சுரேஷ் ரெய்னாவின் அடுத்த ஆட்டம் தொடங்கியது

இந்திய மட்டைப்பந்து வீரர் சுரேஷ் ரெய்னா இன்று (செப்டம்பர் 18, 2020) ஸ்ரீநகரில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறைத்தலைவர் தில்பாக் சிங்கை சந்தித்தார். உள்ளூர் காஷ்மீர் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை வளர்ப்பதற்கான மாநில காவல்துறையின் திட்டங்கள் குறித்து அவர் விவாதித்தார்.

உள்ளூர் காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் விளையாட்டுத் திறனை வளர்த்துக்கொள்ள ரெய்னா அவர்களுக்கு உதவ வேண்டுமென ஜம்மு காஷ்மீர் காவல்துறை விரும்புகிறது.

ரெய்னா, தானே முன்வந்து ஜம்மு காஷ்மீரின் சில மாநில அளவிலான மற்றும் உள்ளூர் மட்டைப்பந்து அணிகளைச் சந்தித்து அவர்களுக்குப் பயிற்சிகளை அளித்துள்ளார்.

இப்பகுதிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற குழந்தைகளின் கிரிக்கெட் திறன்களை மேம்படுத்துவதற்கும் மெருகூட்டுவதற்கும் ஒரு வாய்ப்பை விரும்பிய ரெய்னா, ஜம்மு-காஷ்மீரில் மட்டைப்பந்து விளையாட்டை மேம்படுத்த முன்வந்துள்ளார்.

அண்மையில் சர்வதேச மட்டைப்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா, இந்த யூனியன் பிரதெசத்தில், கிராமப்புறங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள திறமையான இளைஞர்கள் மற்றும் குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு பயிற்சியளிப்பதுதான் இந்த முயற்சிக்கு பின்னால் உள்ள தனது நோக்கம் என்று கூறினார்.

முன்னதாக, “ஜம்மு காஷ்மீர் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கிராமப்புறங்கள் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையான இளைஞர்கள் மற்றும் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதே எனது நோக்கம். சரியான திறமையான குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் திறமைகளை மேம்படுத்தவும், தேசிய அணிக்கு எதிர்கால கிரிக்கெட் அணிகளுக்காக ஒரு புதையலாக அவர்களை அளிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன்” என்று ரெய்னா ஜே & கே காவல் பணிப்பாளர் நாயகம் (DGP) தில்பாக் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறினார்.

“ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கிரிக்கெட் திறன்களை வளர்ப்பதில் நீங்கள் எங்களுடன் பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இங்கே எங்கள் இளைஞர்களுடன் உங்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் பிற அணிகளும் உங்கள் அடுத்த இன்னிங்ஸுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றன” என ஜம்மு காஷ்மீர் காவல்துறை ரெய்னாவை வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response