மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்ட ஒரு மணி நேரத்தில் அனைவரும் கைது

ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்ய வலியுறுத்தி மக்கள் பாதை அமைப்பினர் செப்டெம்பர் 14 ஆம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர்.
ஐந்தாவது நாளாக இன்றும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இன்று மாலை 4 மணியளவில், மக்கள் பாதை இயக்கத்தினரின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவைத் தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சாகும்வரை உண்ணாவிரதம் என்பதைத் தொடர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கையில், “மருத்துவக் கல்விக் கனவினைத் தகர்க்கும் பலிபீடமாக இருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் மத்திய அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் கல்நெஞ்சத்துடன் கண்டும் காணாமல் இருக்கின்றன.

13 உயிர்களைக் காவு வாங்கிய நீட் தேர்வைத் தமிழகத்தில் இரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மக்கள் பாதை இயக்கத்தினர் கடந்த 14 ஆம் தேதி முதல் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கையெழுத்து இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக இரத்து செய்யக் கோரி மக்கள் பாதை இயக்கத்தின் தலைமையகமான, சென்னை சின்மயா நகரில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வு இரத்து என்பது சட்டப் போராட்டம், நீதிமன்றப் போராட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக அடைய வேண்டிய இலக்கு ஆகும். ஆகவே, நீட் தேர்வை இரத்து செய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என மக்கள் பாதை மாநிலக்குழு உறுப்பினர் சந்திரமோகன் கூறி இருப்பதைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆரா அருணா, சந்திரமோகன், அரவிந்த், தமிழ்செல்வி, கீதா, காசிநாகதுரை – ஆறு பேரின் அளப்பரிய தியாக உணர்வைப் பாராட்டும் அதே வேளையில், உங்களது போராட்ட நோக்கத்தை நாட்டு மக்களுக்குத் தெரிவித்துவிட்டீர்கள், எனவே சாகும்வரை உண்ணாவிரதம் என்பதைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உங்களது உள்ள உறுதியைக் கொண்டு மக்கள் சக்தியை அணிதிரட்டும் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

நான்கு நடந்த போராட்டத்தைக் கண்டுகொள்ளாத காவல்துறை, மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்ட ஒரு மணி நேரத்தில் உண்ணாவிரதம் நிகழ்ந்த இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

Leave a Response