தமிழகத் தேர்தலையொட்டி ஊடகங்களுக்குக் கடும் நெருக்கடி – நியூஸ் 18 ஆசிப்முகமது சொல்லும் அதிர்ச்சித்தகவல்

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் ஜூலை 17 இரவு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அந்த யூடியூப் சேனலில் உள்ள அனைத்து காணொலிகளும் நீக்கப்பட்டு அது முடக்கப்பட்டது. அதோடு அதன் அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கறுப்பர் கூட்டம் மீதான அரசின் நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இன்னொருபக்கம், நியூஸ் 18 தொலைக்காட்சியில் பணியாற்றும் குணசேகரன், ஆசிப்முகமது உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் வலியுறுத்தி வந்ததாகச் சொல்லப்பட்டது.

அதை உறுதிப்படுத்தும்விதமாக,நியூஸ் 18 இல் பணியாற்றிய பத்திரிகையாளர் ஆசிப் முகமது ஜூலை 22 அன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,கருப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. வேண்டுமென்றே என்னை தொடர்புபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். சகிப்புத்தன்மையின் அடையாளமான தமிழ்ச் சமூகத்தின் ஒரு அங்கத்தினன் என்பதில் எப்போதும் எனக்கு பெருமையே.

நிர்வாகத்தின் நிர்பந்தம் காரணமாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியிலிருந்து விலகியுள்ளேன். நடந்தவற்றை விரைவில் விரிவாக எழுதுகிறேன். ஆதரவளித்துவரும் அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

ஜூலை 23 ஆம் தேதி அவர் எழுதியுள்ள பதிவில்….

ஆம். நிர்பந்தம் காரணமாகதான் News18ல் இருந்து வெளியேற்றப்பட்டேன்.

இது News18 எனும் ஒரு சேனலோடு சுருக்கி பார்க்கவேண்டிய விசயமல்ல. 2014 முதலே இந்த நெருக்கடியை எல்லா ஊடகங்களும் சந்திக்கிறது. பாராளுமன்ற தேர்தலின்போது ஊடகங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதுபோல் தமிழக தேர்தலுக்கான நெருக்கடியை இப்போதே தருவதாக உணர்கிறேன்.

இது என்னோடு முடிந்துவிடும் பிரச்சினை அல்ல. எனக்கு பிறகும் சில முக்கியமானவர்களை ஊடகத்துறையில் இருந்து விரட்ட முழு முனைப்போடு செயல்படுகிறார்கள்.

எனக்கும் கறுப்பர் கூட்டத்திற்கும் தொடர்பு உள்ளது என கூறுபவர்கள் ஒரே ஒரு ஆதாரத்தை கொடுத்தால் நான் ஊடகத்தை விட்டும், சங்கத்தை விட்டும் சென்றுவிடுகிறேன் என சவால் விட்டும் இதுவரை ஒருவர்கூட அதற்கு ஆதாரம் தரவில்லை.

என் பக்கம்தான் நியாயம் உள்ளது என பாஜகவை சார்ந்த அனைவருக்கும் தெரியும். நாராயணன், ராம சுப்ரமணியன் ஆகிய இருவர்களை தவிர வேறு யாரும் எனக்கு ஆதரவு தரவில்லை. எச்.ராஜாவிடம் நேரடியாக போனில் பேசியும் அவர் என்ன நோக்கத்தில் என்னை குறித்து ட்வீட் செய்தார் என தெரியவில்லை.

சென்னை மாநகர காவல் ஆணையரிடம் என்மீது அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என புகார் கொடுத்த அதே தினம்தான் பாஜகவின் சார்பில் கறுப்பர் கூட்டம் மீது நடவடிக்கை எடுக்ககூறியும் புகார் கொடுத்தார்கள். அவர்கள் புகாரை ஏற்று அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்த காவல்துறை ஏன் என் சம்பந்தமாக எந்த நகர்வையும் எடுக்கவில்லை என்பது விளங்கவில்லை. குறைந்தபட்சம் மாரிதாஸை கூட அழைத்து விசாரிக்கவில்லை.

ஆனால் ஒன்று நண்பர்களே. வட இந்தியாவிற்கும் தென் இந்தியாவிற்கும் அரசியலில் வேறுபாடுகள் இருப்பதுபோல் தென்னிந்தியாவில் தமிழகத்திற்கு என ஒரு சிறப்பம்சம் உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மத சகிப்புத்தன்மையும், சகோதரத்துவமும் தலைத்தோங்குகிறது.

நம் மாநிலத்தில் மட்டும்தான் இஸ்லாமியனான ஒருவனுக்கு முஸ்லிம் என்ற வட்டத்தை தாண்டி அதிகமான பிறமத நண்பர்கள் உள்ளார்கள். அவர்களை நெருங்கிய நண்பர்களாகவும் ஏற்று கொண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட தமிழகத்தில் மத மோதல்களை விளைவிக்க முயல்பவர்களின் செயல்களை சாதாரணமாக கடந்து செல்வது பிற்காலத்தில் ஆபத்தானது.

எனக்கு ஆதரவாக நின்று குரல் கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. அதிலும் முஸ்லிம் அல்லாத நண்பர்கள் என்மீது நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுத்தது பெரு மகிழ்ச்சி. தொடர்ந்து போராடி இந்த ஊடகத்துறையில் குரலற்றவர்களின் குரலாய் நிச்சயம் பயணிப்பேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response