எல்லை தேவை கூட இல்லை ! எனினும் எல்லை கிடைத்து, புதிய தமிழகம் எனும் அமைப்பு ஏற்பட்டதும் அவர்கள் மகிழத்தான் செய்கிறார்கள் மகிழ வாரீர் என்று மக்களையே கூட அழைக்கிறார்கள்! ஏன்? அவர்களையும் அறியாமல் அவர்களை ஆட்கொண்டிருக்கும், தேசிய இன உணர்ச்சி என்பதன்றி வேறென்ன! அவர்களிடம் கூறாதே, தம்பி. நான் கூறுவதனாலேயே அவர்களுக்கு அது கசக்கும், அவர்கள் போலந்து ஹங்கேரி இப்படிப்பட்ட இடங்களிலே வெடித்து, சிதறி, இங்கு வந்து துண்டு துனுக்குகள் வீழ்ந்த பிறகுதான், இவைகளை உண்மைகள் என்று மதிப்பளிக்க முன் வருவார்கள். நாம் சொல்லியா ஏற்றுக்கொள்வார்கள்!
புதிய தமிழக அமைப்பு, எல்லாக் கட்சியினருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆச்சாரியார் மட்டும் பாபம், துக்கமாக இருக்கிறார்!
ஐயோ! மெலிந்துவிட்டதே! சிறியதாகிவிட்டதே! சென்னை ராஜ்யம் என்றிருந்தபோது, எவ்வளவோ பெரிதாக இருந்தது – இப்போது ஆந்திரம், மலையாளம், இவை பிரிந்த நிலையில், தமிழ்நாடு என்பது சிறிய அளவாகி விட்டது என்று வருத்தப்படுகிறார்;
அவருக்கு இது விழாவாக இல்லை; விசாரப்படுகிறார்!
காரணம் காட்டாமலிருக்கிறாரா? அவராலா, முடியாது? காரணம் தருகிறார்!
பாரதத்தில். தமிழ்நாடு எனும் அமைப்பு மிகச் சிறிய ராஜ்யம் – அதனால் அதற்குச் செல்வாக்கு மத்திய சர்க்காரில் இருக்காது – பாரதத்தில் உள்ள மற்ற ராஜ்யங்கள் அளவில் பெரிது, அவைகளின் செல்வாக்கு மிகுதியாக இருக்கும் என்று ஆச்சாரியார் காரணம் காட்டுகிறார்.
ஆச்சாரியாரும் நமது கம்யூனிஸ்டு நண்பர்கள் போலவே, ‘பாரதம்’ எனும் திட்டத்தை ஏற்றுக்கொண்டுதான் பேசுகிறார். பாரதத்தில் ஓர் அங்கமாக, தமிழ்நாடு இருக்கிறது, இதன் பலனாக, எதிர்காலம் ஒளியுள்ளதாகும் என்பது கம்யூனிஸ்டு களிப்புடன் காட்டும் வாதம்.
கவலையுடன் ஆச்சாரியார் கூறுவது, பாரதத்தில் ஓர் அங்கமாக அமையும் சென்னை ராஜ்யம், அளவில் மிகச் சிறியது, எனவே அதற்கு மத்திய சர்க்காரில் மதிப்பும் செல்வாக்கும் கிடைக்காது, என்பதாகும்.
சரி, அண்ணா ! காமராஜர் என்ன கருதுகிறார் என்று என்னைக் கேட்டுவிடாதே தம்பி. நான் இப்போது, சிந்தித்துக் கருத்தளிக்கக் கூடியவர்களைப்பற்றிக் கூறுகிறேன்; எஜமானர்களின் உத்தரவை நிறைவேற்றி வைக்கும் ஊழியம் செய்து வரும் சம்பளக்காரர்களைப்பற்றி அல்ல.
காமராஜரைத்தான் நாடு நன்றாக அறிந்துகொண்டு வருகிறதே! குளமாவது, மேடாவது! என்பவர்தானே, அவர்!! –
ஏதோ, நேரு பெருமகனார் சம்மதமளித்ததால், குமரி கிடைத்தது! ‘இல்லை’ என்று டில்லி கூறிவிட்டிருந்தால் இவர் என்ன சீறிப் போரிட்டா பெற்றிருப்பார்! குமரியாவது கிழவியாவது, உள்ளது போதும், போ, போ! என்றல்லவா பேசுவார்! இனி சிந்தித்துக் கருத்தளித்திடுவோர் குறித்துக் கவனிப்போம் வா, தம்பி நமக்கேன், நாடாள்வதால் நாலும் செய்யலாம் என்ற போக்குடன் உள்ளவர் பற்றிய கவலை.
பாரதம் என்ற பேரரசு இருக்கும் – புதிய தமிழகம் அதிலே ஓர் ராஜ்யம் – என்ற ஏற்பாடு, நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற கருத்துடன் தான், கம்யூனிஸ்டும் ஆச்சாரியாரும் பேசுகின்றனர்.
தமிழ்நாடு தனி அரசு ஆகவேண்டும் என்று சொன்னாலே அவர்களுக்குத் தலை சுற்றும்!! –
ஆச்சாரியார், சென்னை ராஜ்யம் அளவில் சிறியதாகும்; எனவே மத்திய சர்க்காரிலே செல்வாக்கும் கிடைக்காது என்று கூறுகிறார் – இதன் அடிப்படை உண்மை என்ன ? மத்திய சர்க்கார் நீதியாக நடக்காது.
மத்திய சர்க்கார் பெரிய ராஜ்யத்துக்குத்தான் ஆதரவு தரும் என்ற கருத்து, வலுத்தவன் இளைத்தவனைக் கொடுமை செய்வான், பணக்காரன் ஏழையை அடிமை கொள்வான், என்பதுபோல இல்லையா! மத்திய சர்க்கார் என்ற அமைப்பிலே இருந்துகொண்டு நாம் செல்வாக்குப் பெறவேண்டுமானால் அதற்கு ஏற்ற கெம்பீரம் இருக்க வேண்டுமாம்!! இதிலிருந்தே தெரியவில்லையா, மத்திய சர்க்காருடைய போக்கின் இலட்சணம்!!
– ஏதேதோ சொல்லவேண்டுமென்று எண்ணிக்கொண்டு எதைச் சொன்னால் தாட்சணியக் குறைவு ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து பயந்து, ஆச்சாரியார் பேசுகிறார். மத்திய சர்க்கார் என்ற திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்போது அதிலே சிறிய ராஜ்யமென்ன – பெரிய ராஜ்யமென்ன!! செல்வாக்கும் மதிப்பும் பெறவேண்டிய அவசியம் என்ன வந்தது மத்திய சர்க்கார், நீதியாக, நேர்மையாக நடக்காது என்ற சந்தேகம் கொள்வானேன்! அந்தச் சந்தேகத்துக்கு இடமிருக்கிறபோது, மத்திய சர்க்கார் என்ற திட்டத்துக்கு ஒப்பம் அளிப்பானேன்! ஆச்சாரியார் இதற்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர் – கிலியை அவரே கிளப்பி இருப்பதனால்.
கம்யூனிஸ்டுகளுக்கு இந்த அச்சம் இல்லை – அவர்கள் உத்தரப்பிரதேசத்தைவிடச் சென்னைப் பிரதேசம் அளவில் சிறியதாயினும், அதன் காரணமாக, மத்திய சர்க்கார் பாரபட்சமாக நடந்துகொள்ளாது – என்று தைரியமளிக்கிறார்கள். |
தம்பி! நாமோ, இருவரும் அஞ்சிடும் திட்டம் கூறுகிறோம் – எதற்காக, மத்திய சர்க்காரின் ஆதிக்கத்தில், தமிழ் அரசை உட்படுத்துகிறீர்கள் – பிறகு, அங்கு நீதி கிடைக்குமா கிடைக்காதா என்று விவாதம் நடத்திக் கொண்டு அல்லற்படுவானேன் – தனி அரசாக இருந்தால் என்ன? என்று கேட்கிறோம். உடனே, மாறுபாடான கருத்துக்களை விநியோகித்துக் கொண்டிருக்கும் ஆச்சாரியாரும் கம்யூனிஸ்டும் கைகோர்த்துக் கொண்டு, நம் எதிரே வந்து நிற்கிறார்கள் – தனி நாடா!! ஆகாது! ஆகாது! கூடாது! கூடாது! பாரத் மாதாகீ ஜே!! என்று கோஷமிடுகிறார்கள்.
தமிழ்நாடு – அளவில் சிறியது என்று ஆச்சாரியார் கூறும்போது, கம்யூனிஸ்டுகள், அளவுபற்றி என்ன கவலை, அதற்காக அச்சம் கொள்வானேன் என்று பேசுகிறார்கள்!
தமிழ்நாடு கூட அல்ல, தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கருநாடகம் – இந்த நான்கும் மொழிவழி அரசுகளாக இருக்கும் நிலையில், ஓர் கூட்டாட்சி அமைத்துக்கொண்டு, பாரதப் பிணைப்பை நீக்கிக்கொண்டால் என்னய்யா, என்று நாம் கேட்கும் போதோ. ஆச்சாரியாரும், அவரை நோக்கி அஞ்சாதீர் என்று கூறிய கம்யூனிஸ்டும் கூடிக்கொண்டு வந்து தம்மைக் குட்டியபடி, ஏடா! மூடா! சிறுசிறு நாடுகளாகப் பிரித்தால் சீரழிவுதானே ஏற்படும், என்று குடைகிறார்கள். தம்பி! இவர்தம் போக்கை என்னென்பது!
ஆச்சாரியார் கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிக் கொள்ள அவர் காட்டும் பரிகாரம், தட்சிணப்பிரதேசம். அது கலவை! தமிழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் எனும் மொழி வழி அரசுகள் கூடாது, கிடையாது – இவையாவும் ஒரே கொப்பரையில் போட்டுக் கொதிக்க வைத்துக் குழம்பாக்கி, ஒரு வார்ப்படமாக்க வேண்டுமாம் – தட்சிணப் பிரதேசமென்று – இதை வார்த்தெடுத்து, டில்லியிடம் காட்டி ‘முத்திரை’ பொறித்துக்கொள்ள வேண்டுமாம் – இது ஆச்சாரியாரின் அவியல்!!
கம்யூனிஸ்டு திட்டம் மொழிவழி அரசு இருக்கும்; ஆனால் அது டில்லி காட்டும் வழி நடக்கும் என்பதாகும்.
நாம் கூறுவது, மொழிவழி அரசு அமையட்டும்; பிறகு, ஓர் திராவிடக் கூட்டாட்சி அமைத்துக்கொண்டு, டில்லியின் பிடியிலிருந்து விலகுவோம் என்பது!
கூட்டாட்சிக்கு, ‘திராவிட’ என்ற அடைமொழி கொடுப்பதற்குக் காரணம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கருநாடகம் ஆகிய நான்கும் திராவிட மொழிகள் என்பதாலும் திராவிட இனத்தவர் இந்த நால்வர் என்பதாலும் ஆகும்.
தட்சிணப்பிரதேசம் என்ற நாமகரணத்தைக் காட்டிலும், திராவிடநாடு – திராவிடக் கூட்டாட்சி என்று பெயரிடுவது, வரலாறு, இலக்கியம், கல்வெட்டு, மொழி நூல் அறிவு எனும் பல்வேறு ஆதாரங்களைத் துணைகொண்டதாகும்.
ஆனால், அதனைக் கூறுகிற நாம், தம்பி, சாமான்யர்கள்! ஏழையின் பேச்சு அம்பலம் ஏறவில்லை !!
எனவே தம்பி, புதிய தமிழகம் அமைகிறது – அதிலே நமது நம்பிக்கையும் மலர்கிறது. மொழிவழி அரசு – திராவிடக் கூட்டாட்சிக்குத்தான் வழிகோலும் என்பது, நமது திடமான நம்பிக்கை.
அந்த நம்பிக்கையுடனேயே நாம், புதிய தமிழக அமைப்பை, விழாவாகக் கொண்டாடுகிறோம்.
தீபாவளியுடன் அந்தத் திருநாள் இணைந்துவிட்டது – எனவே, திராவிட முன்னேற்றக் கழகம், இந்த விழாக் கொண்டாடி, இதிலிருந்து பெறக் கிடைக்கும் கருத்துகளை நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூற, வேறோர் நாளைக் குறித்திட வேண்டும் என்று, உன் சார்பிலும் என் சார்பிலும், நமது பொதுச் செயலாளரை நான் கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!!
அன்புடன்,
அண்ணாத்துரை
4-11-1956
நன்றி: வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! ; தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், தொகுதி 2. பூம்புகார் பிரசுரம்.