மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு – உயர்நீதிமன்றத்தீர்ப்பு உண்மையான வெற்றியா?

மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 85 விழுக்காடு இடங்களை அந்தந்த மாநில அரசுகள் நிரப்புகின்றன. இதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது.

மீதம் உள்ள 15 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் இடஒதுக்கீடு முறை இல்லாமல் பிற மாநில மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன.

இதனால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழகத்தில் வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 50 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரி அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் மற்றும் தமிழக அரசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் 34 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரி அந்த மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வகையில் மொத்தம் 13 வழக்குகள் தனித்தனியாகத் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை எல்லாம் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

இவ்வழக்கில், நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினார்கள். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது……

மத்திய தொகுப்புக்கு மாநிலங்கள் தரும் மருத்துவ இடங்களை மத்திய அரசு தானாக முன்வந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம்தான் உத்தரவு பிறப்பிக்கும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது.

கொள்கை முடிவு மட்டுமல்லாமல், 50 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு தெளிவான சட்ட வடிவத்தை கொண்டுவர வேண்டும். சமூக பொருளாதார அடிப்படையில் சரியான, சமமான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.

மாநிலங்கள் சமர்ப்பித்த இடங்களைப் பெற்றபோது அவற்றில் மத்திய கல்வி நிலையங்களில் அமல்படுத்த ஆட்சேபனை தெரிவிக்காத இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய கல்வி நிறுவனங்கள் அல்லாத பிற நிறுவனங்களில் ஆட்சேபிக்க முடியாது. அகில இந்திய மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற எந்த ஒரு தடையும் இல்லை.

இடஒதுக்கீட்டுக்கு சட்ட ரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ எந்த ஒரு தடையும் இல்லை. மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்றப்படக் கூடாது என எந்த விதிகளும் இல்லை. மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டு முறையை மறுக்க முடியாது. சமூக, பொருளாதார ரீதியில் அனைவருக்கும் வாய்ப்பு தரும் வகையில் சமமான, சரியான திட்டத்தைக் கொண்டு வரலாம்.

மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மாணவர்களின் குறைந்தபட்சத் தகுதியை மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும். எனவே இந்தக் கல்வி ஆண்டில் தற்போது மேற்கொண்டு வரும் நடைமுறையின்படி மாணவர்கள் சேர்க்கை நடத்தவேண்டும்.

அடுத்த கல்வி ஆண்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் விதமாக மத்திய சுகாதார பணிகள் இயக்குனர் ஜெனரல், மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள், இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் செயலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, 3 மாதங்களுக்குள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

இந்தத் தீர்ப்பு சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றி என்று பலரும் கருத்து சொல்லி வருகிறார்கள்.ஆனால் உண்மை வேறாக இருக்கிறது.

இதுகுறித்து மருத்துவர் எழிலன் நாகநாதன் கூறியிருப்பதாவது…..

உயர் நீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோர் இடஓதுக்கீடு தீர்ப்பு முழுமையாக படித்தேன்

கவனிக்க வேண்டியவை

1.இந்த வருடம் நடைமுறைப்படுத்த முடியாது அடுத்த வருடம் தான்.

(ஏன் இந்த வருடம் நடத்தினால் யார் தேய்ந்து போவார்கள்)

2.அடுத்த வருடம் நடைமுறை படுத்த மூன்று மாதங்களில் ஒரு கமிட்டி அமைக்க வேண்டுமாம்

(இன்னொரு கமிட்டியா ?)

3.அந்த கமிட்டியில்
மத்திய அரசு ..
மத்திய அரசின் அதிகாரிகள் மனிதவள துறை, சுகாதார துறை, இந்திய மருத்துவ கழகம்(mci-
(medical council of India கலைக்கப்பட்டது என்று உயர் நீதிமன்றத்திற்கு தெரியாதா ? இப்போது இந்திய மருத்துவ ஆனையம் )
பிறகு தமிழ் நாடு அரசு சுகாதார துறை செயலாளர் அமர வேண்டுமாம்.

இந்த கமிட்டி அமர்ந்து பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அளவுக்கோல் எப்படி இருக்க வேண்டும்
மத்திய அரசு கூறிய வரையறைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும்

(அது எப்படி முடியும் ?
அனைத்து இந்திய மருத்துவ இடங்களில்
10%ews upper caste plus 22%sc/st plus 27%obc – total = 59%
அப்போ 27% OBC இடஓதுக்கீடு கொடுத்தாலே … மத்திய அரசு வரையறை தாண்டுகிறது
அப்போது 50% பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கொடுத்தால் total =82%
82% அளவுக்கோல் கொடுக்குமா மத்திய அரசு ?

மத்திய அதிகார வர்க்கம் சரியில்லை என்பதால் தான் நீதிமன்றத்தில் வழக்கு.. மறுபடியும் அவர்களிடமே போய் ‌கமிட்டி அமைக்க சொல்கிறது உயர் நீதிமன்றம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response