தமிழ்நாடு நாள் இன்று – தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

நவம்பர் 1 ஆம் தேதியான இன்று‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தமிழகத்தை மேலும் உயர்த்த உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிச்சாமியின் வாழ்த்துச் செய்தியில்….

மொழிக்காக பல காலகட்டங்களில் நம் முன்னோர் நடத்திய போராட்டங்களால் மொழிவாரியாக மாநிலங்கள் அமைந்தன. 1.11.1956 ஆம் ஆண்டு தமிழ் பேசும்பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டு மெட்ராஸ் மாநிலம் என ஆனது. இத்தகைய தனித்தன்மைமிக்க நிலப்பரப்புக்கு அண்ணாவால் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அன்று முதல் ‘தமிழ்நாடு’ எனும் பெயர் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கிறது.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ‘தமிழ்நாடு நாள் விழா’ சென்ற ஆண்டு முதல் நவம்பர் 1 ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அண்ணாவைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவர்களின் நெறியைப் பின்பற்றி, தற்போதும் தமிழ்வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ‘தமிழ் தன்னையும் வாழ வைத்துக் கொண்டு பிற மொழிகளையும் வளர்த்தெடுக்கும் ஆற்றலைப் பொருந்திய மொழி’ என்று அண்ணா எடுத்துக் காட்டியுள்ளார். அவர்தம் வழியில் தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதில் தொடர்ந்து பாடுபடுவோம் என்ற உறுதி ஏற்போம்.

இவ்வாறு தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு நாளையொட்டி தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்…..

பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஒருமைப்பாட்டின் அடையாளமாக விளங்குபவை மொழிவாரி மாநிலங்கள். மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்க வேண்டும் என்று கோரி ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர் ஈந்ததை அடுத்து, 1953 இல் ஆந்திரா என்ற தனி மாநிலம், தெலுங்கு பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்டது.

இதையடுத்து, தேசிய இனங்களைச் சார்ந்த மக்களின் கோரிக்கையால், 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பல உருவாயின. நவம்பர் 1, 1956 அன்று சென்னை மாகாணத்துடன் இருந்த திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் வாழ்ந்த பகுதிகள் முறையே ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டன.

தமிழகத்தைப் பொருளாதார வலிமைமிக்க மாநிலமாகவும் கல்வி, தொழில் வளர்ச்சி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகவும் உருவாக்கியதில் திமுக அரசின் பங்கு மகத்தானது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்டி, அண்ணா பெருமைப்படுத்தினார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1 ஆம் நாளில், நாம் தமிழ்மொழி, இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று, மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் மீட்டெடுப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Response