கதறியழுத பெண் ஆசிரியர் – காவல்துறை சித்திரவதை செய்ததாகப் புகார்

சாத்தான்குளம் நிகழ்வால் காவல்துறையினரின் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.அவற்றில் ஒன்று….

தூத்துக்குடியில் காவலர் அடித்ததில் தனது அண்ணன் மரணம் அடைந்ததாகவும், புகார் அளிக்க சென்ற என்னை ஆய்வாளர் கிருஷ்ணகுமார் காலால் வயிற்றில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தியதாகவும், இது குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியிடம் மனு கொடுத்துள்ளதாக பெண் ஆசிரியர் ஒருவர் இன்று தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களிடையே அழுது கொண்டே பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி அண்ணா நகர் 7 ஆம் தெருவை சேர்ந்த சாந்தி என்ற பெண் ஆசிரியர் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்:-

நான் தூத்துக்குடியில் எனது அப்பாவுடன் அண்ணாநகர் ஏழாம் தெருவில் வசித்து வருகிறேன். தனியார் பள்ளியில் ஹிந்தி, ஆங்கில ஆசிரியையாக கடந்த 10 வருடமாக பணியாற்றி வருகிறேன். எனது அண்ணன் வாசுதேவன், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தூத்துக்குடியில் கடந்த 12 வருடமாக பணியாற்றி வந்தார்.

அவருக்கும் அவர் மனைவி சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்திருந்தனர். 22 2 2020 அதிகாலை 4 மணிக்கு அவருடைய உயரதிகாரிகள் தமிழ்நாடு முதல்வர் வருகையிருப்பதால் அவசரகால மின்சார பழுதைப் பார்ப்பதற்கு வருமாறு அழைத்தார்கள். என் அண்ணன் உடனே தன்னுடைய மோட்டார் பைக்கில் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று விட்டார்.

காலையில் சுமார் 7.30 என் அக்காவின் மகள் பவித்ரா மற்றும் என் அண்ணன் மனைவியும் தொலைபேசி மூலம் என் அண்ணன் இறந்து விட்டதாகக் கூறினார்கள். நான் உடனே அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். அங்கு நின்ற போலீஸ் என் அண்ணன் வாகன விபத்தில் இறந்து விட்டதாகச் சொன்னார். என் அண்ணனின் மனைவியிடம் என் அண்ணன் வாகன விபத்தில் இறந்து விட்டதாக புகார் மனுவில் கையெழுத்து வாங்கியதாக சொன்னார்கள்.

அந்த புகார் மனுவில் யாரோ அடையாளம் தெரியாத வாகனம் என் அண்ணன் சென்ற வாகனத்தின் மீது மோதி என் அண்ணன் இறந்து விட்டதாக சொன்னார்கள். நான் அவர் இறந்த இடத்தை பார்க்க எஃப்.சி.ஐ குடோன் பக்கம் சென்றேன். அங்குள்ளவர்களிடம் விசாரித்தேன். அவர்கள் அங்கு அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்று சொன்னார்கள். என் அண்ணனை ரோந்து பணியில் முதல்-மந்திரி பாதுகாப்பில் இருந்த காவலர் அழகிய நம்பியார் அடித்து காயப்படுத்தியதாகச் சொன்னார்கள்.

முதல்வர் வருகையின் காரணமாக ஏகப்பட்ட காவலர்கள் அந்த ரோட்டில் நின்று கொண்டிருந்தார்கள். ஆகவே மோதிய வாகனம் மோதி விட்டுத் தப்பிக்க முடியாது. பொய்யாக புகார் மனுவை தயாரித்து என் அண்ணனின் மனைவியிடம் கையெழுத்து வாங்கி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்கள்.

நான் அதிர்ச்சியடைந்து காவல்துறை அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு உள் துறை அதிகாரிகளுக்கும் நீதி வேண்டும் என்று கேட்டு புகார் மனு அளித்து அனுப்பி உள்ளேன். அந்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையத்தில் விசாரணை இருக்கிறது என்று சொல்லி காவலர் ஒருவர் என்னை தொடர்புகொண்டு அழைத்தார்.
அதற்காக காலை ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 11 மணி அளவில் காவல் நிலையம் சென்றேன். அப்போது விசாரணை அதிகாரியான காவல் நிலைய ஆய்வாளர் வரவில்லை அரை மணி நேரம் கழித்து வந்தார். நான் அவரிடம் என் அண்ணன் மேற்படி போலீஸ் காவலர் அடித்துத்தான் மரணத்தை விளைவித்திருக்கிறார்கள். பொய்யாக எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு இருக்கிறது. ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டேன்.

அதற்கு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மிகவும் கோபப்பட்டு இந்த மனுக்களை வாபஸ் வாங்கும்படி வற்புறுத்தினார். நான் முடியாது என கூறினேன். உடனே அவர் தலைமுடியை பிடித்து இழுத்து உள்ளே அறைக்குள் கொண்டுபோய் தன் கைகளினால் முதுகில் பலமுறை ஓங்கிக் குத்தினார், அடித்தார், வலியால் அழும் பொழுது அவருடைய காலால் என் வயிற்றில் பல முறை எட்டி உதைத்தார், நான் கீழே விழுந்துவிட்டேன். கெட்ட வார்த்தைகள் பேசி பலமுறை அசிங்கமாக திட்டினார் என்னை அடித்தார். அதனால் எனக்கு உடல் உடம்பு காயம் ஏற்பட்டது.

பின்னர் என்னைக் கைதுசெய்து தூத்துக்குடி முதலாம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 முன்பு என்னை இரவு 8 மணி அளவில் ஆஜர் படுத்தினார். அதுவரை என்னை காவல் நிலையத்தில் வைத்து கொடுமைப் படுத்தினார்கள் எனக்கு குடிக்க தண்ணீர் சாப்பிட சாப்பாடு கூட தரவில்லை, நான் நீதியுடன் நீதிபதியிடம் காவல் நிலையத்தில் நடந்த அத்தனை சம்பவங்களையும் கூறினேன். நீதிபதி அவர்கள் அத்தனையையும் எழுதிக்கொண்டார். என் உடம்பில் உள்ள அனைத்து காயங்களையும் கூறினேன். என் உடம்பில் உள்ள காயங்களைப் பார்வையிட்டார். அதனை குறித்துக் கொண்டார். அதன் பின் என்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு இருந்த டாக்டர் என் உடம்பு உள்ள அத்தனை காயங்களையும் பார்வையிட்டு குறித்துக் கொண்டார். காயங்களுக்கான சிகிச்சையும் கொடுக்கப்பட்டது.

காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா இருந்தால் நிச்சயமாக என்னை இழுத்துப் போனது பதிவாகி இருக்கும். பெண் என்றும் பார்க்காமல் அடித்து உதைத்து அசிங்கப்படுத்தினார்கள், இதையே நான் மனுவாகவும் காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ளேன் எனக் கூறினார்.

Leave a Response