வெளி மாநிலத்தாருக்கு வீடு தரக்கூடாது – பெ.மணியரசன் அதிரடி

“வெளி மாநிலத்தவருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம்!” என்று பொன்மலையில் ஏழாம் நாளில் நிறைவடைந்த மறியல் போராட்டத்தில பெ.மணியரசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த விவரம்….

தமிழ்நாட்டில் குடியேறியுள்ள வெளி மாநிலத்தவருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம் என, திருச்சி – பொன்மலையில் நடைபெற்ற ஒரு வாரம் தொடர் மறியல் போராட்டத்தின் நிறைவு நாள் போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிவித்தார்.

“தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே!” முழக்கத்தோடு, திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 11.09.2020 அன்று தொடங்கி இன்று (18.09.2020) வரை ஒரு வாரம் தொடர்ந்து நடத்தி வந்த மறியல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம், இன்று (18.09.2020 – வெள்ளி) காலை எழுச்சியுடன் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மகளிர் ஆயம் தலைவர் ம.இலட்சுமி அம்மாள் தலைமை தாங்கினார். த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் ப.சிவவடிவேலு போராட்டப் பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் ம.பா.சின்னத்துரை, ம.தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர் புலவர் வேங்கூர் க.முருகேசன், பறம்புமலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கர்ணன், நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி இலால்குடி பொறுப்பாளர் சத்தியராஜ், மகளிர் ஆயம் துணைப் பொதுச்செயலாளர் செம்மலர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.

போராட்டத்தின் நிறைவாகப் பேசிய பெ.மணியரசன், “தமிழ்நாட்டிற்குள் தொடர்ந்து குடியேறி வரும் வெளி மாநிலத்தவர்க்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நாம் நடத்த வேண்டும். வெளி மாநிலத்தவர்கள் தங்குவதற்கு வீடு – கடைகள் வாடகைக்குக் கொடுக்கக் கூடாது. நம் கடைகளில் பொருட்கள் விற்கக் கூடாது. வெளி மாநிலத்தவர்களை நம் கடைகளில் – நிறுவனங்களில் பணியமர்த்தக் கூடாது. இவ்வாறு நாம் ஒத்துழையாமை இயக்கத்தைக் கடைபிடித்து அவர்கள் இங்கு சொகுசாக வாழ முடியாது என்ற நிலைமையை உருவாக்குவோம்.

மொழிவழித் தேசிய இன மாநிலமாக தமிழ்நாடு அமைக்கப்பட்ட நவம்பர் 1 – “தமிழ்நாடு நாள்” தொடங்கி, இந்த ஒத்துழையாமை இயக்கத்தை ஊர் தோறும் – தெரு தோறும் எழுச்சியுடன் நடத்த உறுதியேற்போம்.

பொன்மலையில் மட்டுமல்ல, தமிழ்நாடெங்கும் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு இதை உறுதி செய்ய தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம்” என்று பேசினார்.

போராட்டத்தில், த.தே.பே. பொருளாளர் அ.ஆனந்தன், திருச்சி மாநகரச் செயலாளர் வே.க.இலக்குவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் நா.வைகறை, க.அருணபாரதி, வழக்கறிஞர் கோ.மாரிமுத்து, க.விடுதலைச்சுடர், தை.செயபால், கோவை செயலாளர் விளவை இராசேந்திரன், திருப்பூர் செயலாளர் ஸ்டீபன்பாபு, பொதுக்குழு உறுப்பினர்கள் மூ.த.கவித்துவன், இரெ.கருணாநிதி, இனியன், வெள்ளம்மாள், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் இ.தனஞ்செயன், மன்னார்குடி வழக்கறிஞர் பாலசுந்தரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தில், பெண்களும், குழந்தைகளும் திரளாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Response