சூரப்பாவை உடனே பதவி நீக்குக – ததேபே செயற்குழு கோரிக்கை

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், 2020 அக்டோபர் 12 அன்று தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் நா.வைகறை, பழ.இராசேந்திரன், க.அருணபாரதி, கோ.மாரிமுத்து, க.முருகன், இரெ.இராசு, க.விடுதலைச்சுடர், ம.இலட்சுமி, தை.செயபால், மு.தமிழ்மணி, வே.க.இலக்குவன், பி.தென்னவன், மா.மணிமாறன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில், அண்மையில் மறைவுற்ற தமிழின உணர்வாளரும், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளருமான “தமிழ் முழக்கம்” சாகுல் அமீது, நா.த.க. ஆன்றோர் அவையச்செயலாளர் இரா.பத்மநாபன், புதுச்சேரி தமிழின உணர்வாளர் பெ.பராங்குசம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மகளும், அருளியார் அவர்களின் வாழ்க்கை இணையருமான “தழல்” பெ. தேன்மொழி அம்மாள், தமிழ்த் திரைப்படப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமை மீட்புக்குப் பங்காற்றிய லோக் சனசக்தி கட்சித் தலைவர் இராம்விலாஸ் பாஸ்வான், மதச்சார்பற்ற சனதா தளம் பொதுச்செயலாளர் மதுரை ஜான் மோசஸ் ஆகியோர்க்கும், இந்திய அரசின் “நீட்” தேர்வால் பலி வாங்கப்பட்ட தமிழ்நாட்டு மாணவ – மாணவியர்க்கும் இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1

தமிழ்நாட்டை இந்தி மண்டலமாக்கும் வெளியாரைத் தடுக்க ஒத்துழையாமை கடைபிடிப்பீர்!

இந்திய ஆட்சியாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டைக் குறிவைத்துத் தாக்கி வருகிறார்கள். சட்டப்படி தமிழர்களின் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதை இந்தி மண்டலமாக மாற்றிடத் துடிக்கிறார்கள். தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் இந்தி பேசுவோரை மிக அதிகமாகக் குடியேற வைத்துவிட வேண்டும் என்பது அவர்களின் திட்டம்!

இதற்காக, தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் அனைத்திந்திய அளவில், போலியான தேர்வுகளை நடத்தி இந்திக்காரர்களை 100க்கு 90 விழுக்காட்டுக்கு மேல் வேலையில் சேர்க்கிறார்கள். ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதி, வினா விடைத்தாள்களை முன்னமே பெற்று தேர்வெழுதி தமிழ்நாட்டுப் பணிகளிலே சேர்ந்தவர்களைத் தமிழர்கள் அம்பலப்படுத்திய பின் வழக்குகளில் சிக்கிக் கொண்டு இந்திக்காரர்கள் கைதாகியுள்ளனர். திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி படைக்கலத் தொழிற்சாலை போன்றவற்றில் வேலையில் சேர்ந்த பின்னர் பலர் சிக்கிக் கைதாகி வழக்குகள் நடக்கின்றன. தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் பணி சேர்ப்பு, தமிழ்நாடு அஞ்சல் துறை ஆகியவற்றின் தேர்வுகளில் மோசடி செய்து கைதானவர்கள் சாட்சியமாக உள்ளனர். அவர்கள் மீதும் வழக்கு இருக்கிறது.

இவ்வளவு அம்பலமான பிறகும், தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் இந்த இனப்பாகுபாட்டு சூழ்ச்சிகளைக் கண்டித்து, ஒரு சொல் பேசியதில்லை. எதிர்காலத்தில் இவற்றைத் தடுக்க அக்கறை காட்டியதுமில்லை! இந்திய அரசுப் பணிகளில் மட்டுமின்றி, தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர் சேரலாம் என 2016 செப்டம்பரில், தமிழ்நாடு அரசே சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. தமிழ் மொழி தெரியாவிட்டாலும் பணியில் சேர்ந்த பின் இரண்டு ஆண்டுகளில் கற்றுக் கொள்ளலாம் என்று அத்திருத்தம் கூறுகிறது.

இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணிகளில் மட்டுமின்றி, தனியார் துறை பணிகளிலும் இந்திக்காரர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல், தமிழ்நாட்டு இளைஞர்கள் தெருவில் நிற்கின்றனர்.

தமிழர்கள் சொந்தமாகத் தொழில் வணிகத்தில் ஈடுபடவும் வாய்ப்பில்லாத அளவிற்கு, மார்வாடிகள் – குசராத்திகள் – ஆந்திரத் தெலுங்கர்கள் – மலையாளிகள் உள்ளிட்டோர் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வணிகத்தை – பொருளியலைத் தங்கள் கைக்குள் வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் மளிகைப் பொருட்கள் தொடங்கி மின்னணுப் பொருட்கள் வரை மொத்த வணிகமும், மனை வணிகமும் வெளியாரின் ஏகபோகத்திலேயே உள்ளது.

தமிழ்நாட்டுத் தனியார் நிறுவனங்களில், கட்டுமானத்துறையிலிருந்து வேளாண் துறை வரையிலும் வெளி மாநிலத்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் புகுந்துள்ளனர்.

தமிழ்நாட்டிற்குள்ளேயே தமிழர்களின் தொழில் – வணிகம் – வேலை வாய்ப்பு ஆகியவை முற்றிலுமாக வெளி மாநிலத்தவர்களின் கைகளில் சிக்கியுள்ளது. இதை மீட்டெடுத்து, தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நின்று வெளியாருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும்! ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக காந்தியடிகள் முன்னெடுத்த ஒத்துழையாமை இயக்கம் போல், தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்களுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கத்தை நாம் நடத்தியாக வேண்டும்! தமிழ்நாட்டு வேலைகள் – தொழில் – வணிகம் ஆகியவை தமிழர்களுக்கே உறுதி செய்யப்பட, பிற மாநிலங்களில உள்ளதைப் போல் தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும்.

வெளி மாநிலத்தவர்களுக்கு வீடு வாடகைக்குத் தரக் கூடாது; நிலம் விற்கக் கூடாது; அவர்களின் கடைகளில் பொருள் வாங்கக் கூடாது; அவர்களின் நிறுவனங்களுடன் வணிகம் செய்யக் கூடாது; அவர்களை நம் கடைகளில் – தொழிலகங்களில் பணியமர்த்தக் கூடாது; அவர்களுக்கு வாக்காளர் அட்டை – குடும்ப அட்டை வழங்கக் கூடாது என தமிழ்நாட்டிற்குள்ளேயே வெளியாருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நாம் கடைபிடிக்கத் தொடங்க வேண்டும்.

தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1 ஆம் நாளைத் தமிழ்நாடு அரசு “தமிழ்நாடு நாள்” என அறிவித்துக் கடைபிடிக்கும் சூழலில், அதே நவம்பர் 1 ஆம் நாளலிருந்து – தமிழர்களின் தாயகத்தைப் பாதுகாக்க தமிழர் ஒத்துழையாமை இயக்கத்தைத் தமிழ் மக்கள் கடைபிடிக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 2

சனநாயகப் போராட்டங்களை ஒழிக்க காவல்துறை கடைபிடிக்கும் கமுக்கப் பாசிசத்தைக் கைவிட வேண்டும்!

சட்டத்திற்கு உட்பட்டும் சனநாயக மரபுகளுக்கு உட்பட்டும் வெகுமக்கள் தங்களுடைய ஞாயங்களுக்காக நடத்தும் கோரிக்கை அறப்போராட்டங்களை ஒழித்துக் கட்டுவதற்காக தமிழ்நாடு காவல்துறை புதியவகை ஒடுக்குமுறைகளை அண்மைக்காலமாகக் கையாள்கிறது.

காவல்துறையின் இந்த கமுக்கப் பாசிசம் (சீக்கிரட் பாசிசம்) கொரோனா காலத்தில் தோன்றியது அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறான சட்ட விரோத ஒடுக்குமுறைகளில் காவல்துறை களமிறங்கியுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்தினால்கூட, அந்த ஆர்ப்பாட்டம் நடக்கும்போது அனுமதித்துவிட்டு, முன் கைது செய்தாலும் மாலையில் விடுவித்துவிட்டு, அதன்பிறகு இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பழிவாங்கும் முறையை தமிழ்நாட்டுக் காவல்துறை கடைபிடித்து வருகிறது.

அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் அல்லது அடையாள மறியல் – முற்றுகைப் போராட்டங்களில் கலந்து கொள்ள முனைவோரை குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 151-இன் கீழ் முன் கைது செய்து, மண்டபத்தில் அடைத்துவைத்து மாலையில் விடுதலை செய்வது அனுப்பிவிடுகிறார்கள். மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழித்து, கடவுச்சீட்டு வாங்கவோ, அரசு பணியில் சேரவோ முயலும் இளைஞர்களைத் தங்கள் மீது குற்ற வழக்கு இல்லையென்று, அவர்கள் சார்ந்த காவல் நிலையத்தில் சான்று வாங்கி வரும்படி கேட்கிறார்கள். அவ்வாறு போகும்போது, கணிப்பொறியில் அவர்களில் பலரின் பெயர் நிலுவையில் உள்ள குற்றவழக்குப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இதனால், அவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பும், அரசுப் பணியில் சேரும் வாய்ப்பும் தடுக்கப்பட்டு, பெரும் துயரத்தில் தவிக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் ஆயத்தினர், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு கோரி – அதற்கான அடையாளப் போராட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டம் – கல்லாக்கோட்டையிலுள்ள தனியாருக்குச் சொந்தமான கால்ஸ் டிஸ்டிலரீஸ் என்ற சாராய உற்பத்தி ஆலையை முற்றுகையிடும் போராட்டத்தை 14.05.2019 அன்று நடத்துவதாக அறிவித்தார்கள். அன்று மகளிர் ஆயத்தின் தமிழ்நாடு தலைவர் திருவாட்டி. ம. இலட்சுமி அம்மாள் தலைமையில் கல்லாக்கோட்டையில் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கடைத் தெருவில் சாலை ஓரமாகக் கூடினார்கள். அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் மேற்படி சாராய ஆலை இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டக் காவல் அதிகாரிகளும், கந்தர்வக் கோட்டை காவல்துறையினரும் பாதுகாப்புப் பணிக்கு அங்கு வந்திருந்தார்கள்.

“நாங்கள் சாலையின் இடதுபுற ஓரமாக போக்குவரத்துக்கு இடையூறின்றி ஆலையை நோக்கிச் செல்கிறோம். நீங்கள் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமொ எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறிவிட்டு, முழு மதுவிலக்குக் கோரி முழக்கமெழுப்பியவாறு பெண்கள் ஊர்வலமாகச் சென்றார்கள். ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வாறு பெண்கள் சென்றபின், அவர்களைக் கைது செய்வதாக அறிவித்துக் காவல்துறையினர் தங்கள் ஊர்திகளில் ஏற்றிக் கொண்டு கந்தர்வக்கோட்டை சென்று அங்கொரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இப்பெண்களைக் காவல்துறையினர் கைது செய்த இடத்திலிருந்து மேற்படி கால்ஸ் சாராய ஆலை ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 151-இன்கீழ் முன்தடுப்பு நடவடிக்கையாக இப்பெண்களை மண்டபத்தில் வைத்திருந்து மாலையில் விடுவித்துவிட்டார்கள்.

ஆனால், இவர்கள் மீது பிறகு வேறொரு நாளில் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 143, 341இன் கீழ் வழக்குப்பதிவு செய்து, அந்த வழக்கு ஆவணத்தை நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்கள். நீதிமன்றம் இப்பொழுது வரும் 14.10.2020 அன்று கந்தர்வக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்தப் பெண்கள் நேர்நிற்க வேண்டுமென்று அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

கந்தர்வக்கோட்டை மண்டபத்திலிருந்து இவர்களை விடுவிக்கும்போது காவல்துறையினர் யாரும் இவர்கள் மீது வழக்குப் போடப்பட்டிருப்பதாகவோ, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய தேவை இருக்கிறது என்பதாகவோ ஒரு சொல் கூட சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல், தமிழ்நாடு முழுக்க நடந்து கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்வுரிமைக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், சனநாயக உரிமைகளுக்காகவும் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றும் சனநாயக முறைப்படியிலான வெகுமக்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளும் இளையோரை – ஆண்களை, பெண்களை பழிவாங்குவதற்காகவும், அவர்களுக்கு துன்பம் தருவதன் மூலம் மற்றவர்களை அச்சுறுத்துவதற்காகவும் இந்த சட்டவிரோத சனநாயக விரோத நடவடிக்கைகளில் தமிழ்நாடு காவல்துறை இறங்கியிருக்கிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 151 என்பது, குற்றச்செயல் நடைபெறுவதற்கு முன்பாக மக்களைத் தடுத்து, காவலில் வைத்து விடுவித்துவிடும் வரம்பைக் கொண்டது. எனவே இப்பிரிவின் கீழ் 24 மணி நேரத்திற்கு மேல் ஒருவரை காவலில் வைக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு சட்டப்பிரிவைப் பயன்படுத்தி, பல ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைந்து துன்புறட்டும் என்ற நோக்கோடு தமிழ்நாடு காவல்துறை ஆண்களையும், பெண்களையும் அலைக்கழிப்பது பாசிச நடவடிக்கையாகும்!

தமிழ்நாடு காவல்துறையின் இந்தக் கமுக்கப் பாசிச நடவடிக்கைகளை கண்டறிவதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு சரியான ஆய்வுக்குழுவை அமைத்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை பெற்று, இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; அத்துடன், இதுபோன்ற வழக்குகள் அனைத்தையும் கைவிடுவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இனி, இவ்வாறான வழக்குகள் போடாமல் இருப்பதற்கு காவல்துறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 3

மோடி – எடப்பாடி அரசுகள் உழவர் பகை வேளாண் சட்டங்களைக் கைவிட வேண்டும்!

மோடி அரசு அண்மையில் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்கள் இந்திய நாட்டு உழவர்களை வேளாண் நிலங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்நிலங்களை பெருங் குழுமங்களி்டம் ஒப்படைக்கும் உள்நோக்கம் கொண்டவை. அடுத்து, நிலம், வேளாண்மை, உணவுப் பொருள் வணிகம் ஆகிய மூன்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாநில அதிகாரப் பட்டியலில் இருக்கின்றன. இவற்றிலுள்ள மாநில அரசு உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்துடன் மேற்படி மூன்று சட்டங்களையும் மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.

இந்த மூன்று சட்டங்களையும் எதிர்த்து இந்தியா முழுவதும் உழவர் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்த சட்டங்களை எதிர்த்து ஆளும் பா.ச.க. கூட்டணியில் நடுவண் அமைச்சர் பதவி வகித்த அகாலி தளம் அப்பதவியையும் துறந்துவிட்டு, மூன்று சட்டங்களையும் கைவிடக் கோரி போராடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் உழவர் அமைப்புகளும் கட்சிகளும் போராடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொண்டு, இந்த மூன்று சட்டங்களையும் ஆதரித்து பரப்புரை செய்து வருகிறார்.

இச்சட்டங்கள் வருவதற்கு முன்பே இந்திய அரசோடு பேசி, இச்சட்டங்களுக்கான உடன்பாட்டைத் தமிழ்நாடு முதல்வர் கொடுத்துவிட்டார் என்று நாம் ஊகிக்க இடமிருக்கிறது. இவ்வாறு நாம் கூறுவதற்குக் காரணம், மோடி அரசு இப்பொழுது நாடாளுமன்றத்தின் வழியாக நிறைவேற்றியுள்ள மூன்று சட்டங்களும் கொரோனா காலத்தில் கடந்த 2020 சூன் மாதம் குடியரசுத் தலைவர் மூலம் அவசரச் சட்டங்களாக அறிவிக்கப்பட்டன. ஆனால், அதற்கு முன்பே 2019 அக்டோபரில், இதேபோன்ற ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் இன்றியமையாப் பண்டம் குறித்த சட்டத்தை எடப்பாடி அரசு நிறைவேற்றியது.

இந்நிலையில், மோடி அரசின் இந்த மூன்று உழவர் பகைச் சட்டங்களைக் கைவிடப் போராடும் அதேவேளை, எடப்பாடி அரசின் மேற்படி சட்டத்தையும் கைவிடப் போராட வேண்டும். அதுமட்டுமின்றி, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மோடி அரசின் மூன்று சட்டங்களும் தமிழ்நாட்டில் செயல்படாமல் தடுப்பதற்கு, அவை குறித்து தமிழ்நாடு அரசு புதிய சட்டங்களை இயற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்து உழவர்களும், கட்சி – அமைப்புகளும் போராட வேண்டும்.

இந்த மூன்று சட்டங்களும் செயலுக்கு வந்துவிட்டால், நெல், கோதுமை போன்றவை அரசினால் நேரடிக் கொள்முதல் செய்யப்பட மாட்டாது. இதன் தொடர்ச்சியாக ஞாய விலைக்கடைகளும் மூடப்பட்டுவிடும் என்ற உண்மைகளைப் புரிந்து கொண்டு, அனைத்து மக்களும் இச்சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை ஒருங்கிணைந்து போராட வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 4

அண்ணா பல்கலையை இந்திய அரசிடம் கமுக்கமாக ஒப்படைக்கும் துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்க வேண்டும்!

சென்னை அண்ணா பொறியியல் பல்கலைக்கழகம் இந்திய நாட்டிலேயே மிகச்சிறந்த உயராய்வு கல்வி நிறுவனமாக புகழ் பெற்றுள்ளது. இது தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகம். இந்த அண்ணாப் பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அரசிடமிருந்து பறித்து, தன் வசப்படுத்திக் கொண்டு, மாணவர் சேர்க்கை, பேராசிரியர் மற்றும் அலுவலர் சேர்க்கை முதலியவற்றில் தமிழர்களைப் புறந்தள்ளிவிட்டு, இந்திக்காரர்களை சேர்த்துக் கொள்ளவும், இட ஒதுக்கீட்டை காலி செய்யவும் மோகன் பகவத் – மோடி அரசு முயன்று வருகிறது.

இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மூடி மறைக்க இந்திய உயராய்வு நிறுவனமாக (Institute of Eminence) அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்த்தப் போவதாகக் கூறிக் கொண்டு, அண்ணா பொறியியல் பல்கலைக்கழத்தை சென்னை கிண்டியிலுள்ள ஐ.ஐ.டி. போல மற்றுமொரு அக்கிரகாரமாக – இந்தி மண்டலமாக மாற்ற வேண்டுமென்பதே மோகன் பகவத் – மோடி அரசின் திட்டம்!

இந்த உண்மையைத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். ஆனால், உறுதியாக எதிர்க்காமல் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்றும், இந்திய அரசு கேட்கும் பணம் கொடுக்க வசதியில்லை என்றும் காரணங்களைக் கூறி, பல்கலைக்கழகத்தை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இதற்கிடையே, மேற்படி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா அண்ணா பல்கலைக்கழகத்தை இந்திய அரசிடம் ஒப்படைக்கத் தயார் என்றும், இந்திய அரசு இதற்காகக் கேட்கும் 1,570 கோடி ரூபாயை ஐந்து தவணைகளில் பல்கலைக்கழகமே செலுத்திவிடும் என்றும் உறுதிகூறி, நடுவண் கல்வி அமைச்சகத்துக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.

மாணவர்கள் செலுத்தும் தேர்வுக் கட்டணம், கல்விக் கட்டணம், இணைப்புக் கல்லூரிகள் கொடுக்கும் இணைப்புக் கட்டணம் ஆகியவற்றிலிருந்து ஆண்டுக்கு 314 கோடி ரூபாய் நடுவண் கல்வி அமைச்சகத்துக் செலுத்திவிடுவதாக அக்கடிதத்தில் உறுதி கூறியுள்ளார். துணை வேந்தர் சூரப்பாவின் இந்த நடவடிக்கை, தமிழ்நாடு அரசின் அதிகாரத்தைத் தனது காலுக்குக் கீழே போட்டு மிதிக்கும் இழிவான செயலாகும்!

இந்த சூரப்பா இப்படிப்பட்ட ஆரியத்துவாவாதி – அராஜகவாதி என்பதைத் தெரிந்து கொண்டுதான், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடைமுறை மரபுகளை மீறி, தமிழ்நாடு அரசோடு கலந்து பேசாமல் கர்நாடகத்தைச் சேர்ந்த இவரை துணை வேந்தராக அமர்த்தியுள்ளாரோ என்ற ஐயம் தமிழ்நாட்டு மக்களிடம் வலுவாக எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு, அண்ணா பல்கலைக்கழகத்தை இந்திய அரசு வசம் ஒப்படைக்க முடியாது என்பதை ஒளிவு மறைவின்றிக் கூற வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் சமூகநீதி, அரசுரிமை ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் எடப்பாடி அவர்கள் செயல்பட வேண்டும் என்றும், விதிகளை மீறி அராஜகமாக செயல்படும் சூரப்பாவை சட்ட வல்லுநர்களைக் கலந்து நடவடிக்கை எடுத்து, பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response