மோடியின் கோட்டையில் உதிர்ந்த முதல் செங்கல் – மத்திய அமைச்சர் பதவி விலகல்

மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் தொடர்பான அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரப் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 ஆகியவற்றிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 அவசரச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க அரசின் அவசரச் சட்டங்கள் காரணமாக விளைபொருட்களை விலை குறைவாக விவசாயிகள் விற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க அரசில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலிதளம் கட்சி, விவசாயிகளின் பிரச்னைகளுக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு காணாமல் அவசரச் சட்டங்களை நிறைவேற்ற பா.ஜ.க துடிப்பதாகக் குற்றம்சாட்டியது.

இந்நிலையில், மோடி அமைச்சரவையில் மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவி விலகியுள்ளார். தனது பதவிவிலகல் கடிதத்தை பிரதமர் மோடியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அளித்துள்ளார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் நேற்றைய விவாதத்தின்போது பேசிய ஹர்சிம்ரத் கவுர் பாதல், “கடந்த 50 ஆண்டுகளாக பஞ்சாபில் விவசாயத்துறை வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டங்களை இந்த மசோதாக்கள் மூலம் மத்திய அரசு களங்கப்படுத்தி விட்டது” எனக் கடுமையாகக் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

ஆயிரக்கணக்கான விவசாயிகள் வீதிகளில் இருக்கின்றனர். விவசாயிகளின் குறைகளுக்குத் தீர்வு காணாமல் சபைகளில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க நான் விரும்பவில்லை, அதனால் தான் நான் ராஜினாமா செய்தேன் என தெரிவித்துள்ளார்.

இதுவரை மோடி அரசின் மக்கள் விரோதச் சட்டங்களை எதிர்க்கட்சிகள் மட்டுமே எதிர்த்து வந்தன.முதன்முறை பாஜ்கவின் கூட்டணிக் கட்சியே கடுமையாக எதிர்த்ததோடு அமைச்சர் பதவியிலிருந்தும் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மோடியின் கோட்டையில் முதல் செங்கல் உருவப்பட்டுவிட்டது. இனி ஒவ்வொன்றாக உதிரும் கடைசியில் கோட்டை தரைமட்டமாகும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

Leave a Response