நள்ளிரவு முதல் தொடங்கியது பேருந்துப் போக்குவரத்து – முதல்நாளில் 4000 பேர் முன்பதிவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 8 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு கட்ட ஊரடங்கு உத்தரவின் போதும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஏற்கனவே தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சென்னை மண்டலம் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலம் ஆகிய 2 மண்டலங்களையும் தவிர்த்து பிற மண்டலங்களில் பேருந்துப் போக்குவரத்து ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. எனினும் அந்தந்த மண்டலங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

அதுவும், ஜூலை 1 ஆம் தேதி முதல் அனைத்து பேருந்துப் போக்குவரத்தும் இரத்து செய்யப்பட்டன.

அதன் பிறகு, செப்டெம்பர் 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மீண்டும் பேருந்துப் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில், இன்று(திங்கட்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் பேருந்துப் போக்குவரத்து தொடங்கும் என்று அரசு அறிவித்தது. அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை என நீண்டதூர இடங்களுக்கு 1,100 பேருந்துகளை இயக்கி வருகிறது.

மேலும் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருந்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து இன்று முதல் தொடங்குகிறது. இதில் சென்னையில் இருந்து மட்டும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 260 பேருந்துகள் உள்பட பிற அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளையும் சேர்த்து 800 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக கோயம்பேடு பணிமனையில், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. மேலும், என்ஜின்கள், பேட்டரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. பேருந்துகளின் இருக்கைகளும் சரி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு விவரம் குறித்து அரசு விரைவு பேருந்துப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது….

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். அதில், இன்று மட்டும் பயணம் செய்ய 4 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும். நள்ளிரவு 12 மணி முதல் பஸ்கள் இயக்கப்படும்.

பெரும்பாலும், கோயம்பேட்டில் இருந்து தலா 24 பயணிகளுடன் பேருந்துகள் புறப்படும். சமூக இடைவெளியைக் கடைபிடித்து பேருந்தில் இருக்கைகள் இருந்தால் நடுவழியில் பயணிகள் ஏற்றிக் கொள்ளப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுதும் பேருந்துப் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response