கொரோனா பெயரைச் சொல்லி சென்னையில் நடக்கும் கொள்ளை

கொள்ளையடிக்க தோதாகி கொண்டிருக்கும் கொரோனா!

தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் கட்டிட வேலை நடக்கிறது! ஐந்து தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்! அவ் வழியாக காரில் வருகிற வட்டாட்சியர் கண்ணில் இந்த காட்சிபடுகிறது!

உடனே கடமை தவறாத அதிகாரி, ‘’அடேய் உங்களுக்கு எவ்வளவு தைரியம்! முகக் கவசம் இல்லாமல் வேலை செய்றீங்க…,ஆளுக்கு ஆயிரம் ருபாய் பணம் கட்டுங்கள்’’ என கேட்டுள்ளார். மதிய சாப்பாட்டுக்கே காண்டிராக்டர் வந்து வாங்கித் தந்தால் தான் உண்டு என்ற நிலைமை! கூப்பிடு காண்டிராக்டரை.. என்று அழைத்து கறாராக பணம் வசூலித்துள்ளார்!

பாவம் எத்தனை நாட்கள் பட்டினிக்குப் பிறகு இந்த வேலை கிடைத்ததோ…! ஒரு நாள் சம்பளமே ரூ 5,00 தான்! இரண்டு நாள் கூலி சம்பளத்தில் பிடிக்கப்பட்டுவிடும்! காத்திருந்து கிடைத்த வேலைக்கு கைக்கு வருவதற்கு முன்பே சம்பளம் பறிபோய்விட்டது! இது தான் பல லட்சம் மக்கள் இன்று சந்தித்து வரும் கொடுமையாக உள்ளது!

கடும் உழைப்பு தேவைப்படும் இடத்தில் மூச்சு அதிகமாக இறைக்கும்! ஆகவே முகக் கவசம் அங்கு அவர்களுக்கு கெடுதலாகவே அமையும்.அதுவும் இப்படி வெட்ட வெளியில் ஆள் அறவமற்ற இடத்தில் வேலை செய்கிற இடத்திற்கு முகக் கவசம் தேவையே இல்லை! நெரிசலான இடத்தில் அதை நிர்பந்தித்தால் கூட புரிந்து கொள்ளலாம்!

இப்படித் தான் தன்னந்தனியாக யாருமற்ற சாலையில் வேர்க்க விறுவிறுக்க காலை நடைபயிற்சி மேற்கொண்டிருப்பவர்களையும் தேடிப் பிடித்து போலீசார் அபராதம் என பணம் பறிக்கின்றனர்!

வட சென்னையில் வசிக்கும் ஊடகத் தோழர் நா.பா.சேதுராமன் ஒரு தகவலை சொன்னார். ’’இங்கு வீடுவீடாக அத்துமீறி அதட்டி வயதானவர்களை கொரானா செக் பண்ணணும் அப்படின்னு அழைச்சிட்டுப் போறாங்க, அவங்களப் பார்த்தாலே ஜனங்க அஞ்சுகிறார்கள்! ஏன்னா அப்படி வம்படியாக அழைத்து செல்லப்பட்டவர்கள் அனைவருக்கும் கொரானா இருக்குது என்று சொல்லிடறாங்க..! ’’நாங்க நல்லாத் தான் இருக்கோம் விடுங்க…’’ என்றாலும் விடுவதில்லை! சும்மா வந்துட்டு போங்க அப்படின்னு சொல்லி மல்லுக் கட்டுறாங்க!’’ என்றார்.

இது தொடர்பாக நான்கைந்து நாட்களாக பல தரப்பிலும் விசாரித்தேன்! அவர் சொன்னது அப்பட்டமான உண்மை எனத் தெரிய வந்தது! ஒவ்வொரு கொரானா கேசுக்கும் கவர்மெண்ட் பதினைந்தாயிரமோ,என்னவோ ஒரு அமெளண்ட் ஒதுக்குது! அத ஆட்டையப் போடறதுக்கு படிப்பறிவில்லா ஏழை மக்களை மிரட்டி அழைத்துச் செல்கிறார்கள்…!

அடப் பாவிகளா…! ஒரு பேரழிவுக் காலத்தில் கூட உங்க மனசுல ஈரம் சுரக்காதா? இரக்கம் பிறக்காதா? இப்படி மத்தவங்க துன்பத்தில் குளிர்காய்பவர்கள் ஆட்சியிலும்,அதிகாரத்திலும் உட்கார்ந்திருக்கும் வரையில் கொரானாவே ஓய்வெடுக்க விரும்பினாலும் இவங்க விடமாட்டாங்க போல!

நாடெங்கும் மக்கள் வேலையிழந்து,வருமானமிழந்து முடங்கிக் கிடக்கும் நிலையில் இந்த மாதிரியான அக்கிரமக்காரர்களுக்கு கொரானா அதிர்ஷ்ட தேவதையாகத் தெரிகிறது..! மேலும்,மேலும் கொரானாவுக்கான ஊரடங்கை நீடிப்பது,கெடுபிடிகளை காட்டுவது இந்த மாதிரி அக்கிரமத்திற்கு உதவுவதாகவே அமையும்!

– சாவித்திரி கண்ணன்

Leave a Response