தமிழக அரசுக்கு இயக்குநர் பா.இரஞ்சித் கடும் கண்டனம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும் காதலித்து 2015 ஆம் ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்தனர். இந்தத் திருமணத்திற்கு கவுசல்யாவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் சாலையில் பட்டப்பகலில் மனைவி கவுசல்யாவுடன் சென்ற சங்கர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்கிற கலைதமிழ்வாணன், மதன் என்கிற எம்.மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஸ்டீபன் ராஜுக்கு ஆயுள் தண்டனையும், மணிகன்டனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது. மேலும், கவுல்சயாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, உறவினர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்குகளில் இன்று (ஜூன் 22) வழங்கப்பட்ட தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மேலும், ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்கிற கலைதமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகிய 5 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை உறுதி செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனால், விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், ஸ்டீபன் ராஜூக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.

இந்தத் தீர்ப்புக்கு கெளசல்யா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியனவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இத்தீர்ப்பு குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் கூறியிருப்பதாவது….

இம்மாதிரியான வழக்குகளின் தீர்ப்பு சமூக தளத்தில் பல நல்லுதாரணங்களை உண்டாக்க வேண்டும் என்பதே அனைவரின் தேவை, எதிர்பார்பு. ஆனால் இந்த வழக்கில் பெற்ற தீர்ப்பு சமூக தளத்தில் உருவாக்கும் மனநிலையை யோசிக்கவே மனம் கவலை கொள்கிறது.

ஒரு புறம் மேலவளவு வழக்கை போல தண்டனை குற்றவாளிகளை தண்டனை காலத்திற்க்கு முன்கூட்டியே விடுதலை செய்கிறார்கள், இப்போது தண்டனை பெறாமலே ஆணவ கொலையை நிகழ்த்திய குற்றவாளிகளை விடுவிக்கிறார்கள். தமிழக அரசில் சமூக நீதி என்பதே கற்பனையா?

மிகவும் பதற்றத்தை உண்டாக்கிய உடுமலை சங்கரின் ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளை நிரபராதிகள் என்று விடுவித்த உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. வழக்கை திறன்பட நடத்த இயலாத தமிழக அரசுக்கு கடும் கண்டனங்கள்!!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response