தமிழர்களை வஞ்சிக்கும் மோடிக்கு எதிராக புதுச்சேரியில் கருப்புக்குடை ஆர்ப்பாட்டம் –

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள புதுச்சேரிக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் தமிழர்களை வஞ்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து புதுச்சேரியில், நேற்று (25.06.2020) காலை கருப்புக்குடை ஏந்தி கண்டன முழக்கப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில், பல்வேறு தமிழ் அமைப்புகள் பங்கேற்றன.

கொரோனா பேரழிவு தமிழ்நாட்டில் மிக அதிகமாக உள்ள நிலையில், மோடி அரசு ஒதுக்கிய நிதியோ மிகக்குறைவு. புதுச்சேரிக்கு, அவ்வாறு குறைந்தபட்ச நிதி கூட ஒதுக்கப்படவில்லை. புதுச்சேரியை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட மிசோரம் மாநிலத்திற்கு, மிகக்குறைந்தளவு கொரோனா நோயாளிகளைக் கொண்டிருந்த நிலையிலும் கூட 30 கோடி ரூபாய் ஒதுக்கிய இந்திய அரசு, புதுச்சேரிக்கு ஒரு ரூபாய்க் கூட ஒதுக்காமல் முழுவதுமாகப் புறக்கணித்துள்ளது.

மேலும், புதுச்சேரியின் மின் விநியோகத்தைத் தனியாருக்கு வழங்கியது, காவிரி மேலாண்மை ஆணையத்தை நீராற்றல் துறையின் கீழ் கொண்டு சென்றது, தொழிலாளர் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியது என அடுக்கடுக்காக புதுச்சேரியின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி அரசோ, கொரோனா நோயாளிகளுக்குக் கபசுரக் குடிநீர் கூட வழங்குவதில்லை.

இவற்றையெல்லாம் கண்டித்துப் போராட வேண்டிய கட்சிகள், இதை அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் புதுச்சேரியை முழுவதுமாகப் புறக்கணித்து தமிழினத்தை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிராக கருப்புக்குடை ஏந்தி கண்டன முழக்கமிடும் போராட்டத்தை நடத்தியது.

புதுச்சேரி காந்தி வீதி அமுதசுரபி அருகில் நேற்று (25.06.2020) 10 மணியளவில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் இரா.வேல்சாமி தலைமை தாங்கினார். த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி, நாம் தமிழர் கட்சி புதுச்சேரி செயலாளர் முத்.அம்.சிவக்குமார், உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி செயலாளர் கோ.தமிழுலகன், புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், தமிழ்ப் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், நா.த.க. தொழிலாளர் நலச்சங்க செயலாளர் த.இரமேசு, மகளிர் பாசறை செயலாளர் திருமதி.கௌரி, புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் புதுவைத் தமிழ்நெஞ்சன், யாவரும் கேளிர் அறக்கட்டளை நிர்வாகி ஏ.கேசவன், புதுச்சேரி மாணவர் முன்னணி உதயசங்கர் உள்ளிட்ட திரளானோர் கருப்புக் குடையுடன் பங்கேற்றனர்.

போராட்டத்தில், இந்திய அரசு புதுச்சேரிக்கு உடனடியாக பேரிடர் நிதி ஒதுக்க வேண்டும், புதுச்சேரியின் அனைத்து குடும்ப அட்டைக்கும் பத்தாயிரம் ரூபாய் கொரோனா துயர் துடைப்பு நிதி வழங்க வேண்டும், கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தைக் கட்டாயமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

த.தே.பே. தே.சத்தியமூர்த்தி, மணி, பட்டாபிராமன், முருகவேல், விசய கணபதி, விசயரங்கம், சிவகுமார், அன்பழகன், தரணிவேல், சிவபாலன், மணி, மகளிர் ஆயம் த.சத்தியா, செல்வி, தமிழழகி, கு.இராதிகா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Leave a Response