மோடி உரையில் ஒன்றும் இல்லை – மக்கள் நிம்மதிப் பெருமூச்சு

2016 நவம்பர் 8 இரவு எட்டு மணிக்கு 500,1000 ரூபாய் தாள்கள் செல்லாதென பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பின் அவர் கொரொனாவின் தொடக்கத்தில் ஊரடங்கை அறிவித்தார். இவற்றின் காரணமாக மோடி உரை என்றாலே மக்கள் திகிலடையத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றுவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அதன்படி அவர் மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளதாவது…..

கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா மிக நீண்ட போராட்டத்தை மேற்கொண்டு வருகிறது. பெரிய போராட்டத்தை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் தைரியத்துடன் மக்கள் தங்கள் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்றனர்.

ஊரடங்கு வேண்டுமானால் நீக்கப்பட்டிருக்கலாம், ஆனால் கொரோனா வைரஸ் இன்னமும் இருக்கிறது, எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பல நாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதனைக் கொண்டு வரும் முயற்சியில் உலக நாடுகளுடன் இந்தியாவும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும். அவ்வாறு மருந்து கிடைக்கும் போது அதனை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் கொண்டு செல்லும் நடவடிக்கையையும் நாம் தொடங்கியுள்ளோம்.

எனவே நாம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். பண்டிகைக்காலம் நெருங்குவதால் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிறிய கவனக்குறையும் பெரிய பாதிப்பை உண்டாக்கி விடக்கூடும். எனவே மக்கள் கவனத்துடன் வரும் காலங்களில் இருக்க வேண்டும். அடுத்த சில மாதங்களையும் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டிய தேவை நமக்கு உள்ளது.

அதுமட்டுமின்றி குளிர்காலமும் வர இருப்பதால் அதிகக் கவனம் வேண்டும். நவராத்திரி, தீபாவளி என பல பண்டிகைகள் வருகின்றன. எனவே இந்தக் காலத்தில் எச்சரிக்கை தேவை.

நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இந்தப் பண்டிகைக் காலம் உங்கள் வீடுகளில் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

இந்த எச்சரிக்கை கொரோனா தொடங்கியதிலிருந்து ஓவ்வொரு கைபேசியிலும் கேட்கும் அறிவுரைதான்.அதனால் மோடியின் உரை மிகவும் பொதுவானதாக அமைந்துவிட்டதால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

Leave a Response