இலங்கையில் அரசியல் சட்டத் திருத்தத்தால் தமிழர்களுக்கு ஆபத்து – தடுத்து நிறுத்த பாமக கோரிக்கை

பாமகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் 06.09.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இணைய வழியில் நடைபெற்றது. பாமக நிறுவனர் இராமதாசு, இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்குக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்றார். பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

அவற்றில் ஒன்று,…..

இலங்கையில் ஈழத் தமிழர்கள் நான்காம் தர குடிமக்களாக அடிமைப்படுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்

இலங்கையில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை பொதுமக்கள் முன்னணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. அந்த நாட்டின் அதிபராக கோத்தபயா ராஜபக்ச, பிரதமராக மகிந்தா ராஜபக்ச, அமைச்சர்களாக ராஜபக்ச சகோதரர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

அதே நேரத்தில், இலங்கையில் முதன்மை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தும், பிளவுபட்டும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரசியலில் என்னெற்றும் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் வகையில் மாற்றியமைக்க ராஜபக்ச சகோதரர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் முதல் கட்டமாக, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தை புதிதாக உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட உள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் மாநில அரசுகள் ஒழிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அத்தகைய நிலை ஏற்பட்டால், தற்போது மூன்றாம்தர குடிமக்களாக வாழும் தமிழர்கள், இனி நான்காம் தர குடிமக்களாக வாழும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

எனவே, இந்த விசயத்தில் மத்திய அரசு தலையிட்டு, இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படாமல் இருப்பதையும், புதிய உரிமைகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Response